Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கட்டாயத் தேர்ச்சி ரத்து : மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும்!

பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்பட்டால், மீண்டும் அடிமை வம்சத்தை உருவாக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டு வரும் கட்டாயத் தேர்ச்சி நடைமுறையானது, அடுத்தக் கல்வி ஆண்டில் இருந்து ரத்து செய்ய மத்திய அமைச்சரவை கொள்கை முடிவெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்தில் 20 கல்வி நிலையங்கள் தொடங்கப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. 24 மாநிலங்கள் இதற்கு இசைவும் தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவால், விளிம்பு நிலை மக்களுடைய பிள்ளைகளின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேநேரம், ஆசிரியர்கள் தரப்பில் கணிசமான வரவேற்பும் பெற்றுள்ளது.

இந்திய அரசு, ‘காட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே இனி, இந்தியாவில் கல்வி என்பது 100% வணிகமாகிவிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர். பாஜக அரசும் அதை நோக்கி நகர்வதைத்தான் இப்போதைய கொள்கை முடிவும் காட்டுகிறது.

கட்டாயத் தேர்ச்சி ரத்து என்பது, அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் (ஆர்டிஇ)-2009ன் மைய நோக்கத்தை ஒட்டுமொத்தமாக சிதைக்கும் வகையில் இருக்கிறது.

எட்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் அதே வகுப்பில் மீண்டும் அமர்த்தக் கூடாது என்பது, அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களுள் ஒன்று. ஆர்டிஇ நடைமுறைக்கு வந்த பின்னர்தான் பள்ளிக்குழந்தைகளின் இடைநிற்றலும் பெருமளவில் குறைந்தது.

எந்தளவுக்கு எனில், 1 முதல் 8ம் வகுப்பு வரை இந்திய அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 78.5%-ல் இருந்து 40.8% ஆகக் குறைந்தது. இது, 2011-12ம் ஆண்டின் புள்ளி விவரம். இடைநிற்றலை குறைத்ததில் தமிழ்நாடு, தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது.

இப்போது மத்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவால், மீண்டும் இடைநிற்றல் அதிகரிக்கும். அத்துடன், குழந்தை தொழிலாளர், இளவயது திருமணங்களும் அதிகரிக்கக் கூடும்.

இதுபற்றி, பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

“மத்திய அரசின் முடிவால் பெரிதும் பாதிக்கப்படப்போவது பெண் குழந்தைகள்தான். அவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பெற்றோர் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். விளிம்பு நிலை மக்களின் பொருளாதார நிலையும், தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல அனுமதிக்காது.
குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை ஆசிரியர்கள்தான் சரிசெய்ய வேண்டும்.

நம்மிடம், பாடவாரியாகவும், வகுப்புவாரியாகவும் மொழிப்பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் இல்லை. இதைச் சரிசெய்யாமல் கற்றல் குறைபாடுகளுக்கு குழந்தைதான் காரணம் என்று சொல்லி, அவர்களை அதே வகுப்பில் தொடரச் செய்வது சரியல்ல.

பிறந்ததில் இருந்தே கற்றுக்கொண்டு வந்த ஒரு குழந்தை, பள்ளியில் மட்டும் எப்படி கற்காமல் போகும்? அதே வகுப்பில் தங்க வைத்தாலும் அல்லது தொழில்கல்வி கற்க வைத்தாலும், அது மைய நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகவே அர்த்தம். ஐந்தாம் வகுப்பிலேயே தேர்வின் அடிப்படையில் வடிகட்டுவது சரியல்ல.

கல்வியை சந்தைக்குக் கொண்டு வருவதுதான் மத்திய அரசின் நோக்கம். சந்தையில் நல்ல பண்டம்தான் விற்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. உடலுழைப்பில் ஈடுபடும் ஒருவர், வீட்டுக்கு வந்ததும் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடத்தான் பார்ப்பார்.

