தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்குகிறது. தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக முடித்து, முதல்கட்டமாக 23 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறார் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியும், முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.
திமுக, அதிமுக, நாதக, தவெக என வெளிப்பார்வைக்கு நான்கு முனைப் போட்டியெனக் கூறப்பட்டாலும், உண்மையில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆளுங்கட்சி அந்தஸ்து, அபரிமிதமான பணபலம், வலுவான கூட்டணி உள்ளிட்ட காரணிகளால் ஒட்டுமொத்த அளவில் திமுகவுக்கு சற்று சாதகமான சூழல் உள்ளது.

அதேநேரம், கொங்கு மண்டலத்தில் இந்த முறையும் ஆளும் திமுகவுக்கு இலைக்கட்சி சிம்மசொப்பனமாக இருக்கும் என்றே கள நிலவரம் கூறுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளிலும் இப்போதுவரை அதிமுகவின் கையே ஓங்கி இருப்பது நமது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய இரு தொகுதிகளை கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கி இருக்கிறது இலைக்கட்சி.
எஞ்சியுள்ள சேலம் தெற்கு, வீரபாண்டி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது.
தொடக்கத்தில் பாஜக தரப்பில் ஆத்தூர் அல்லது கெங்கவல்லி, சங்ககிரி தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் தரப்பட்டது. பாமக தரப்பிலும் சேலம் வடக்கு அல்லது மேற்கு, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகியவற்றில் ஏதாவது இரு தொகுதிகளைக் கேட்டு அடம் பிடித்தனர். ஆனால் பாஜகவுக்கு தண்ணீர் காட்டிய எடப்பாடி பழனிசாமி, பாமகவுக்கு மட்டும் வன்னியர்கள் ஆதிக்கம் உள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்குத் தொகுதிகளைத் தந்து புத்திசாலித்தனமாக காரியத்தை முடித்திருக்கிறார்.
தேர்தல் கள நிலவரம் குறித்து இலைக்கட்சி வட்டாரத்தில் பேசினோம்.
”சேலம் மேற்கில் இருமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற மாஜி அதிமுக மா.செ. ஜி.வெங்கடாசலம், இந்த முறை மேட்டூரில் களம் காண்பார் எனத் தெரிகிறது. வீரபாண்டியில் மாஜி எம்எல்ஏ மனோன்மணி, ஆத்தூரில் ‘சிட்டிங்’ ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லியில் ‘சிட்டிங்’ ஏ.நல்லதம்பி, சேலம் தெற்கில் வேம்படிதாளம் வினோத் அல்லது ‘சிட்டிங்’ பாலசுப்ரமணியம், ஓமலூரில் ‘சிட்டிங்’ எம்எல்ஏ மணி, ஏற்காட்டில் ‘இன்கம்டேக்ஸ்’ பழனிவேல், சங்ககிரியில் மாஜி எம்எல்ஏ வெற்றிவேல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சொந்த தொகுதியான இடைப்பாடியில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி களம் காண்கிறார்.
அதிமுக போட்டியிடும் 9 தொகுதிகளுமே அக்கட்சிக்கு சாதகமான தொகுதிகள்தான். கடந்த 2011 தேர்தல் போல சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் இரட்டை இலை வளைத்துப் போட்டுவிடும் திட்டத்துடன் அதிமுக வியூகம் வகுத்துள்ளது,” என்கிறார்கள் சீனியர் ர.ர.க்கள்.
திமுக கூடாரத்தில் விசாரித்தபோது, சற்று ஸ்ருதி குறைவாகப் பேசினார்கள் மூத்த நிர்வாகிகள்.
”மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம், கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை, லேப்டாப் ஆகிய திட்டங்கள் திமுக மீது மக்களிடம் பாசிட்டிவ் இமேஜை கொடுத்துள்ளது உண்மைதான். அதேநேரம், இளைஞர்கள் மத்தியில் கரை புரண்டு ஓடும் கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை நடமாட்டமும், அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் சமூகத்தில் ஆளுங்கட்சி மீது பேரச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
திருத்தி அமைக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தால் பெரிய பலன் இல்லை என்கிறார்கள் அரசு ஊழியர்கள். இதனால் திமுகவுக்கு எப்போதும் வலுவான ஆதரவளித்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகளில் இந்தமுறை பெரிய அளவில் சேதாரம் ஏற்படும்.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, சேலம் வடக்கில் சிட்டிங் அமைச்சர் ராஜேந்திரன் தொடர்ந்து இரண்டுமுறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். உட்கட்சியில் அவருடைய பிரித்தாளும் சூழ்ச்சியால் மாஜி மாநகர செயலாளர் ஜெயக்குமார், மாஜி ப.செ. சக்கரை சரவணன், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.டி.கலையமுதன், உமாராணி, கவுன்சிலர்கள் குணசேகரன், தெய்வலிங்கம், சங்கீதா நீதிவர்மன், குமரவேல், வசந்தா மயில்வேல் உள்ளிட்ட பெரும் படையே அமைச்சரை கவிழ்க்க கொக்கு போல காலம் நேரம் குறித்து வைத்துக் காத்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைச்சர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மேயர் ராமச்சந்திரனை அமைச்சர் கண்ணியக்குறைவாக நடத்தி வருவது மனதளவில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் நடந்த வேட்பாளர் நேர்காணலின்போது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல் முதல்வர் முன்னிலையில் தன் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்து விட்டார் மேயர். இதன்பிறகும் டென்ஷன் ஆன அமைச்சரோ, மேயரிடம் இனிமேல் கட்சியினர் யாரும் அன்னம் தண்ணீ புழங்கக்கூடாது என கறாராக உத்தரவு போட்டுவிட்டார். தேர்தல் பணிகளுக்குக் கூட அவரை அழைக்கக்கூடாது எனச் சொல்லிவிட்டார்.

கன்னங்குறிச்சி பேரூராட்சியில் முன்பு அமைச்சரின் படைத் தளபதியாக வலம் வந்த குபேந்திரனையும் ஓரங்கட்டிவிட்டார். இப்படி அமைச்சரால் ஒதுக்கி வைக்கப்பட்ட தளகர்த்தர்கள் அவருக்கு எதிரான படையைக் கட்டியுள்ளனர். இவர்களால் வடக்கு தொகுதியில் கணிசமாக உள்ள அரசு வன்னியர் சமூக வாக்குகள் திமுகவுக்கு பறிபோக வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அதிருப்தி, சிறுபான்மை வாக்குகள் சிதறுவது ஆகியவற்றால் அமைச்சர் ராஜேந்திரனுக்கு சேலம் வடக்கு இந்தமுறை வாழ்வு தருமா? என்பது கேள்விக்குறிதான்,” என்கிறார்கள் மூத்த உ.பி.க்கள்.
அதேநேரம், சேலம் வடக்கில் ராஜேந்திரனுக்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் திமுக ஜெயிக்க ஓரளவு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
சேலம் தெற்கில் (முன்பு சேலம் 1வது தொகுதி) 1977க்குப் பிறகு 1989 மற்றும் 1996 ஆகிய தேர்தல்களில் மட்டுமே திமுக ஜெயித்திருக்கிறது. கன்னடம், தெலுங்கு பேசும் செட்டியார்கள், பிள்ளை, முதலியார், பட்டியல் சமூகத்தினர், வன்னியர் என ‘காக்டெயில்’ தொகுதியாக இருப்பதால் பெரும்பாலும் அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தமுறை தவெக சார்பில் களமிறங்கும் பார்த்திபன், கணிசமான வாக்குகளைப் பிரித்தாலும், சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலாவது அதிமுக வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்பு உள்ளது.
வன்னியர்கள் ஆதிக்கம் செலுத்தும் சேலம் மேற்கில் அதிமுக, பாமக கூட்டணி எளிதில் கரையேறும் என நம்புகின்றனர். அமைச்சர் மீதான அதிருப்திதான் இதற்கும் காரணம்.
பொங்கல் பண்டிகையின்போது அமைச்சர் ராஜேந்திரன், தனது தொகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் எவர்சில்வர் பாத்திரம், சேலை, பேன்ட் துணி பரிசளித்தார். அமைச்சராக இருந்து கொண்டு அவருடைய தொகுதி மக்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கியதும்கூட சேலம் மேற்கு, சேலம் தெற்கில் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்றொரு மூத்த உடன்பிறப்பு நம்மிடம் பேசுகையில், ”ஓமலூர் தொகுதியில் அமைச்சரின் ‘ஈகோ’வால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மாஜி எம்எல்ஏ தமிழரசு, அண்மையில் அதிமுகவுக்குச் சென்று விட்டார். ஏற்கனவே ஓமலூரில் வலிமையாக உள்ள அதிமுகவுக்கு தமிழரசுவின் வருகை புது தெம்பைக் கொடுத்துள்ளது.
