Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”வீரபாண்டி ராஜா மீது நில அபகரிப்பு புகார்!” சேலத்தில் மூதாட்டி கதறல்!!

சேலத்தைச் சேர்ந்த மறைந்த
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி
ஆறுமுகத்தின் மீதான நில
அபகரிப்புப் புகார்கள்தான், அவருடடைய
அரசியல் வாழ்வுக்கே முடிவுரை எழுதியது.
2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக,
அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து,
அலைக்கழித்ததில் இறந்தே போனார்.
இந்நிலையில், வீரபாண்டி ஆறுமுகத்தின்
மகனும், சேலம் கிழக்கு மாவட்ட
திமுக பொறுப்பாளருமான
வீரபாண்டி ராஜா என்கிற
ராஜேந்திரன் மீதும் இப்போது
நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.

பாப்பாத்தி

சேலத்தை அடுத்த, உத்தமசோழபுரம் பில்லுக்கடை மேட்டைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி பாப்பாத்தி (65). இவருடைய கணவர், 1990ம் ஆண்டு தென்னை மரத்தில் இருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு சரவணன் (49), செந்தில்குமார் என்ற இரு மகன்களும், சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

 

”தங்கள் நிலத்தை அபகரித்துக் கொண்டதோடு, அடியாள்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கிறார்,” என்று வீரபாண்டி ராஜா மீது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 6.1.2019ம் தேதியன்று, ஒரு புகார் மனு அளித்திருக்கிறார், பாப்பாத்தி. வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது அவருக்கு உதவியாளராக இருந்த ஆத்துக்காடு சேகர், விஎஸ்ஏ கல்லூரி ஊழியர்கள் ஆர்.ராஜேந்திரன், பாதுகாவலர் ராமலிங்கம் ஆகியோரையும் புகார் மனுவில் சேர்த்திருக்கிறார்.

 

சேலம் சங்ககிரி பிரதான சாலையில் வீரபாண்டி ராஜாவுக்குச் சொந்தமான விஎஸ்ஏ பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி அருகில்தான் பாப்பாத்தி வீடும் உள்ளது. அவருடைய வீட்டை ஒட்டியுள்ள விவசாய நிலத்தை, முறைகேடான ஆவணங்கள் மூலம் பறித்துக் கொண்டதாக புகாரில் சொல்லி இருக்கிறார்.

சரவணன்

இந்தப் புகார் குறித்து, பாப்பாத்தியின் மூத்த மகன் சரவணன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.

 

”விஎஸ்ஏ கல்லூரி அருகே
எங்களுக்குச் சொந்தமாக
சர்வே எண் 121/2-ல் 2.97 ஏக்கர்
புஞ்சை நிலம் இருக்கிறது.
இந்த சொத்து, எங்கள் சித்தப்பா
ஜெயபால் குடும்பத்திற்கும் எங்களுக்கும்
இன்னும் பாகப்பிரிவினை செய்யப்படாமல்
கூட்டுப்பட்டாவாக உள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்திலும்
வழக்கு நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில்தான்,
எங்கள் சித்தப்பா ஜெயபால்,
அவருடைய மகன்கள் மற்றும்
கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பரமேஷ்வரி
ஆகியோரிடம் இருந்து வீரபாண்டி ராஜா,
முரண்பாடு கொண்ட இரண்டு ஆவணங்கள்
மூலம் மொத்த நிலத்தையும் தன்
பெயருக்கு கடந்த 2010ம் ஆண்டில்
கிரயம் செய்து கொண்டார்.

நிலத்தின் பாகம் கறார்
செய்யப்படாத நிலையில்,
அனைத்து நிலங்களையும் கிரயம்
செய்து விட்டதாகக்கூறி, எங்களை
இந்த நிலத்தில் குடியிருக்க விடாமல்
வீரபாண்டி ராஜா, அவருடைய தந்தையிடம்
உதவியாளராக இருந்த ஆத்துக்காடு சேகர்,
விஎஸ்ஏ கல்லூரி ஊழியர்கள் ராமலிங்கம்,
ஆர்.ராஜேந்திரன் ஆகியோர்
மிரட்டி வருகின்றனர்.