பள்ளியில் நடத்திய பாடங்களைப் பற்றி கேட்கும் வாய்ப்புகள் குறைவு. இங்கே அரசுப்பள்ளிகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், சந்தை ஏற்க மறுக்கிறது. சந்தைக்கு கல்வியைத் திறந்து விடும்போது ஆடுகளம் சமமாக இல்லாவிட்டால் உங்களால் லாபம் ஈட்ட முடியாது.

ஆடுகளத்தை சமன் படுத்துவதற்காகத்தான் எல்லா பிள்ளைகளையும் எட்டாம் வகுப்பு வரை நிறுத்தலாம் என்று அரசு சொல்கிறது. இதனால் உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகள், மேல் வகுப்புக்கு வராமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. அப்படி இருந்தால் அரசை தட்டிக்கேட்கவே இனி ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு கல்வி பரவலாக்க ப்பட்டது. இப்போது மீண்டும் கல்வி மறுத்தலின் அரசியல் ஆரம்பமாகிறது. கல்வி கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது. பன்னாட்டுக் கல்வி நிலையங்கள் கொண்டு வரப்படும்போது, ஒரு கட்டத்தில் அரசுப்பள்ளிகள் ஒட்டுமொத்தமாக மூடப்படும் சூழலும் உருவாகும்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், “தேர்வு வைத்து ஒரு குழந்தையை மதிப்பீடு செய்வதைக் காட்டிலும் வருகை அடிப்படையில் தேர்ச்சியை உறுதி செய்யும் நடைமுறையைக் கொண்டு வரலாம்,” என்று மாற்று யோசனையை முன்வைக்கிறார்.

சந்திரசேகர்

“குழந்தைகள், தன்னை அறியாமல் தானாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் உளவியலாளர்களின் கருத்து. ஆனால் இன்றைய போட்டி உலகத்தில், 9, 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இப்போது நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி முறையால், குழந்தைகளுக்கு தூண்டுதல் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.
ஆண்டுக்கு, 10 நாட்கள் பள்ளிக்கு வந்தால்கூட தேர்ச்சி அடையச் செய்துவிடும் போக்குதான் இப்போதுவரை உள்ளதால், அவர்கள் மேல் வகுப்புக்குச் செல்லும்போது அடிப்படைக் கல்வித்திறன் இல்லாமல் தடுமாறுகின்றனர். இதனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற விமர்சனங்களும் வருகின்றன. 5 மற்றும் 8ம் வகுப்புகளில் தேர்வு வைத்து, வடிகட்டினால் கல்வித்தரம் உயரும்.

இயல்பான போட்டி உலகத்திற்குள் நுழைய கட்டாயத் தேர்ச்சி முறை இருக்கக் கூடாது. தேர்வு முறை வருகிறதோ இல்லையோ, பள்ளிக்கு குறைந்தபட்சம் 75% வருகை இருந்தால் தேர்ச்சி அடையச் செய்யலாம்,” என்கிறார் சந்திரசேகர்.

கட்டாயத் தேர்ச்சி முறை அமலுக்கு வந்த பின்னர், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை பணிகளில் இருந்து ஆசிரியர்கள் ஏமாற்றக் கற்றுக்கொண்டு விட்டனர். தலைமை ஆசிரியர்கள் ஒழுக்கம் தவற ஆரம்பித்ததில் இருந்து சக ஆசிரியர்களும் ஏமாற்றத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார், ஓய்வு பெற்ற ஆரசுப்பள்ளி ஆசிரியர் மெய்யழகன். இதுவும் ஒரு வகை ஊழல்தான் என்கிறார் அவர். ஆனாலும், மாணவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு ஏதேனும் ஓர் அளவுகோல் இருப்பதில் தவறு இல்லை என்றும் கூறுகிறார்.

மெய்யழகன்

“ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு குறைந்தபட்ச மொழித்திறனும், எளிமையான கணக்குகளைப் போடும் திறனும் போதுமானது. ஆனால், கட்டாயத் தேர்ச்சி முறையால் அடிப்படைக் கல்வித்திறன் இல்லாமலேயே எட்டாம் வகுப்பு வரை முடித்து விடுகின்றனர்.

