பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1963ம் ஆண்டு பிறந்தார் ஸ்ரீதேவி. நான்கு வயதாக இருக்கும்போதே தமிழில் வெளியான ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தவர், தனது பதினான்காவது வயதில் கே.பாலசந்தர் இயக்கிய ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் தடம் பதித்த அவர், இந்தியாவின் கனவுக்கன்னியாக உருவெடுத்தார்.
அதன்பிறகு பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, குஷி மற்றும் ஜான்வி என இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். 15 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் கடந்த 2012ம் ஆண்டு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்குள் காலடி வைத்தார். அந்தப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
தொடர்ந்து சில படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘மாம்’ படம் வெளியானது.
இந்நிலையில், துபாயைச் சேர்ந்த ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் உறவினர் மோஹித் மார்வாவின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார்.
திருமண விழாவில் அவர் உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தனது அறைக்குத் திரும்பிய ஸ்ரீதேவிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அறையில் மூச்சுப்பேச்சற்றுக் கிடந்த அவரை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பரிசோதனையில், அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. துபாய் நாட்டின் நேரப்படி நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் மரணம் அடைந்துள்ளார். ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாக இந்த திருமண விழா அமைந்தது.
துபாய் நாட்டின் அரசு மருத்துவமனையில் உடற்கூறியல் பரிசோதனை நடத்தப்பட்டது. இறப்பு சான்றிதழ் பெறப்பட்ட பிறகு, சிறப்பு விமானத்தில் ஸ்ரீதேவியின் சடலம் இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
திரையுலகினர், பிரதமர், ஜனாதிபதி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.