Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 11400 கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் பாஜக மேலிடத்தின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அய்யத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது.

யார் இந்த நீரவ் மோடி?:

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நீரவ் மோடி (46). ‘ஃபயர் ஸ்டார் டைமண்ட்’ என்ற பெயரில் கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை ஆபரணங்களாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருவதுதான் அவருடைய தொழில்.

இந்தியாவில் டெல்லி, மும்பை, சூரத் ஆகிய இடங்களில் அவருக்கு பங்களாக்கள், நகைக்கடைகள் உள்ளன. தவிர, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய் தீவுகள், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும் கடைகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களிலேயே நேரத்தை செலவிடுபவர் நீரவ் மோடி.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இவருடைய வைர ஆபரணங்களுக்கு விளம்பர தூதர். மேலும், விஜய் மல்லையாவைப் போலவே இவருக்கும் பாலிவுட் நடிகைகள் வட்டாரத்தில் ஏக செல்வாக்கு. அரசியல் புள்ளிகள், வங்கி அதிகாரிகளின் மேல்மட்ட அளவில் எப்போதும் தொடர்பில் இருப்பவர்.

மோசடி செய்தது எப்படி?:

பஞ்சாப் நேஷனல் வங்கி உத்தரவாதம் அளித்ததாக, அந்த வங்கியின் ஊழியர்கள் உதவியுடன் போலி ஆவணங்களை தயாரித்து, தாங்கள் இறக்குமதி செய்யும் பொருள்களுக்காக குறுகிய கால கடனை சில இந்திய வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் வாங்கி மோசடி செய்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த ஆண்டு (2017) பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடான கடன் வாங்கியோர் குறித்த புகாரில் நீரவ் மோடியின் பெயரும் இருந்தது. ஆனால் அப்போது அவர் மீது யாருமே சந்தேகம் கொள்ளவில்லை. இதுதான் வாய்ப்பு என்று, இரண்டு மாதங்களுக்கு முன்பும்கூட போதிய பிணை ஆவணங்கள் இல்லாமலேயே மீண்டும் கணிசமான கோடிகளை கடனாக பெற்றுள்ளார்.

கடன் பெற்றவர்களின் விவரங்களை குறித்து ஆய்வு செய்தபோதுதான் நீரவ் மோடி, போலி ஆவணங்கள் மூலம் ரூ.11360 கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதை பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும் என்று அவ்வங்கி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம் புகாரும் அளித்துள்ளது.

இந்த கூத்துகள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில அய்யங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கச் சென்றபோது, அவருடன் இந்திய தொழில் அதிபர்களின் குழுவில் நீரவ் மோடியும் இடம் பெற்றிருந்தார். பிரதமருடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதை மையப்படுத்திதான் ராகுல் காந்தி வினாக்களை எழுப்பியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீரவ் மோடி என்ன செய்து கொண்டிருந்தார்?

பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி நடந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு?

ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் மீறி எப்படி இந்த முறைகேடு நடந்தது?

பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்தது குறித்து எந்த தணிக்கையாளர் அல்லது கண்காணிப்பு அதிகாரிக்கும் தெரியாமல் போனது என்றால் யாரோ அதிகாரம் படைத்தவர் நீரவ் மோடியை பாதுகாக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? அது யார்?

இந்திய வங்கித் துறையின் ஆபத்துக் கால மேலாண்மை வழிமுறைகளும், மோசடிகளை கண்டறியும் வழிமுறைகளும் எப்படி வேலை செய்யாமல் போயின? என்று ராகுல் காந்தி வினாக்களை தொடுத்துள்ளார்.

மேலும், இந்தியாவை சூறையாடுவதற்கான வழி, பிரதமர் நரேந்திர மோடி கட்டி அணைப்பது மற்றும் அவருடன் டாவோஸ் மாநாட்டில் பங்கேற்பது, அந்த செல்வாக்கை வைத்து 12000 கோடி ரூபாய் திருடி, அரசு கண்டுகொள்ளாமல் இருக்கும்போது மல்லையாவைப் போல நாட்டை விட்டே தப்பி விடுவது ஆகியன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வைரல் ஆகும் விவகாரம்:

இன்று இந்தியா முழுவதும் நீரவ் மோடியின் ‘மெகா’ மோசடிதான் பெரு ஊடகங்கள் மட்டுமின்றி அனைத்து சமூகவலைத்தளங்களிலும் பரபரப்பு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

”லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரின் பெயர்களில் பின்னொட்டாக உள்ள மோடி என்பதுதான் இத்தனை பிரச்னைக்கும் காரணம் போலிருக்கிறது. அதனால்தான் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகின்றனர்” என்று கிண்டலாக ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதை மறைமுகமாக கேலி செய்துள்ளார் இந்தப் பதிவர்.

மற்றொருவர், ”நீரவ் மோடி கடந்த ஜனவரி 23ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை டாவோஸ் நகரில் சந்தித்தார். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு சுமையாக 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கூடுதலாக 1 சதவீதம் செஸ் வரி உயர்த்தப்பட்டது. பிப்ரவரி 14ம் தேதி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கயில் 11000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செய்திகள் வெளியாகிறது. பிப்ரவரி 15ம் தேதி (இன்று) நீரவ் மோடி இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்,” என்று பதிவிட்டுள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் விளம்பரங்களை டிவி சேனல்களுக்கு மாற்றிவிட்டதில் பல கோடி ரூபாய் மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய லலித் மோடி, பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா ஆகியோர் வரிசையில் இப்போது நீரவ் மோடியும் சேர்ந்துவிட்டதாகவும் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததா?:

பாஜக துணையுடன்தான் இத்தகைய பெரும் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ள நிலையில், பதிலுக்கு பாஜக தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. நீரவ் மோடியின் மோசடி என்பது இப்போதல்ல; 2011ம் ஆண்டிலிருந்தே நடந்து வந்துள்ளது என்று பாஜகவும் பதிலடி கொடுத்துள்ளது.

சரிந்த பங்குச்சந்தை:

நீரவ் மோடியின் மோசடியால் பங்குச்சந்தையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகள் கடந்த இரு நாள்களாக பெரிய அளவில் வீழ்ச்சி கண்டது. இன்று ஒரே நாளில் அதன் மதிப்பு 7.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது.

தேடப்படும் குற்றவாளி:

இதற்கிடையே, இந்தியாவில் மும்பை, டெல்லி, சூரத் ஆகிய நகரங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான கடைகள், அலுவலகங்கள், வீடுகளில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மேலும், அவருக்குச் சொந்தமான சுமார் 1300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஊடகங்களிடம் பேசிய நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ”நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல வாய்ப்பில்லை. மேலும், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ‘லுக் அவுட் சர்க்குலர்’ கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஆனாலும், நீரவ் மோடி பத்திரமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

– அகராதியார்.