Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஜக: ஒழுங்கீன அரசியலின் குறியீடு!

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரி என்ற கொள்கைகளின் நீட்சியாக நாட்டில் இனி ஒரே கட்சிதான் என்கிற சித்தாந்தத்தை நிருவப் பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்காகவே, தாங்கள் காலூன்றாத மாநிலங்களில் ஆளும் கட்சிகளை பிளவு படுத்துவதற்கான சகுனி ஆட்டத்தில் மும்முரமாக காய் நகர்த்துகிறது.

ராஜ்யசபையில் அக்கட்சிக்கு மெஜாரிட்டி இல்லாததால், இத்தகைய கொல்லைப்புற வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறது. அண்மையில், பீஹாரில் நடந்த அரசியல் நகர்வுகள் கொஞ்சம்கூட அரசியல் நாகரீகத்திற்கு ஒவ்வாதது.

ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு தரம் தாழ முடியும் என்பதற்கு தமிழ்நாடுதான் சிறந்த உதாரணம் என்று நினைத்திருந்தோம். அப்படி அல்ல. பீஹார், தமிழகத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது.

மன்மோகன்சிங் அமைச்சரவையில் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே மந்திரியாக இருந்தபோது உலகத்தரம் வாய்ந்த ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அவர் அந்த இலாகாவில் இருந்த ஒவ்வோர் ஆண்டும் உபரி பட்ஜெட் போட்டுக் காட்டியதுடன், ரயில்வே துறையையும் லாப பாதைக்குக் கொண்டு சென்றார்.

அவருடைய ஆளுமையைக் கண்டு வியந்தவர்கள், ஐஐடி மாணவர்களுக்கு பாடம் நடத்தவே அழைத்தனர். ஆனால் லாலுவை காட்சி ஊடகங்கள் காட்டும் பிம்பம் எப்போதும் அபத்தமானவை.

அப்படியொரு ஆளுமைமிக்க லாலு பிரசாத் யாதவ், தலைநகரில் இல்லாத ஒரே இரவில் நிதிஷ்குமாரை தங்கள் வசப்படுத்தி, தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் அவரை முதல்வராக்கி அழகு பார்த்திருக்கிறது பாரதிய ஜனதா.

லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் மீதான ஊழல் குற்றச்சாட்டைக் கண்டு பொறுக்க இயலாமல் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக ஐக்கிய ஜனதாதளத்தின் முதல்வர் நிதிஷ்குமார் சொன்னார். ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ், இறங்கிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி புளகாங்கிதம் அடைந்தார்.

ஆனால் ஐக்கிய ஜனதாதள எம்எல்ஏக்களை சரிக்கட்ட பாரதியஜனதா தரப்பில் இருந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 கோடி வரை பேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. கருப்பு பணம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக மார்தட்டும் பாஜகவினர், மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை இழுப்பதற்காக எங்கிருந்து பணத்தைக் கொண்டு வருகின்றனர் என்பது அவர்களுக்குதான் வெளிச்சம்.

இரவோடு இரவாக புதிய அமைச்சரவைக்கு ஒப்புதல் தெரிவிக்க பீஹார் மாநில பொறுப்பு ஆளுநரால் முடிகிறதெனில், தமிழகத்தில் சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்தாலும் அதை வாங்காமல் காலம் தாழ்த்தினார் வித்யாசாகர் ராவ்.

நிதிஷ்குமார், முதல்வர் பதவியில் இருந்து விலகிவிட்டால் அரசியலமைப்புச் சட்டப்படி, இரண்டாவதாக பெரும்பான்மை உள்ள கட்சிக்குதான் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும். இந்த விதிகளும் பீஹாரில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும், லோக்பால் அமைக்காமலும் தொடர்ந்து போக்குக் காட்டும் பாரதிய ஜனதாவிடம், இப்பிரச்னையில் நியாயத்தை எதிர்பார்ப்பதும் கூடாதுதான்.

கோவா, மணிப்பூர் மாநிலங்களில் நடந்த பேரவைத் தேர்தல்களில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. எனினும் அக்கட்சிக்கு, ஆட்சி அமைப்பதற்குப் போதிய இடங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் நடைமுறைகள் அவ்விரு மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்படவில்லை.

அடுத்து, குஜராத். பாஜக, அண்மையில் அரசியல் சடுகுடு ஆடிய மற்றொரு மாநிலம். கூடுதலாக ஒருவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்குவதற்காக காங்கிரஸ் கட்சியை உடைக்க, பாஜகவின் காய் நகர்த்தல்கள் அரசியல் அநாகரீகத்தின் உச்சம். கேவலம், ஒரு எம்.பி. பதவிக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என பாஜகவினரை பார்த்து பரிதாபப்படுகிறது காங்கிரஸ்.

அக்கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க பெங்களூரில் ஒரு ஹோட்டலில் தங்க வைத்தால், அங்கெல்லாம் சென்று வருமான வரித்துறையினர் மூலம் சோதனை நடத்துகிறது. அதே சோதனைகளை ஏன் கூவத்தூர் விடுதியில் நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்பதிலும் தர்க்க நியாயங்கள் இருக்கவே செய்கிறது. அப்படிச் செய்யாமல் போனதற்குக் காரணம், அதிமுகவிடம் இருக்கும் பரிசுத்தமான எஜமான விசுவாசம் மட்டுமே.

யுத்த தர்மத்தின்படி வாலியை, ராமன் மறைந்து இருந்து தாக்கியது குற்றமே. ஆனால், மனு தர்மத்தின்படி அது சரிதான் என குஜராத், பீஹார் விவகாரங்களிலும் பாஜக சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தலையங்கம்: ‘புதிய அகராதி’, ஆகஸ்ட்-2017 இதழில்.