Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே.

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை சிதைக்க பாஜக சில நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுக்கிறது.

இதில், இரண்டாவது காரணமே தே.ஜ.கூ.வில் இருந்து தெலுங்கு தேசம் வெளியே பிரதான காரணியாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம். ஆனால், அதை வெளிப்படையாக முன்னெடுக்க முடியாதே.

இருக்கவே இருக்கிறது, சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரம். அதை கையிலெடுத்திருக்கிறார் சந்திரபாபு. விளைவு, மாநில சுயாட்சி பற்றி பேசும் முதல்வர்களின் வரிசையில் இன்று அவரும் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்படி என்னதான் பாஜக சதிராட்டம் ஆடுகிறது?

மாநிலக் கட்சிகளை முற்றாக ஒழிப்பதும், காங்கிரஸ் அல்லாத இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதும்தான் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்களின் மறைமுக அஜன்டா. அதை களத்தில் செயல்படுத்தும் கருவிகள்தான் மோடியும், அமித் ஷாக்களும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் நடந்த ஊழல்களை சீர்தூக்கிப் பார்க்கையில், அக்கட்சி இல்லாத இந்தியா என்பது வரவேற்கக் கூடியதுதான். அதற்காக மாநில சுயாட்சி கொள்கைகளை சிதைக்க முற்படும் பாஜகவின் தந்திரங்களை வரவேற்க முடியாதே!. அதிகார பசிகொண்டு அலையும் பாஜக, இயலாதபட்சத்தில் மாநிலங்களை இரண்டாக பிரிக்கவும் தயங்குவதில்லை.

ஆந்திராவில் கடந்த முறை நடந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும், தெலுங்குதேசம் – பாஜக கூட்டணிக்கு வெறும் 2.06 விழுக்காடு வாக்குகள்தான் அதிகம் கிடைத்தது.

அங்கு, சந்திரபாபு நாயுடுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி ரொம்ப வலுவாகவே கம்பு சுழற்றி வருகிறார். மற்றொருபுறம் நடிகர் பவன் கல்யாணும் தூக்கத்தைக் கெடுக்கிறார்.

உறவாடி கெடுப்பதுதான் பாஜகவின் பாணி. அதை திறம்பட செய்கிறது. எல்லா வகையிலும் எந்த நேரத்திலும் மாநில கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் (உ.ம்.: தமிழ்நாடு). இல்லாவிட்டால் கூட இருந்தே குழிபறிப்பில் இறங்கி விடும்.

ஆந்திராவிலும் அதுதான் அரங்கேறியது. தெலங்கானா பிரிவினையில் இருந்தே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. இதுகுறித்த விவகாரத்தில் சந்திரபாபு நிறையமுறை முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்திருக்கிறார். அதுவும், சட்டப்பேரவையிலேயேகூட.

அவரே ஒருமுறை, சிறப்பு அந்தஸ்தால் எந்தப் பயனும் இல்லை என்றார். இன்னொரு முறை, சிறப்பு அந்தஸ்து 15 ஆண்டுகளுக்குத் தேவையில்லை; 10 ஆண்டுகள் போதும் என்றார்.

பின்பு, ஆந்திர மக்களின் வாழ்க்கைக்குத் தேவையானது சிறப்பு அந்தஸ்துதான் என்றார். இப்போது சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் கருத்தையும் முதலில் முன்வைத்ததும்கூட ஜெகன்மோகன் ரெட்டிதான். அக்கட்சிக்கு 9 எம்பிக்கள் மட்டுமே இருந்தாலும், துணிச்சலாக அப்படியொரு முடிவை அவர் அறிவித்தார். அப்போது மவுனம் சாதித்தார் சந்திரபாபு.

உள்ளூர் அரசியலில் ஜெகன்மோகன் ரெட்டி, பவன் கல்யாண் ஆகியோரின் கைகள் ஓங்குவதை தடுக்க முடியாமல்தான் சந்திரபாபு நாயுடுவின் இப்போதைய அஸ்திரத்துக்கு காரணம். பவன் கல்யாணின் ஜனசேனாவை பின்னிருந்து பாஜக இயக்குகிறது என்ற சந்திரபாபுவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

அதேநேரம், ஜெகன்மோகன் ரெட்டியிடமும் பாஜக மென்மையான போக்கைக் கையாண்டு வருகிறது. அதற்கு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலாகக்கூட காரணமாக இருக்கலாம்.

பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, உதய் மின்திட்டம், ஆதார் கட்டாயம் இப்படி மத்திய அரசின் எல்லா திட்டங்களுக்கும் முதல் ஆதரவுக்குரல் கொடுத்த சந்திரபாபு நாயுடுதான், நான்கு ஆண்டுகளாக பாஜகவுடன் சேர்ந்திருந்து, எல்லா வித பயன்களையும் அனுபவித்தார்.

எப்படி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எல்லா சுயலாபங்களையும் அனுபவித்த பின்னர் மொக்கை காரணங்களைச் சொல்லி, கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதோ அப்படித்தான் இப்போது சந்திரபாபு நாயுடும் செயல்பட்டிருக்கிறார்.

