Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தயாநிதி மடியிலேயே கை வைத்த துரைமுருகன்!; திமுக பொதுக்குழுவில் சுவாரஸ்யம்!! #DMK #MKStalin

 

திமுக பொருளாளராக பதவியேற்ற துரைமுருகன், கட்சிக்காக ஓடியாடி நிதி திரட்ட வேண்டும் என்று தயாநிதி மாறன் யோசனைகூற, அதே அம்பை தயாநிதி மீதே ஏவிய துரைமுருகனால் பொதுக்குழுவில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

 

சென்னை அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக  தலைமை நிலைய செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

 

முன்னாள் மத்திய அமைச்சரும், சன் குழும இயக்குநர்களுள் ஒருவருமான தயாநிதி மாறன் பேசுகையில், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோருக்கு வாழ்த்துச் சொன்னார். பிறகு, பொருளாளர் பதவியேற்றுள்ள துரைமுருகன், மு.க.ஸ்டாலின்போல ஓடியாடி கட்சிக்கு நிதி குவிக்க வேண்டும் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.

இதையடுத்து ஏற்புரையாற்றிய துரைமுருகன், அவர் திமுகவுக்குள் வந்தது முதல் அக்கட்சித் தலைவர் கருணாநிதிக்கும் தனக்குமான உறவு, கட்சியில் தனக்கான முக்கியத்துவம், ஸ்டாலினுடனான உறவுகள் குறித்தெல்லாம் பகிர்ந்து கொண்டார்.

 

”இதுநாள் வரை தம்பி என்று அழைத்து வந்த தளபதி மு.க.ஸ்டாலினை இனி தலைவரே என அழைப்பேன். உங்களை தலைவர் என்று அழைக்க இத்தனை நாள் வாழ்ந்தேனே அது போதும். முதன்முதலில் உங்கள் வீட்டிற்கு வந்தபோது நீங்கள் அரைக்கால் சட்டை அணிந்திருந்தீர்கள். குட்டிப்பையன். இன்றைக்கு தலைக்கு மேல் வளர்ந்து தலைவனாகி விட்டீர்கள் என்பதில் உள்ளார்ந்த மகிழ்ச்சி.

 

திமுக பொருளாளர் பதவி என்பது சாதாரணமானது அல்ல. இது எம்ஜிஆர் வகித்த பதவி. தலைவர் கலைஞர் வகித்த பதவி. ஏன்…. தளபதி ஸ்டாலின் வகித்த பதவி. இந்த பதவியில் இருக்க எனக்குக் தகுதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு பொருளாளர் பதவி அளித்து உயர்த்தியுள்ளீர்கள். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வேன். என் தலைவர் படுத்திருக்கிற திசை நோக்கி இந்த பதவியை ஏற்கிறேன்,” என துரைமுருகன் கொஞ்சம் செண்டிமெண்ட்டாக கசிந்துருகினார்.

 

இதன் பின்னர் அவருக்கே உரிய நகைச்சுவையோடு பேசத்தொடங்கினார்.

 

”திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரும் இயக்கம். கலைஞரோடு நான் இருந்தவன். அவர் இந்தப் பொறுப்பை ஏற்கும்போது ரெட் கார்ப்பெட்டில் நடந்து வரவில்லை. கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்புகள் இருந்தன. கலைஞர் சிலுவை சுமந்து வந்து பொறுப்பேற்றார்.

 

ஆனால் ஸ்டாலின், சிறு சலசலப்பும் இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்திருக்கிறார். அந்தக்காலக்கட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்தக் காலக்கட்டத்தையும் நினைத்துப் பார்க்கிறேன். நூற்றாண்டு இயக்கத்தை வழிநடத்தப்போகிற அடுத்தக்கட்டம் ஸ்டாலினிடம் வந்துள்ளது,” என்றும் துரைமுருகன் பேசினார்.

மேலும் அவர், ”இங்கே தயாநிதி மாறன் பேசுகையில் ஏதோ பொருளாளர் என்றால் பணம் புரளும் இடம் என்பதுபோல் பேசினார். இது நோட்டு அச்சடிக்கிற பதவி இல்லை. நிதி வசூல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த பொதுக்குழுவில் பெரும்பாலானோரிடம் அதிக வசதி கிடையாது.

 

அதிக பொருள் உள்ளவர்கள் அள்ளிக்கொடுங்கள். இல்லாதவர்கள் ஆதரவைக் கொடுங்கள். இங்கே அதிக நிதி வைத்துள்ளவர் நீங்கள் (தயாநிதி பார்த்து) ஒருவர்தான். எனவே கட்சிக்கு அதிக நிதி கொடுக்குமாறு மடியேந்தி கேட்கிறேன்,” என்ற துரைமுருகன் போடியத்தை விட்டு சற்று விலகி நின்று மடியேந்துவதுபோல சைகை செய்தார்.

 

அதுவரை மேடையில் சற்றே இறுக்கமாக காணப்பட்ட மு.க.ஸ்டாலின் தன்னை மறந்து சிரித்தார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த தயாநிதி மாறன் குலுங்கி குலுங்கி சிரித்தார். துரைமுருகன் பேச்சைக் கேட்டு, அவருடைய முகம் சிவந்து போகும் அளவுக்கு சிரித்தார். பக்கத்தில் அமர்ந்து இருந்த ஆ.ராஜா, தயாநிதி மாறனை மேலும் உசுப்பிவிட மேலும் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதனால் பொதுக்குழுவே சில நிமிடங்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தது.