Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

50 கோடி ரூபாய் சுருட்டல்; அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது! கரும்பலகை குற்றத்தில் இது வேற லெவல்!

வட்டித்தொழில் தொடங்கி பாலியல் அத்துமீறல் வரை குற்றங்களில் அனாயசமாக ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை தூக்கிச் சாப்பிட்டிருக்கிறார் வேலூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர்.

 

வேலூர் மாவட்டம்
கொணவட்டத்தைச் சேர்ந்தவர்
மகேஸ்வரி (55). அப்பகுதியில் உள்ள
அரசுப்பள்ளியில் கணித ஆசிரியராக
பணியாற்றி வருகிறார். இவருடைய
கணவர் தர்மலிங்கம் (60).
காவல்துறை உதவி ஆய்வாளராக
பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

கணவன், மனைவி இருவரும்
இணைந்து வேலூரில் கடந்த
2018ம் ஆண்டு கார், லாரி, ரியல் எஸ்டேட்
தொழில்களை அடுத்தடுத்து தொடங்கினர்.
இவர்கள் நடத்தி வரும் தொழில்களில்
முதலீடு செய்தால் அதிக வட்டி
கொடுப்பதாக ஆசை வலை விரித்தனர்.

 

வெறும் 175 ரூபாய் ஊக்கத்
தொகைக்காக பணம் கொடுத்தாவது
எம்.ஃபில் பட்டத்தைப் பெறுவதில்
முனைப்பு காட்டும் ஆசிரியர்களிடம்,
முதலீட்டுக்கு அதிக வட்டி என்றால்
சும்மா இருப்பார்களா? ஆலாய் பறந்தனர்.

 

ஆசிரியர் மகேஸ்வரியும்,
அவருடைய கணவரும் விரித்த
ஆசை வலையில் பல ஆசிரியர்களும்,
அரசு ஊழியர்களும் விட்டில்
பூச்சிகளாக கொத்து கொத்தாக விழுந்தனர்.
போட்டிப்போட்டுக் கொண்டு
முதலீடுகளைக் கொட்டினர்.
ஆசிரியர்களின் முதலீட்டு
விவரங்களைக் கேட்டால் நீங்கள்
நிச்சயம் வாய் பிளக்காமல்
இருக்க முடியாது.

 

ஆமாம்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த
ஆசிரியர் ஜான்சிராணி 2.50 கோடி ரூபாய்,
வேலூரைச் சேர்ந்த மலர்
(”பிரேமம்” மலர் டீச்சர் அல்ல)
டீச்சர் 45 லட்சம் ரூபாய்,
தமிழ்செல்வி 2.50 கோடி ரூபாய்
முதலீடு செய்திருந்தனர்.
இப்போது வரை கிடைத்த
தகவல்களின்படி இவர்கள்தான்
பெரிய முதலீட்டாளர்கள்.

 

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள்,
இதர அமைப்புகளை விடவும்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குதான்
சங்கங்கள் ரொம்பவே அதிகம்.
குறுகிய காலத்தில் முதலீட்டுத்
தொகை இரட்டிப்பு, அதிக வட்டி
என்ற தகவல்களையும் ஆசிரியர்களின்
வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்தார் மகேஸ்வரி.
இத்தகவல், கன்னாபின்னாவென்று
பரவத் தொடங்கியது.

 

இதன் விளைவாக,
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களைச்
சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மகேஸ்வரி
நடத்தி வந்த தொழில்களில் முதலீடு செய்தனர்.
கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட
ஒன்றரை ஆண்டாக பள்ளிக்கே போகாமல்
வியர்வை சிந்தி (?!) சம்பாதித்த
மொத்த பணத்தையும் பலர் முதலீடு
செய்திருக்கிறார்கள்.

 

முதலீட்டாளர்களுக்கு ஆரம்பத்தில்
மூன்று மாதங்கள் மட்டும்
வட்டித்தொகையை கொடுத்து,
தன்னை சமர்த்தாக காட்டிக்
கொண்டிருக்கிறார் ஆசிரியர் மகேஸ்வரி.
ஆனால், அதன்பிறகு வட்டித்தொகை
தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த
ஆசிரியர்கள் அவரைத் தேடி
வீட்டுக்கு படையெடுத்தனர்.
அவரோ பணம் கேட்டு வீட்டுக்கு
வந்தால் ‘தொலைத்து விடுவேன்’ என
சொர்ணாக்கா ரேஞ்சில் சீறியதோடு,
ஆபாச சொற்களாலும் அர்ச்சனை
செய்திருக்கிறார்.

