Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வெல்லத்தில் சலவைத்தூள், உரம் கலப்பு! சேலத்தில் 41 டன் பறிமுதல்!!

உருண்டை வெல்லம் என்றால் அதன் தித்திப்பு சுவை மட்டும்தான் நினைவுக்கு வரும் என்று நினைத்தால் அது உங்களின் அறியாமைதான். ஏனெனில், கரும்புச்சாறை பிழிந்து, காய்ச்சி தயாரிக்கப்படும் வெல்லத்தில் கரும்புச்சாறு மட்டுமின்றி சூப்பர் பாஸ்பேட் உரம், சோடியம் ஹைட்ரோசல்பைடு சலவைத்தூள் ஆகிய வேதிப்பொருள்களும், இன்ன பிற நிறமூட்டிகளும் கலந்திருக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்து இருக்கிறது உணவுப்பாதுகாப்புத்துறை.

 

சேலத்தில்
ஓமலூர், கருப்பூர்,
தாரமங்கலம், இடைப்பாடி,
மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம்,
சங்ககிரி ஆகிய பகுதிகளில்
பரவலாக வெல்லம் உற்பத்தி
ஆலைகள் சிறியதும், பெரியதுமாக
இயங்கி வருகின்றன.
தைப்பொங்கலை குறிவைத்து
இப்போது வெல்லம் உற்பத்தி
மும்முரமாக நடந்து வருகிறது.
பொங்கல் மட்டுமின்றி இனிப்பு
பண்டங்கள் தயாரிப்பிலும்
முக்கிய பங்கு வகிப்பதால்,
எல்லா காலத்திலும் உருண்டை
வெல்லத்திற்கு மிகப்பெரும்
சந்தை வாய்ப்பு
இருக்கவே செய்கிறது.

ஆனால், நாம் வாங்கும் வெல்லம் நுகர்வோரின் நம்பிக்கையை பூர்த்தி செய்கிறதா என்பதுதான் மிகப்பெரும் கேள்விக்குறி. செவ்வாய்க்கிழமையன்று (நவ. 26, 2019) சேலம் செவ்வாய்ப்பேட்டையில் மூலைப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள ஓர் ஏல விற்பனை மையத்திற்கு, சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்லம் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அப்படி, 43 வாகனங்களில் மூட்டை மூட்டையாக வெல்லம் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

உணவுப்பாதுகாப்புத்துறை
அதிகாரிகளுக்கு, ஏலத்திற்குக்
கொண்டு வரப்பட்டுள்ள
வெல்லத்தில் ஏகத்துக்கும்
கலப்படம் நடந்துள்ளதாக
ஒரு ரகசிய தகவல் கிடைக்கவே,
அத்துறையின் மாவட்ட
நியமன அலுவலர் கதிரவன்
தலைமையிலான அலுவலர்கள்
ஒரு படையாக நிகழ்விடத்திற்குச்
சென்று விட்டனர்.

 

ஒரு காலத்தில், நுகர்வுப் பண்டங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள், பொட்டு வைத்துக்கொண்டு பொங்கல் சாப்பிட்டுவிட்டு ‘கொடுப்பதை வாங்கிக்கொண்டு’ வரும் நிலையில்தான் பெரும்பாலானவர்கள் இருந்தார்கள். உணவுப்பாதுகாப்புத்துறை என்று தனித்துறை உருவாக்கப்பட்ட பிறகு நியமன அலுவலர்களாக பொறுப்பேற்கும் அதிகாரிகள் பொட்டு வைத்து, பொங்கல் சாப்பிடும் ரகத்தினர் இல்லையே…

சூப்பர் பாஸ்பேட்

அதிகாரிகள்
ஒரு வாகனம் விடாமல்
அனைத்தையும் ஆய்வு
செய்தனர். இதில்,
23 வாகனங்களில் கொண்டு
வரப்பட்ட வெல்லத்தில்
தடை செய்யப்பட்ட
வேதிப்பொருள்கள்
கலந்திருப்பது தெரிய வந்தது.
கிட்டத்தட்ட 41 டன்
வெல்லத்தில் கலப்படம்.
அதாவது, 41 ஆயிரம் கிலோ.
அவற்றை அப்படியே
பறிமுதல் செய்த அதிகாரிகள்,
அவற்றின் மாதிரிகளையும்
சேகரித்து உணவுப்பகுப்பாய்வுக்
கூடத்திற்கு அனுப்பி
வைத்துள்ளனர்.

 

அப்படி என்னதான் இந்த வெல்லத்தில் கலந்திருந்தார்கள் என்பது குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் நம்மிடம் கூறினார்.

 

”வெல்லத்தில் சோடியம் ஹைட்ரோ சல்பைடு, சூப்பர் பாஸ்பேட் ஆகிய தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்களை கலப்படம் செய்துள்ளனர். மைதா மாவும் கலக்கப்பட்டு உள்ளது தெரிய வந்திருக்கிறது. இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை கலப்பது சட்ட விரோதமானது. இதுபோன்ற கலப்பட வெல்லத்தை சாப்பிடுவது, உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். உணவுப்பகுப்பாய்க்கூட ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, சம்பந்தப்பட்ட கலப்படக்காரர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று காட்டமாகவே சொன்னார் மருத்துவர் கதிரவன்.

சோடியம் ஹைட்ரோ சல்பைடு

அவர் குறிப்பிட்ட
சூப்பர் பாஸ்பேட்
(Super phosphate) என்பது
பயிர்களின் விளைச்சலுக்கு
இடப்படும் உரமாகும்.
சூப்பர் பாஸ்பேட் அளவுக்கு
அதிகமாகப் போனால்,
விளை நிலமும் மலடாகும்
அபாயம் இருக்கிறது.
அப்படியெனில், சூப்பர் பாஸ்பேட்
கலந்த வெல்லம் நமக்கு
எத்தகைய பாதிப்பை
உண்டாக்கும் என்று
நாம் சொல்லித் தெரிய
வேண்டியதில்லை.
மற்றொரு கலப்புப் பொருளான
சோடியம் ஹைட்ரோ சல்பைடு
(sodium hydrosulphide)
வேதிப்பொருள், பொதுவாக
தோல் பதனிடுதல், காகிதம்,
சாயப்பட்டறைகளில்
அழுக்கும் நீக்கும் பொருளாக
பயன்படுத்தப்படுகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையங்களிலும் தவிர்க்க
முடியாத வேதிப்பொருள்தான்
இந்த சோடியம் ஹைட்ரோ சல்பைடு.

 

வெல்லத்தில் கலப்படம் என்பது ஒருபுறம் இருக்க, அந்த ஏல மையம் உரிய அனுமதி பெறாமல் இயங்குவதும் தெரிய வந்தது. அதற்கும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது உணவுப்பாதுகாப்புத்துறை.

 

உள்ளத்தில் நல்ல உள்ளமும், வெல்லத்தில் நல்ல வெல்லமும் இருக்கலாம்; ஆனால், எல்லா வெல்லமும் வெல்லமல்ல.

 

– பேனாக்காரன்