இப்படி எந்த விதமான மனப்பயிற்சியும் இல்லாமலேயே ஒரு மாணவன், பத்தாம் வகுப்பிற்கு வந்து விடுகிறான். அங்கு அவனைப் படி என்றால், வேதாந்தி போல் சிரிக்கிறான். 5 மற்றும் 8ம் வகுப்பில் தேர்வு முறை இருந்தால்தான் ஒரு மாணவன் குறைந்தபட்சம் மொழித்திறன், கணிதத்திறனுடன் மேல் வகுப்புக்குச் செல்ல முடியும். இது எதுவுமே இல்லாததால்தான் நாங்களும் ஒரு மதிப்பெண் வினா, இரண்டு மதிப்பெண் வினாக்களை படிக்க வைத்து, தேர்ச்சிக்காக மட்டும் வேலை பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இந்த உத்தியில் தேர்ச்சி பெற்று, பதினோராம் வகுப்பிற்குச் செல்லும்போது அங்குள்ள ஆசிரியர்கள், ‘எப்படி இவன் பாஸ் ஆகியிருப்பான்?’ என ஆச்சர்யப்படுகின்றனர். ‘ஆல் பாஸ்’ முறை என்பது, வறுமையை உருவாக்குதுபோல் ஆகும். வறுமையை உருவாக்கினால் கிரிமினல்களை உருவாக்கியதுபோல் ஆகும்,” என்கிறார் மெய்யழகன்.

“கட்டாயத் தேர்ச்சி ரத்து நடைமுறையை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்ற கருத்துடன் பேச வந்தார் சுபாஷினி. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லதானகொத்தப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்.

சுபாஷினி

“ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு வரும் நிறைய பிள்ளைகள், அடிப்படை கல்வித்திறனே இல்லாமல்தான் வருகின்றனர். ஆசிரியர்கள் மீது அவர்களிடம் ஒருவித வெறுப்பு உணர்வு இருக்கிறது. இடைநிற்றலும் அதனால்தான் ஏற்படுகிறது.

தொடக்கப்பள்ளியில் அடிப்படைக் கல்வி சரியாக அமைந்துவிட்டால், எட்டாம் வகுப்பு வரை அவர்கள் தோல்வி அடைய வாய்ப்பே இல்லை. கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்வதால் விளிம்புநிலை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைவிட, ஆசிரியர்களின் பொறுப்புணர்வு கூடும் என்பதுதான் உண்மை. புதிய நடைமுறையால் 100% தேர்ச்சியைக் கொண்டு வர முடியும்,” என்றும் கூறுகிறார் சுபாஷினி.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், “கட்டாயத் தேர்ச்சி நடைமுறையை ரத்து செய்தால், சமுதாயத்தில் மீண்டும் அடிமை வம்சத்தைதான் உருவாக்கும்,” என குற்றம் சாட்டுகிறார்.

கோவிந்தன்

மேலும் அவர் கூறுகையில், “தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளைத்தான் நம்பி இருக்கின்றனர். அவர்களை எட்டாம் வகுப்பு வரையிலாவது தேர்ச்சி அடையச் செய்தால்தான், மேல்நிலைக் கல்வியைத் தொடர்வார்கள்.

பிளஸ்-2வில் தோல்வி அடைந்த சிலர், ஐஏஎஸ் தேர்வில்கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதிய நடைமுறை அமலாகும்பட்சத்தில் மீண்டும் இடைநிற்றல் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும்.

ஒரு குழந்தையின் கற்றல் என்பது, பள்ளிச்சூழல், புறச்சூழல், பரம்பரை காரணங்களைச் சார்ந்து அமைகிறது. அதனால் எப்போதும்போல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி நடைமுறை அமலில் இருக்க வேண்டும்.

மத்திய அரசு, கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கும் வேலைகளில்தான் ஈடுபட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் ஒருகட்டத்தில் அரசுப்பள்ளிகள் மூட்டப்படும் சூழலும் உருவாகும்,” என்கிறார் கோவிந்தன்.

– இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: selaya80@gmail.com

சந்தா தொடர்புக்கு: 9840961947

இணையத்தில் படிக்க:

www.puthiyaagarathi.com