இதையடுத்துதான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதையே முதலீடு செய்த ஆசிரியர்கள் உணர்ந்தனர். தற்போதுவரை மகேஸ்வரி மீது 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வேலூர் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர்.

 

காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஆசிரியர் மகேஸ்வரியும், அவருடைய கணவர் (அ)தர்மலிங்கமும் சேர்ந்து 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு அவர்களுடைய மகள்கள் கீர்த்தனா, பூபானா ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துகளை வாங்கி போட்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறது காவல்துறை.

 

மோசடி செய்ததற்கான முகாந்திரம் இருந்ததால் ஆசிரியர் மகேஸ்வரி, அவருடைய கணவர் ஆகியோர் மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இதையறிந்த அவர்கள் தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு படையெடுக்க, தனிப்படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். வேலூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மகேஸ்வரியை காவல்துறையினர் வியாழக்கிழமை (டிச. 2) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவருடைய கணவரை தேடி வருகின்றனர்.

 

இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ”எல்லா துறைகளிலும் உள்ளதுபோல் அந்தந்த பதவிக்கு ஏற்ற தர ஊதியம் அடிப்படையில்தான் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.

 

ஆனால் வருவாய்த்துறை உள்ளிட்ட இதர அரசுத்துறைகளைப் போல இல்லாமல் 8 மணி நேரத்திற்கும் குறைவான பணி நேரம், மற்ற துறை ஊழியர்களைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும் விடுமுறைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர்கள் பெறக்கூடிய ஊதியம் மிகையாக தோற்றம் அளிக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அது மிகையான ஊதியம்தான்.

 

பெரும்பாலும் கணவன், மனைவி இருவருமே ஆசிரியர்களாக உள்ளனர். இருவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மாத ஊதிய வருமானம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் கிடைத்து விடும்.

 

இந்தப் பணத்தை லாபகரமான
தொழில்களில் முதலீடு செய்து
சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை
அவர்களுக்கு இயல்பாகவே இருப்பது
என்னவோ உண்மைதான்.
நகைச்சீட்டு, ஏலச்சீட்டு மூலம்
சேமிக்கின்றனர். வீடு கட்டுகின்றனர்
அல்லது ரியல் எஸ்டேட்டில்
முதலீடு செய்கின்றனர்.

 

பல ஆசிரியர்கள் வட்டித்தொழில்
செய்கின்றனர். எல்லா பள்ளிகளிலுமே
வட்டித்தொழில் செய்யக்கூடிய
ஒரு ஆசிரியராவது இருப்பார்.
குறுகிய காலத்தில் பெரும் லாபம்
சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்
கவர்ச்சிகரமான விளம்பரங்களை
நம்பி முதலீடு செய்து ஏமாந்து
விடுகின்றனர்,” என்றனர்.

 

பாலியல் குற்றங்களில் ஈடுபடும்
ஆசிரியர்கள், விதிகளை மீறும்
ஆசிரியர்கள் பற்றிய செய்திகள்
நாளிதழ்களில் வராத நாளே கிடையாது
எனும் அளவுக்கு அவர்களின் நடத்தை
தறிகெட்டுக் கிடக்கிறது. இதில்,
ஆண், பெண் ஆசிரியர் என்ற
பேதம் ஏதும் கிடையாது.

 

இந்நிலையில், 50 கோடி ரூபாய்
அளவுக்கு மோசடி செய்த வழக்கில்
அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் கைது
செய்யப்பட்டுள்ள சம்பவம்
பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பள்ளிகளில் வழக்கொழிந்த
நீதி போதனை பாடத்தை
மீண்டும் நடத்த வேண்டும்…
மாணவர்களுக்கு அப்புறம்;
முதலில் ஆசிரியர்களுக்கு.

 

– பேனாக்காரன்