வேறுவழியில்லை… அவரும் இப்போது மாநில சுயாட்சி உரிமைகளை உரக்கப் பேசித்தானே ஆகவேண்டும்? மக்களை நம்ப வைக்க இதைவிட வேறெந்த அஸ்திரமும் தெலுங்கு தேசத்திடம் இல்லையே.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. எனினும், கூட்டணி கட்சிகளுக்கும் சில அமைச்சர் பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த இடைத்தேர்களில் தன் வசமிருந்த 10 தொகுதிகளை பிற கட்சிகளிடம் தாரை வார்த்திருக்கிறது. இப்போது அதன் பலம் 272 இடங்களாகக் குறைந்து விட்டது.

ஆட்சி அமைப்பதற்கு இந்த மெஜாரிட்டி போதுமானதுதான். பாஜகவின் பலமே இப்படி இருக்கையில் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் ஆதரிக்கும் கட்சிகளின் எம்பிக்களையும் சேர்த்தால் எத்தகைய நம்பிக்கை வாக்கெடுப்பையும் பாஜக ஊதித்தள்ளிவிடும் என்பதை நாம் சொல்லித்தான் சந்திரபாபு நாயுடுக்கு தெரிய வேண்டியதில்லை.

ஆனாலும், பாஜகவுக்கு பரவலாக அதிகரித்து வரும் எதிர்ப்புகளையும், சந்திரபாபு, ஜெகன்மோகன் ரெட்டி போன்றவர்களின் எதிர்ப்புகளையும் காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகள் பயன்டுத்திக் கொள்ள பார்க்கின்றன.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, டிஆர்எஸ், சிவசேனா, பகுஜன் சமாஜ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பு நிச்சயம் தோற்றுப்போகும் என்று இக்கட்சிகளுக்கும் தெரியும்.

பிறகு எதற்காக தெலுங்கு தேசத்தின் முடிவுக்கு உடன்பட வேண்டும்? பெரிய காரணங்கள் வேறு ஒன்றுமில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழைய தத்துவம்தான் காரணம். மேலும், அடுத்து வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வரலாறு காணாத ஜம்போ கூட்டணி அமைப்பதற்கான அஸ்திவாரமாகவும் பார்க்கப்படுகிறது.

மாநில உரிமைகளை நசுக்குவதில் காங்கிரஸ் கட்சியும் சளைத்தது அல்ல. ஆனாலும், அக்கட்சியிடம் மாநிலக் கட்சிகள் துணிச்சலாக விவாதிக்கக்கூடிய அளவுக்கு இடம் கொடுத்திருந்தது. அந்த உரிமையை, பாஜக முற்றாக பறித்திருக்கிறது.

ஒரே தேசம்; ஒரே மொழி, ஒரே வரி; ஒரே தலைமை என்ற தத்துவத்தை பாஜக, மாநிலக் கட்சிகளின் மீதும் திணிக்கப் பார்க்கிறது. பாஜகவுக்கு எதிராக ஓரணியில் இணையும் கட்சிகள், பாஜகவின் ‘ஒற்றை’ தத்துவ அணுகுமுறையை கொஞ்சமும் ரசிக்கவில்லை என்பதையும் நாம் கூர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

போகிற போக்கில் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் ஆட்டி வைப்பதைப் போல ஆந்திராவிலும் மூக்கை நுழைக்கிறது என பாஜகவை சாடும் நோக்கில், தமிழக ஆட்சியாளர்களையும் குட்டு வைத்திருக்கிறார் சந்திரபாபு.

23ம் புலிகேசி பாணியில் ‘படுத்தே விட்டானாய்யா’ என்கிற அளவில் மோடியின் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திரபாபு நாயுடுக்கெல்லாம் செவி சாய்ப்பார்களா என்ன?

ஆந்திரா மாநிலத்திற்கு பசுமை திட்டம், பேரிடர் மேலாண்மை, மின்சாரம், நீர்வளம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற திட்டங்களுக்காக கடந்த 2017ம் ஆண்டு வரை 8962 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியுதவி வழங்கியிருப்பதாக பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு சந்திரபாபு நாயுடு சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதாகவும் பாஜக சொல்கிறது.

அரசியல் என்ற சொல்லுக்குள் சந்தர்ப்பவாதம் என்பதும் பொதிந்தே கிடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் துணிச்சலான முடிவில் நாட்டிற்கு இப்போதைக்கு ஒரே ஒரு நன்மை கிடைத்திருக்கிறது. இன்றைய நாள் (மார்ச் 16, 2018) புனித வெள்ளியாகி இருக்கிறது.

தென்னிந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் மட்டும் ஆளும் தெலுங்குதேசத்துடன் கொண்டிருந்த கூட்டணியால் அங்கு மட்டும் கொஞ்சம் பரவலாக காவி நிறம் தென்பட்டிருந்தது. இப்போது அதுவும் துடைத்து எறியப்பட்டுள்ளது.

 

– வழிப்போக்கன்.

பேச: 75399 91916.