புதுடில்லி : மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு அலையும் இந்தியர்கள் மத்தியில், இந்தியாவுக்கான, அமெரிக்க பெண் தூதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டுச்சேலை அணிந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினமான நேற்று, இந்தியாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்கா பெண் தூதர் மேரிகே கார்ல்ஸன். இவர், இந்திய கலாசாரத்தில் மிகுந்த பற்று கொண்டவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, இணையவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
‘நெட்டிசன்’களின் ஆலோசனைப்படி, காஞ்சிபுரம் பட்டு புடவை, ஜம்தானி, துபியான், டுசார் வகை என, கடைசியாக, நான்கு புடவைகள், அவர் மனதை கொள்ளை அடிப்பவையாக இருந்தன. அந்த நான்கில், இறுதியாக, அவர் மனதை வென்றது, காஞ்சிபுரம் பட்டு புடவையே.சுதந்திர தினமான நேற்று, காஞ்சிபுரம் பட்டு புடவை உடுத்திய, மேரிகே, அதை புகைப்படம் எடுத்து, புன்னகை தவழ, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
‘சுதந்திர தின விழாவில், பாரம்பரிய பெருமைமிகு, காஞ்சிபுரம் பட்டு புடவை உடுத்தி, பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என, டுவிட்டர் பக்கத்தில், மேரிகே குறிப்பிட்டுள்ளார். பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில், மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த புடவை, நெட்டிசன்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.