வங்கதேச அணியுடனான
ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரை,
2 – 1 கணக்கில் இந்திய அணி
வென்றது. இந்தியாவின்
தீபக் சஹார், ‘ஹாட்ரிக்’
விக்கெட்டுகளை வீழ்த்தி
வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன. இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றப்போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10, 2019) இரவு நடந்தது.
இந்திய அணியில், ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மனீஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹமதுல்லா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். லேசான பனிப்பொழிவு இருக்கும் என்பதால், எளிதில் விக்கெட் வீழ்த்திவிடலாம் எனக்கருதி இந்த முடிவை அவர் எடுத்திருந்தார்.
அதற்கேற்ப ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிகர் தவானும் (19 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
எனினும்,
ஸ்ரேயாஸ் அய்யரும்,
லோகேஷ் ராகுலும்
வங்கதேச வீரர்களின்
பந்துவீச்சை நாலாபுறமும்
சிதறடித்தனர். அபாரமாக
ஆடிய லோகேஷ் ராகுல்
சர்வதேச டி-20 கிரிக்கெட்
போட்டிகளில் 6வது
அரை சதம் அடித்து
அசத்தினார்.
அவர் 52 ரன்களில்
விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்றொரு முனையில்
வாணவேடிக்கை நிகழ்த்திய
ஸ்ரேயாஸ் அய்யர்,
சர்வதேச டி-20 அரங்கில்
தனது முதலாவது
அரை சதத்தைக் கடந்தார்.
சிக்சரும், பவுண்டரிகளுமாக
பறக்கவிட்ட அவர்,
33 பந்துகளில் 5 சிக்சர்,
3 பவுண்டரிகளுடன்
62 ரன்களைக் குவித்து
ஆட்டமிழந்தார்.
இந்த தொடரில், தொடக்கத்தில் இருந்தே தடுமாறி வந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், இந்த ஆட்டத்திலும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மனீஷ்பாண்டே (22 ரன்), ஷிவம் துபே (9 ரன்) அதிரடி காட்ட, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களைக் குவித்தது.
இதையடுத்து, 175 ரன்கள் இலக்குடன் ஆட்டத்தைத் தொடங்கியது வங்கதேசம். அந்த அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரத்திலேயே வீழ்த்தி விட்டாலும், முகமது நயீம், முகமது மிதுன் ஆகியோரின் இணை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருந்தது. அந்த இணை, 98 ரன்களைக் குவித்தது. நயீம், 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் தீபக் சஹார், ஷிவம் துபே ஆகியோரின் பந்து வீச்சு மட்டுமே எதிரணிக்கு நெருக்கடியாக அமைந்தது. தீபக் சஹார், 18வது ஓவரின் கடைசி பந்தில் சபியுல் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் கடைசி ஓவரை வீசிய அவர் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து முஸ்தாபிஜூர், அமினுல் இஸ்லாம் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.
இதன்மூலம் தொடர்ச்சியான
மூன்று பந்துகளில்
அடுத்தடுத்து மூன்று
விக்கெட்டுகளை வீழ்த்தி,
‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.
சர்வதேச டி-20 கிரிக்கெட்
போட்டிகளில் இந்திய வீரர்
ஒருவரின் முதல் ‘ஹாட்ரிக்’
சாதனை இது என்பது
குறிப்பிடத்தக்கது.
தீபக் சஹார்,
இந்த போட்டியில்
3.2 ஓவர்கள் பந்து வீசி
7 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து
6 விக்கெட்டுகளையும் அள்ளினார்.
சர்வதேச டி-20 அரங்கில்
இதுவே சிறந்த நிலையாக
உள்ளது.
மேலும் ஷிவம் துபே 3,
யுஸ்வேந்திர சஹால் 1
விக்கெட்டும் வீழ்த்தினர்.
வங்கதேச அணி
19.2 ஓவர்களில்
அனைத்து
விக்கெட்டுகளையும்
இழந்து 144 ரன்களில்
சுருண்டது.
அந்த அணியில்
நான்கு வீரர்கள்
ரன் ஏதுமின்றி
ஆட்டமிழந்ததும்,
தோல்விக்கு முக்கிய
காரணம்.
இதன்மூலம்
இந்திய அணி 30 ரன்கள்
வித்தியாசத்தில் வங்கதேச
அணியை இறுதி போட்டியில்
வென்றதோடு, டி-20
தொடரையும் 2-1
கணக்கில் வென்று
கோப்பையைக்
கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் பெற்றார்.