Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். ‘இலக்கியம் பேசுவோம்’ பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன்.

உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்… எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.

 

அதனால்தான் மகாகவி பாரதி,
‘ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே’
என அறைகூவல் விடுத்தான்.
காதலினால் கலவி உண்டாம்;
காதலினால் கவலைகள் போம்’ என்றான்.
உள்ளத்தால் கூடிய காதலின்
உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான்,
உடல் தீண்டல்.

 

உள்ளத்தால் இணைந்த பிறகு,
உடல்தீண்டல் நிகழ்கிறது.
அங்கே, ஈருடல் ஓருயிராகிறது.
தலைவனும், தலைவியும் கட்டி
அணைத்துக் கொண்டால் அங்கே
காற்றுகூட இடையறுத்துச்
செல்லக்கூடாதாம். அந்தளவுக்கு
தழுவிக்கொள்ளல் நெருக்கமாக
இருக்க வேண்டும் என்கிறான்
வள்ளுவன்.

 

அந்தக் காலத்தில்,
மகன்றில் என்ற ஒருவகை
நீர்வாழ் பறவையினம் இருந்திருக்கிறது.
பெண்களின் நடையை அன்னப்
பறவையுடன் ஒப்பிடுகிறோம்.
ஆனால் இன்று வரை அன்னத்தை
நாம் பார்த்ததே இல்லை என்பது
வேறு கதை. மகன்றில் பறவை
பற்றியும், இலக்கியங்களில் மட்டுமே
ஆங்காங்கே சொல்லப்பட்டு இருக்கிறது.
மகன்றிலும், அன்னமும் ஒன்றுதானா
அல்லது இரண்டும் வேறு வேறானதா
என்றும் உறுதியாக தெரியவில்லை.

 

மகன்றில் பறவைகளுக்குள்
எப்போதும் ஆழமான காதல் உண்டு.
ஆண், பெண் மகன்றில் தன்
இணையைவிட்டு ஒருபோதும்
பிரிவதில்லை. கலவி கொண்டாலும்
மணிக்கணக்கில் நீளும்.

 

மகன்றில் ஜோடி ஒன்று,
நீரில் புணர்ந்த படியே நீந்திச் சென்று
கொண்டிருந்தன. இடையில்,
நீண்ட தண்டுகளை உடைய
தாமரை போன்ற ஒரு பூ வந்துவிடுகிறது.
அந்தப் பூவை கடந்து செல்ல
வேண்டுமானால் சில நொடிகள்
மகன்றில் பறவைகள் தன்
இணையைப் பிரிந்து செல்ல வேண்டிய
இக்கட்டான நிலை ஏற்படுகிறது.
ஒரு பூவைக் கடக்கும் அந்த
சில நொடி பிரிவும்கூட,
மகன்றில் பறவைகளுக்கு
தன் இணையை பல ஆண்டுகள்
பிரிந்து இருப்பது போல தோன்றுமாம்.

பிரிவாற்றாமையால் அணிகள்
கழன்று ஓடும் அளவுக்கு
இடை மெலிந்து போகும்
தலைவியோ, தலைவனைப் பிரிந்து
வாழ்வதை விடவும் அக்கணமே
உயிர் துறப்பது எவ்வளவு மேல்
என பாங்கியரிடம்
புலம்பித்தள்ளுவதாகச் சொல்கிறது
குறுந்தொகை. மகன்றில் பறவைகள் போல,
மனம் கவர்ந்த தலைவனுடன்
கூடிக்களித்தலே பேரின்பமாக
கருதுகிறாள் தலைவி.

 

பிரிவாற்றாமையால் தலைவி நொந்து
போனதெல்லாம் சங்க இலக்கியங்களோடு
வழக்கொழிந்து போனதோ என்னவோ?
நிகழ்காலத்தில் காதலில்
தோல்வியுற்றாலோ,
காதலி பிரிந்து சென்றாலோ
தாடியுடன் சோகமே உருவாகிக்
கிடப்பதும், போதைக்கு அடிமையாவதும்,
உயிரை மாய்த்துக் கொள்வதும்
பெரும்பாலும் ஆண்களாகவே
இருக்கிறார்கள்.

