Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

இணைய உலகில் மிகப்பெரும் தேடியந்திரமாக உள்ள கூகுள், தனது ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக இதுவரை 42 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது. ஆட்சென்ஸ் அங்கீகாரம் பெற்ற மொழிகளில் வெளிவரும் இணையதளங்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் வழங்கி வந்தது.

அதேநேரம், உலகளவில் 10 கோடி பேருக்கும் மேலான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு இதுவரை கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 9, 2018ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதன்மூலமாக தமிழுக்கு புதிய பொருளாதார கதவுகள் திறந்துள்ளதாகக் கூறலாம். இனி உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஆட்சென்ஸின் அங்கீகாரம் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஹிந்தி, பெங்காலி ஆகிய இரண்டு மொழிகளுக்கு கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது தமிழ், மூன்றாவது மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. உலகளவில் 43வது மொழியாக அங்கீகரித்துள்ளது. எனினும், உலகளவில் அதிகமானோரால் பேசப்படும் தெலுங்கு மொழியை ஆட்சென்ஸ் கண்டுகொள்ளாததும் அம்மொழி வர்த்தகர்கள், இணைய உலகத்தினரிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் மொழியில் தகவல்களைக் கொண்ட இணைய தளங்கள், “வலைதளங்களாகவும், தங்களது உள்ளடக்கத்தால், மற்றவர்களை ஈர்க்கும்” என்பதும் கூகுள் நிறுவனத்தால் ஏற்கப்படாமல் இருந்தது. இதுவே, இதுநாள் வரை ஆட்சென்ஸ் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. அதனால்தான், கூகுள் மூலமான விளம்பரங்களைப் பெற இயலாத நிலை இருந்தது.

பெரும் அளவிலான தமிழர்களால் அணுகப்படும் எந்த துறை வலைத்தளமாக இருந்தாலும், அதில் கூகுள் விளம்பரங்கள் இடம்பெறாததால், அந்த விளம்பரங்கள் மூலம் பெற வாய்ப்புள்ள வருவாய் உரியவருக்குக் கிடைக்காமல் இருந்தது. தற்போது, கூகுள் ஆட்சென்ஸ் தமிழை ஏற்றுக் கொண்டுள்ளதால் மேற்கண்ட சிக்கல் முடிவுக்கு வருகிறது. இது, தமிழ் இணைய உலகினருக்கு ஆதாயமான அம்சமாக கருதப்படுகிறது.