அந்த தொகுதியில் அமைச்சரின் நிழலாக வலம் வரும் ஓமலூர் கிழக்கு ஒ.செ.,வான ஓ.எம்.ரமேஷ், தனக்குதான் சீட் தருவார்கள் என தொகுதி முழுக்க தம்பட்டம் அடித்து வருகிறார். அமைச்சருக்கு கார்களை வாங்கிக் கொடுத்து அவருக்கு நெருக்கமாகி விட்ட ஓ.எம்.ரமேஷ், ஒட்டுமொத்த கேபிள் தொழிலையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால் அவர் மீது கட்சிக்குள்ளும், தொழில் ரீதியாகவும் கடும் அதிருப்தி நிலவுகிறது. ஒருவேளை, ஓ.எம்.ரமேஷூக்கு சீட் கொடுத்தால் ஓமலூர் தொகுதியில் இந்தமுறையும் சூரியன் உதிக்காது என்கிறார்கள்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஓமலூரில் திமுக வெற்றி பெற்றதில்லை. திமுகவில் ஓட்டுநர் அணியைச் சேர்ந்த கருப்பூர் செல்லத்துரை, தளபதி நற்பணி மன்றம் மகேந்திரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளித்தால் களத்தில் போட்டி கடுமையாக இருக்கும். இவர்கள் மீது யாருக்கும் வெறுப்பு இல்லை; கரன்சி பாசனத்திற்கும் அஞ்சமாட்டார்கள்,” என்கிறார்கள்.
சேலம் மத்திய மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு தொகுதிகளின் நிலவரம் இப்படி என்றால், சேலம் மேற்கு மாவட்ட திமுக நிலவரம் இதைவிட மட்டமான நிலையில் இருப்பதாக புலம்புகிறார்கள் கழகக் கண்மணிகள்.
”சேலம் மேற்கு மாவட்ட திமுக மா.செ.வான டி.எம்.செல்வகணபதி கட்டுப்பாட்டில் உள்ள இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய தொகுதிகளில் கழகம் பெருமளவு கரைந்துவிட்டது. மறைந்த வீரபாண்டியார் ஆதரவு நிர்வாகிகளை திட்டமிட்டு ஓரங்கட்டினார் டி.எம்.எஸ். இவர் மீதான அதிருப்தியார் ஜலகண்டாபுரம் காசி, அந்தியூருக்கு தேர்தல் வேலை பார்க்கச் சென்றுவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான இடைப்பாடியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு தாவிவிட்டனர். அந்த தொகுதிக்கு உட்பட்ட ‘வளர் அன் கோ’ சுப்ரமணி, மாஜி இளைஞரணி அருணாச்சலம், கருணாநிதி, நங்கவள்ளி ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செல்வகணபதியால் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். இவரின் அலட்சியத்தால் கம்யூ., இயக்கத்தைச் சேர்ந்த ரவி, திமுகவில் சேராமல் அதிமுகவுக்குப் போய்விட்டார்.
கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறையும் அவர் அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார். நங்கவள்ளி ரவிச்சந்திரன், தாரமங்கலம் அம்மாசி ஆகியோரை ஒதுக்கி வைத்திருப்பதும் இடைப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். சொல்லப்போனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் கழகம் சார்பில் போட்டியிட வலுவான ஆள்களே இல்லை.

மேட்டூரில் மாஜி எம்எல்ஏ கோபால், அப்துல்சலாம், கொளத்தூர் தவசி ராஜா, பாபு, கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட சீனிவாசபெருமாள் உள்பட பல முக்கிய நிர்வாகிகளையும் டிஎம்எஸ் கட்டம் கட்டிவிட்டார். சீனிவாசபெருமாளின் தோல்விக்கு மா.செ.வும் ஒரு காரணம் என்ற பேச்சு இப்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. பந்தல் வன்னியர் பிரிவைச் சார்ந்த டிஎம்எஸ், அரசு வன்னியர் பிரிவைச் சார்ந்த கட்சி நிர்வாகிகளை திட்டமிட்டு ஒதுக்கி வைக்கிறார். கொளத்தூர் ஒ.செ. மிதுன்சக்ரவர்த்தி என்பவரை முன்னிலைப்படுத்துகிறார். மிதுன், மேட்டூர் காசி விஸ்வநாதன், நங்கவள்ளி சின்னு ஆகிய மூவர்தான் இப்போதைக்கு டிஎம்எஸ்ஸின் குட்புக்கில் இருக்கிறார்கள். இவர்களில் யாருக்கு சீட் கொடுத்தாலும் தேறுவது கடினம்தான்.
