Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலையை போட விடமாட்டோம்!; சிறைவாயிலில் சீமான் மீண்டும் ஆவேசம்

 

எட்டு வழிச்சாலைக்கு கல்லை வேண்டுமானால் நடலாம். ஆனால் ஒருபோதும் சாலையைப் போட விடமாட்டோம் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆவேசமாக கூறினார்.

 

 

சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே கூமாங்காடு கிராமத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை கடந்த 18ம் தேதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான் நேரில் சந்தித்து கருத்து கேட்டார்.

 

இதையறிந்த மல்லூர் காவல்துறையினர், ஏற்கனவே ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமினில் இருக்கும்போது இதுபோல் மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவரை கைது செய்தனர். அவருடன், அக்கட்சி நிர்வாகிகள் 9 பேரையும் கைது செய்தனர். அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்த வழக்கில் நேற்று மாலை அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. இதையடுத்து இன்று (ஜூலை 20, 2018) காலை சீமான் மற்றும் அவருடன் கைதான கட்சியினர் அனைவரும் விடுதலை ஆகி சிறையில் இருந்து வெளியே வந்தனர். சிறை வாயில் அருகே, சீமான் செய்தியாளர்களிடம் கூறியது:

 

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக மக்களை சந்தித்துப் பேசுபவர்களையோ, இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களையோ அச்சுறுத்தவே என்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்படும் விவசாயிகளை மிரட்டுவதற்காக இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கின்றனர்.

 

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கருத்து கேட்கின்றனர். அதேபோல் நாங்கள் ஏன் கருத்து கேட்கக்கூடாது? 90 சதவீதம் பேர் நிலத்தை கொடுத்துவிட்டார்கள் என முதல்வர் கூறும்போது, நாங்கள் மக்களை சந்தித்துப் பேசுவதில் என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது?

 

நான் மக்களை சந்திக்க முறையாக அனுமதி பெறவில்லை எனக்கூறித்தான், கைது செய்தனர். எனவே நான் தற்போது போலீசாரிடம் அனுமதி கோரப் போகிறேன். அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களை சந்தித்துப் பேசுவேன்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின், என்னை அங்குள்ள மக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. மதுரையில் தங்கியிருந்து கையெழுத்துப் போடுங்கள் என்றனர். இப்போது சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்து போடு என்கிறார்கள். எதற்கு இவ்வளவு அடக்குமுறை? என் உறவினர்கள் இறந்தால்கூட இழவுக்குப் போக முடியாது. முன்பு சிறையில் வைத்திருந்தனர். இப்போது விடுதலை செய்துவிட்டு திறந்தவெளி சிறையில் வைத்துள்ளனர்.

 

நீர்நிலைகளையும், மலைகளையும் அழிப்பதன் மூலம் வருங்கால சந்ததிகள் பாதிக்கப்படும். இதை அரசு புரிந்து கொள்ளவில்லை. சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல ஏற்கனவே சாலைகள் இருக்கின்றன. ரயில், விமானப்போக்குவரத்தும் உள்ளன. பிறகு எதற்கு எட்டு வழிச்சாலை?

 

வாகனப் பெருக்கம் அதிகரிப்பதால் எட்டு வழிச்சாலை போடுகிறேன் என்கிறார்கள். அப்படியானால் மக்கள்தொகை இப்போது 130 கோடியாகி விட்டது. இது இன்னும் அதிகரிக்கும். அவர்கள் சாப்பிட உணவு எங்கிருந்து உற்பத்தி செய்யப்படும்? விளை நிலங்களை அழித்துவிட்டால் எப்படி சோறு கிடைக்கும்? தொழிற்சாலையா அரிசி, பருப்பை உற்பத்தி செய்யும்?

 

எட்டு வழிச்சாலை போட அரசு முயற்சி செய்யும். ஆனால் ஒருபோதும் இந்த சாலையைப் போட முடியாது. சாலையைப் போடவும் நாங்கள் விடப்போறதில்லை. நீங்கள் கல்லை வேண்டுமானால் நடலாம். 25 வருடங்களுக்கு இவர்களே ஆட்சியில் இருக்கப் போவதாக நினைக்கின்றனர். அதெல்லாம் கிடையாது.

 

ராமநாதபுரத்தில் ஆட்டுத்தோல் வியாபாரம் செய்த செய்யாதுரை வீட்டில் இருந்து வருமானவரித்துறை இன்றைக்கு 150 கோடி ரூபாய் ரொக்கம், 150 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதுவும் ஒரே இடத்தில் இருந்து 36 கோடி ரூபாயை எடுத்துள்ளனர். ஒரே இடத்தில் இவ்வளவு பணம் என்றால், பல இடங்களில் இன்னும் எவ்வளவு பணம் இருக்கும்? ஒரு ஒப்பந்ததாரரிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது?

 

இதில் இருந்து எட்டு வழிச்சாலை ஏன் போடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடித்து குவித்து வைத்திருக்கின்றனர். செய்யாதுரை என்று பெயரை வைத்துக்கொண்டு நல்லா செய்யும் துரையாக இருந்துள்ளார்.

 

ரெய்டில் சிக்கிய பணம், நகை, சொத்துகள் எல்லாம் என்ன ஆனது என என்றாவது தெரிவிக்கப்பட்டு உள்ளதா? அந்த வழக்குகள் போலவே இதுவும் மாறிவிடும். இவை எல்லாமே மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள்தான். வேண்டும் என்றால் என் வீட்டிற்கு ரெய்டு வரட்டும்.

 

சிறுமிகள் பாலியல் குற்றத்தைத் தடுக்க வேண்டுமெனில் முதலில் சமூகம் திருந்த வேண்டும். ஒழுக்கநெறி என்பது கல்வித்துறையில் கொண்டு வரப்பட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.