தொடர் கொலை மிரட்டல்
ஒருபுறம் இருக்க, வீரபாண்டி ராஜாவின்
அடியாள்கள், எங்கள் நிலத்தில்
நன்கு வளர்ந்திருந்த 16 தென்னை
மரங்களை 27.6.2017ம் தேதியன்று
அறுத்து எறிந்தனர். கடந்த 2.1.2019ம் தேதி,
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆள்கள்
எங்கள் நிலத்திற்குள் புகுந்து
75 ஆண்டுகள் வயதான ஒன்பது பனை
மரங்களையும் வெட்டி வீழ்த்திவிட்டனர்.
அவர்களைத் தடுத்தபோது, வீரபாண்டி ராஜா
கூறியதன்பேரில் மரங்களை அறுப்பதாகவும்,
தடுத்தால் காயம் படாமல்
அடித்துக் கொன்று தொங்க
விட்டுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து,
ஆள் வைத்து அடித்துக் கொன்று
தூக்கில் தொங்க விட்டுவிடுவதாக
ஆத்துகாடு சேகர், என் தாயாரை மிரட்டினார்.
நான் ஈரோட்டில் குடும்பத்துடன் வசிக்கிறேன்.
இங்கு என் அம்மாவும், தம்பியும்
தனித்தனியாக வசிக்கின்றனர். ஆகையால்
அம்மாவின் உயிருக்கு எப்போது
வேண்டுமானாலும் வீரபாண்டி ராஜா
மற்றும் அவருடைய ஆள்களால்
ஆபத்து நேரிடலாம் என்பதால்
உள்ளூர் காவல்துறை முதல்
முதல்வரின் தனிப்பிரிவு வரை
புகார் அளித்திருக்கிறோம்,”
என்றார் சரவணன்.

 

பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை விற்றது குறித்து சரவணனின் சித்தப்பா ஜெயபாலிடம் கேட்டோம்.

 

”சார்….உண்மையைச் சொல்லப்போனால் சரவணனின் டார்ச்சர் தாங்காமல்தான் வீரபாண்டி ராஜாவுக்கு நிலத்தை வித்தேன். அந்தக் காலத்துலலாம் கோர்ட்டு சொல்லியா சார் நிலத்தை பாகம் பிரிச்சாங்க? பொதுவில் உள்ள நிலத்தை, பேர் பாதியாக பிரித்துக் கொள்வது நடைமுறையில் இருக்கிறதுதான். அதனால நானே உத்தேசமாக என்னோட அனுபவத்துல இருந்த நிலத்தை வித்துட்டேன். சரவணனின் அப்பா சுப்ரமணி உசுரோட இருந்தபோது மது குடித்துவிட்டு டார்ச்சர் செய்தார். இப்போ அவரோட பையன் எங்க மேல ஏதாவது ஒரு புகாரை சொல்லி கோர்ட்டு, போலீசுனு அலைக்கழிச்சிட்டு இருக்காரு. சரவணன் ஒரு சைக்கோ மாதிரிங்க சார்,” என்றார்.

ஆத்துக்காடு சேகர்

புகாரில் முதல் எதிரியாகச் சொல்லப்பட்டவரான ஆத்துக்காடு சேகரிடம் கேட்டபோது, ”நான்லாம் விஎஸ்ஏ காலேஜ் பக்கமே போறதில்ல சார். ராஜா அண்ணன் கூட அந்தப்பக்கம் போயி ரெண்டு வருஷம் ஆச்சுங்க. அப்படி இருக்கும்போது யாருங்க அந்தம்மாவை மிரட்ட முடியும்? நான் மிரட்டினதா சொல்றவங்க அதுக்கான ஆதாரங்களைக் கொடுக்கட்டும்.

 

சரவணனோட சித்தப்பா ஜெயபாலிடம் இருந்து முறையான ஆவணங்களின் அடிப்படையில்தான் நிலத்தை கிரயம் செய்திருக்கோம். சரவணனின் நிலத்துல இருக்கற எந்த மரத்தையும் நாங்க வெட்டல. நானும் சரவணனும் ஒண்ணாதான் ஒரே பள்ளியில் படிச்சோம். அவன் நல்ல பையன்தான் சார். இப்போ ஏதோ கிறுக்குத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கான் சார்…எதுவாக இருந்தாலும் விசாரிச்சு உண்மைய எழுதுங்க சார்…,” என வேண்டுகோள் வைத்தார்.

 

”நிலத்தின் மீதான உரிமை பொதுவாக இருப்பதால், அதை நாங்கள் நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்கிறோம் என சரவணனும், அவருடைய அம்மாவும் நேரில் வந்து கைப்பட எழுதிக் கொடுத்ததால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்கிறார் இந்தப் புகாரை பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி.

 

இந்தப் புகார் குறித்து வீரபாண்டி ராஜாவிடம் பேசினோம்.

வீரபாண்டி ராஜா

”எல்லாமே லீகல் ஒப்பீனியன் பெற்ற பிறகுதான் கிரயம் செய்யப்பட்டிருக்கு. கல்லூரிக்கு இடம் வேண்டுமானால் நில உரிமையாளர்களிடம் பேசுகிறோம். அதற்குரிய விலையைக் கொடுக்கிறோம். இதில் நமக்கு என்ன இருக்கிறது? பாத்துக்கலாம் விடுங்க…,” என ரத்தினச்சுருக்கமாக முடித்துக்கொண்டார், வீரபாண்டி ராஜா.

 

இந்தப் புகார் குறித்து அறிந்த சேலம் திமுக புள்ளிகள், ‘எத்தனை முறை பட்டாலும் திருந்த மாட்டாங்கபோல’ என்று வீரபாண்டி ராஜாவை வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

 

நன்றி: நக்கீரன். (2019 பிப். 9-12)

 

– பேனாக்காரன்.