Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வராக்கடன்: 4 ஆண்டுகளில் 2.72 லட்சம் கோடி தள்ளுபடி!; ஏழைகளை மட்டும் வஞ்சிக்கும் அரசு

கடந்த நான்கு ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகளில் பெரு முதலாளிகள் வாங்கியிருந்த கடனில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 558 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ஓர் ஏழை விவசாயி வாங்கியிருந்த டிராக்டர் கடனை வசூலிக்க அடியாள்களை அனுப்பும் வங்கி நிர்வாகங்கள், சர்வ வல்லமை படைத்த பெரு முதலாளிகளிடம் கைக்கட்டி நின்று சேவகம் செய்கிறது. பொய்த்துப் போன வானத்தால், கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விவசாயிகளை அடித்தே கொல்கின்றனர் வங்கியாளர்களும், காவல்துறையினரும்.

கடனை பெற்றுவிட்டு, அதையும் திருப்பிச் செலுத்தாமல் போக்குக் காட்டிவரும் பெரும் பணமுதலைகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வழியனுப்பி வைக்கிறது இந்திய அரசு. கல்விக்கடன் கேட்டாலோ, முத்ரா திட்டத்தில் சில லட்சங்களை தொழில் தொடங்க கடன் கேட்டுச் செல்லும் சாமானியர்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு வதைக்கும் வங்கியாளர்களை, வெகுசன மக்கள் ஒருபோதும் ரசிப்பதில்லை.

இந்திய அரசியல் அமைப்புகளில் உள்ள அடிப்படை கோளாறுகளே இதுபோன்ற முரண்களுக்குக் காரணம். அதற்காக, சாமானியர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சொல்லிவிட முடியாது.

நாளது தேதி வரை நாட்டில் உள்ள அனைத்துப் பொதுத்துறை வங்கிகளிலும் 8.61 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வராக்கடன் உள்ளது. இவற்றில் பெரும் பகுதி, அரசியல் மட்டத்திலும் அதிகாரம் படைத்திருக்கும் பெரு முதலாளிகள் வாங்கியது.

”வங்கியில் கடன் பெற்ற ஒருவர் அசல், வட்டித்தொகையை தொடர்ந்து மூன்று மாதங்கள் செலுத்தாமல் இருந்தால் அதை வராக்கடன் கணக்கில் கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது. இந்த விதிமுறையில் திருத்தம் செய்த ரிசர்வ் வங்கி, தொடர்ந்து 30 நாள்கள் வரை அசல், வட்டியைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலே அதை வராக்கடன் கணக்கில் கொண்டு செல்ல உத்தரவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 31ம் தேதி நிலவரப்படி வங்கிகளின் வராக்கடன்கள் தணிக்கை செய்யப்பட்டு, அதன் விவரங்கள் அந்தந்த வங்கிகளின் போர்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின் வராக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து நடுவண் அரசும், சம்பந்தப்பட்ட வங்கிகளின் போர்டும் முடிவெடுக்கின்றன. கடன் தள்ளுபடி குறித்து எந்த ஒரு வங்கியும் தன்னிச்சையாக முடிவெடுத்திட முடியாது.

கடந்த ஆண்டு மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு 1.22 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. அதில் வராக்கடன் கணக்கில் 72 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளனர். உழைத்து லாபம் சம்பாதித்துக் கொடுப்பது நாங்கள். ஆனால் பலன் அடைவது பெருமுதலாளிகளா? என்றுகூட கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தோம்.

கடனைப் பெற்றுத்திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலும் வாடிக்கையாளர்களின் பெயர், விவரங்களை பாதுகாக்க வேண்டியது வங்கியாளர்களின் கடமை.

ஆனாலும், மனசாட்சிப்படி கடமையாற்றும் வங்கியாளர்கள் மூலம்தான் நீரவ் மோடி, கனிஷ்க் நகைக்கடைக்காரர், விக்ரம் கோத்தாரி போன்ற பெரு முதலாளிகளின் மோசடிகள் மறைமுகமாக வெளியே கசிய விடப்படுகிறது,” என்கிறார் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகி ஒருவர்.

பொதுத்துறை வங்கிகள் கடந்த 2014-15, 2015-16, 2016-17, 2017-18 (31-12-17 முடிய) வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் வராக்கடன் கணக்கில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 558 கோடியை தள்ளுபடி செய்துள்ளது.

மொத்த வராக்கடனில் 29343 கோடி ரூபாய் மட்டும் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதாவது, தள்ளுபடி செய்யப்பட்ட வராக்கடன் மதிப்புடன் ஒப்பிடுகையில் வசூலான தொகை வெறும் 10.8 விழுக்காடு மட்டுமே.

இதுபோன்ற நடைமுறைகள் முந்தைய ஆட்சிகளிலும் இருந்தன என்பதற்காக ஒரே தவறு தொடர வேண்டும் என்பதில்லை. புதிய இந்தியா பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் நரேந்திர மோடி, வராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் சாமானியர்களின் ரத்தம் உறிஞ்சப்படுவதைத் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

– அகராதியார்.