ஒருவேளை, மேட்டூரில் மாஜி எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் நிறுத்தப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. அவருக்கும், டிஎம்எஸ் மற்றும் அமைச்சர் ராஜேந்திரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். அதனால் பார்த்திபன் தனது பழைய பங்காளிகளை வைத்து தேர்தல் வேலைகளைச் செய்தால் தப்பித்துக் கொள்வார். இல்லாவிட்டால் அவரையும் டிஎம்எஸ், அமைச்சர் ராஜேந்திரன் கூட்டணி திட்டமிட்டு காலி செய்துவிடுவார்கள்,” என்று பகீர் கிளப்புகிறார்கள் மூத்த உ.பி.க்கள்.
”எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி எது? கெட்ட கொள்ளி எது?” என்பது போல் சேலம் மத்திய மாவட்டம், சேலம் மேற்கு மாவட்டம் மட்டுமின்றி சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயளாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி., மீதும் மிகக்கடுமையான அதிருப்தி நிலவுவதாகச் சொல்கிறார்கள் உ.பி.க்கள். ஒ.செ.க்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு ரேஷன் பணியாளர், அங்கன்வாடி பணியாளர், விஏஓ உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பரிந்துரைக்கும்படி கேட்டபோது, எஸ்ஆர்எஸ் எல்லாருக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு, அவர் மட்டும் கல்லா கட்டி விட்டாராம். அதுவும் அதிமுக, பாமகவைச் சேர்ந்தவர்களுக்கு எல்லாம் ரேஷன் பணி ஒதுக்கிய விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையானது.

தொகுதி முழுக்க கட்சிகளின் சின்னம் வரைய ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்தாராம் மா.செ., இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் மூன்று தொழிலாளர்கள் வேண்டும் என்றும், சின்னம் வரைய 40 ரூபாயும், பெயர் எழுத 120 ரூபாயும், கொடி வரைய 40 ரூபாயும் கூலி வாங்குகின்றனர். இந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1000 ரூபாய் கொடுத்தால் எப்படி சமாளிக்க முடியும் என நிர்வாகிகள் புலம்புகின்றனர். ஏற்காட்டில் பங்களா, நிலபுலன்கள் என மஞ்சள் குளிப்பதாக எஸ்ஆர்எஸ் பற்றி கிழக்கு மாவட்ட கழகத்தில் பொருமல் தூக்கலாகவே இருக்கிறது.
கிழக்கு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. மா.செ. மீதான அதிருப்தி வரும் தேர்தலில் அப்பட்டமாக எதிரொலிக்கும் என சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கிறார்கள் உ.பி.க்கள்.
இதுபற்றி திமுக மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ”தமிழ்நாட்டிலேயே சென்னை நீங்கலாக அதிக தொகுதிகள் கொண்டது சேலம் மாவட்டம். திமுகவில் உள்ள மூன்று மாவட்டச் செயலாளர்கள் மீதும் உள்கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகிறது. இவர்களை வைத்துக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்தால் ஒரு தொகுதியில் கூட கரையேற முடியாது.
அதனால், இவர்களை நீக்கி விட்டு, மூத்த நிர்வாகிகளைக் கொண்ட பொறுப்புக் குழுக்களை நியமித்து, தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும். அவ்வாறு பொறுப்புக் குழு நியமித்தால்தான் சேலம் மாவட்டத்தில் திமுகவுக்கு கணிசமான வெற்றி கிடைக்கும். மேலும், மா.செ.க்களால் ஓரங்கட்டப்பட்டவர்களை கட்சிப்பணிக்கு உடனே திரும்பும்படி மு.க.ஸ்டாலின் பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும்,” என்கிறார்கள்.
தேர்தல் பணிகளில் ‘டபுள் பிஹெச்.டி.,’ முடித்திருக்கும் திமுக, சேலம் மாவட்டத்தில் நிலவும் கோஷ்டி அரசியலை எப்படி கையாளப் போகிறது என்பதுதான் கட்சியை நேசிக்கும் உடன்பிறப்புகளின் பெரும் கவலையாக இருக்கிறது.
- பேனாக்காரன்