 

ஆனால் எல்லா காலத்திலும்
பிரிவின் துயர் மிகக்கொடியதாகவே
இருந்து வருகிறது. நிறை காதல்
கொண்டோருக்கு பிரிவு என்பதே
மீள முடியாத பேரிடர்தான்.
இந்தப் பேரிடரில் இருந்து மீள
தலைவனுக்கு தலைவியோ,
தலைவிக்கு தலைவனோதான்
நிவாரணம் தர முடியுமே தவிர,
இப்போதைய அரசு செய்வதைப் போல
வீடு தேடி வந்தெல்லாம் மருத்துவம்
செய்ய முடியாது. ரேஷன் மூலம்
நிவாரணம் கொடுத்து
ஆற்றுப்படுத்திட இயலாது.

 

ஒரு பூ இடைமறித்ததால்
தலைவிக்கு ஏற்பட்ட சிறு பிரிவின்
பெரும் வலியைச் சொல்லும்
குறுந்தொகைப் பாடல் இதோ…

 

”பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடன்றிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே”

 

எனப் பாடுகிறார்,
சங்கப் புலவர் சிறைக்குடியாந்தையார்.
மகன்றில் பறவைகளின் உணர்ச்சிகளின்
வாயிலாக தலைவனைப் பிரிந்து
வாடும் தலைவியின் உள்ளத்து
வலியைப் பேசியிருக்கிறார்.

 

பிரிவின் துயரை கவிஞர் வாலி,
‘நிமிஷங்கள் ஒவ்வொன்றும்
வருஷங்கள் ஆகும் நீ என்னை
நீங்கிச் சென்றாலே’ (படம்: காதல் தேசம்)
என எழுதியிருப்பார். ‘தளபதி’ படத்தில்
இடம்பெற்ற சுந்தரி கண்ணால்
ஒரு சேதி என்ற பாடலின்
சரணத்தினூடே, ‘வாரங்களும்
மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்…’
என்றும், ‘நான் உனை நீங்க மாட்டேன்…
நீங்கினால் தூங்க மாட்டேன்…’ என்றும்
‘வாலி’ப கவிஞர் எழுதியிருப்பார்.
அக்கால திரைக்கவிஞர்கள் பலர்,
தங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது
சங்க இலக்கியங்களை எளிமையாக
ரசிகர்களுக்குக் குழைத்துக்
கொடுத்திருக்கிறார்கள்.

 

குறுந்தொகை பாடல் விளக்கம்:

 

உடலால் இன்பம்
துய்ப்பதற்காகவே ஆண், பெண்
என தனித்தனியே இரண்டு
உடல் கொண்டிருக்கிறோம்.
ஆனால், மனமும் உயிரும்
கலந்த காதல் என்பதால்,
ஈருடல் சேரும்போது ஓருடலாகிப்
போகிறோம் என்கிறாள் தலைவி.
தலைவனைப் பிரிந்து இருத்தலை
விடவும், உயிரை விட்டுவிடுவது
மேலானது என்கிறாள். அவன்
நினைவின் மிகுதியே, மறுபிறப்பிற்கும்
காரணமாகும் என்று நம்புகிறாள்
குறுந்தொகை பாடல் தலைவி.
மகன்றில் பறவை போல,
தன்னாலும் தலைவனின் பிரிவைத்
தாள முடியாது என்கிறாள்.

 

தலைவியின் காதல் விவகாரம் அவளுடைய பெற்றோருக்கு தெரிய வந்ததால், மகளை இற்செறித்தனர். அதனால் தலைவனைக் காண முடியாமல், பிரிவின் துயரம் அவளை துளைத்தெடுக்க, தன் தோழியிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.

 

பிரிவென்பதே பெருந்துயரம்தானே!

 

– செங்கழுநீர்