Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடு இலவசம்! ”வேளாண் புரட்சியில் கோவை இளைஞர்”

“இந்த சமுதாயம்தான் நமக்கு எல்லாமே கொடுத்தது; கொடுத்து வருகிறது. நாமும் அதற்குரிய நன்றிக்கடனைச் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம். அதற்காகவே, இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சொந்த செலவில் நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறோம்,” என்று தீர்க்கமாக பேசுகிறார் மோகன்ராஜா.

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜா (37). இயற்கை மீதான நேசத்தின் வெளிப்பாடாக, ‘காமதேனு’ விவசாயிகள் மற்றும் நாட்டு மாடுகள் நல்வாழ்வு அறக்கட்டளை’யை நிறுவி, பாரம்பரிய விவசாயத்தில் ஈடுபடும் உழவர்களை ஊக்குவிக்க, நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

அவருடனான உரையாடலில் இருந்து…

“நாட்டுப் பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. ரத்த அழுத்தம், நீரிழிவு, வாதம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் நம்மை அண்டாமல் தடுக்க, இயற்கை நமக்கு அளித்த கொடைதான் நாட்டு மாட்டினங்களும் அவை தரும் பாலும்.

நம் பாரம்பரிய, இயற்கை விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான், இயற்கை விவசாயிகளுக்கு நாட்டு மாடுகளை இலவசமாக வழங்கி வருகிறேன். சில நிபந்தனைகளுடன் இந்த சேவையை செய்து வருகிறேன்.

குறைந்தபட்சம் இரண்டு ஏக்கர் பரப்பளவிலாவது நம் பாரம்பரிய விவசாயத்தை செய்து வர வேண்டும். அந்த நிலம், சொந்த இடமாகவோ அல்லது குத்தகை நிலமாகவோ இருக்கலாம். அடுத்து, இயற்கை விவசாயம் செய்து வருவதற்கான அரசு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நிபந்தனைகளின் பிரதான அம்சங்கள் இவைதான்.

பயனாளிகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கிறோம். மொத்தம் நான்கு விதமான குலுக்கல் நடைபெறும். முதலாவது குலுக்கல், கோவை மாவட்டத்திற்கானது; இரண்டாவது, பிற மாவட்ட பயனாளிக்கானது; மூன்றாவது குலுக்கல், காவல்துறை-ராணுவத்துறை குடும்பத்திற்கானது; நான்காவது குலுக்கல், பிற மாநில இயற்கை விவசாயிகளுக்கு.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை குலுக்கலை நடத்தி, பயனாளிகளைத் தேர்வு செய்கிறோம்,” என்றார்.

இதுவரை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் மூன்று பேருக்கும், மதுரை மற்றும் கடலூரைச் சேர்ந்த விவசாயிகள் தலா ஒருவருக்கும் என ஐந்து பேருக்கு நாட்டு மாடுகள் வழங்கி உள்ளார், மோகன்ராஜா.

“நம் நாட்டு மாடுகளை குறிப்பாக காளைகளை ஒழிக்க ‘பீட்டா’ போன்ற அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகின்றன. வீரியமிக்க நம் நாட்டுக் காளைகளை ஒழித்துவிட்டால், பின்னர் நாட்டுப்பசுக்களை ஊசி மருந்துகள் மூலம் செயற்கையாகத்தான் கருவூட்ட முடியும். இதற்காக நாம் வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஒரு ஆண் மகன் இருந்தால் என்னென்ன செய்வானோ அத்தனை பணிகளையும் ஒரு காளையும் செய்யும். இயல்பிலேயே நாட்டுக்காளைகளுக்கு இழுவைத்திறன் அதிகம்.

இனவிருத்திக்காக மட்டுமின்றி வண்டி இழுக்க, உழவுப்பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாட்டு மாட்டின் சாணத்தில் மண்ணை வளமாக்கும் நுண்ணுயிரிகள் அதிகமாக பெருக்கம் அடைகின்றன.

ஒரு நாட்டு மாட்டின் சாணம் இருந்தால்போதும், மூன்று, நான்கு ஏக்கர் நிலத்தில் ரசாயன உரம் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்துவிட முடியும்.

நாட்டு மாட்டின் சாணம், கோமியத்தின் மூலம் நிலம் காப்பாற்றப்படுகிறது. மண், நீரோட்டத்துடன் இருக்கும். மண்ணின் ஈரப்பதம் நீராவியாகி மழை பொழியும். நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படுகிறது. இப்படி பல வழிகளில் நமக்கு நாட்டு மாடுகள் பயன் தருகின்றன. இதுகுறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,” என்றார்.

சூழ்நிலை, பயனாளியின் தேவைக்கேற்ப நாட்டுக்காளை அல்லது நாட்டுப்பசுவை இலவசமாக வழங்கி வரும் மோகன்ராஜா, தரமான மாடுகளை வழங்குவதற்காக நிறையவே மெனக்கெடுகிறார். தானமாக வழங்கும் மாடுகள் குறைந்தபட்சம் இருபத்தைந் தாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட விலை கொண்டவை.

“லட்சக்கணக்கில் செலவழித்து இப்படி மாடுகளை தானமாக வழங்குவதால் மட்டுமே இயற்கை விவசாயம் செழித்து விடுமா?,” என்று கேட்டோம்.

ஒரு காலத்தில் தமிழர்கள், இந்தியர்கள் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக இருந்தனர். ஆனால் பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சிகள் மூலம் நம்மை நோயாளி களாக்கி விட்டனர். ஆரோக்கியம் கீழே சென்றுவிட்டது.

இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். பாரதியும், புத்தரும் அவர்கள் வாழ்ந்த காலத்தைவிட, இப்போதுதான் அதிகமாக நினைவுகூரப்படுகிறார்கள். அதுபோல்தான் என்னுடைய முயற்சிகளும்.

இயற்கை விவசாயத்தைக் காக்க என்னால் இயன்றதைச் செய்கிறேன். இன்று நான் விதை தூவி இருக்கிறேன். விதைத்த உடனே கனி கிடைத்துவிடாது. ஆனால், அதன்பலனை ஒருநாள் இந்த சமுதாயம் நிச்சயமாக பெற்றே தீரும் என்று நம்புகிறேன்,” என்றார் மோகன்ராஜா.

//‘அம்சவள்ளியும் மோகனாவும்’//

மதுரை மாவட்டம் எழுமலையைச் சேர்ந்தவர் சடையாண்டி. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. இப்போது முழுநேர இயற்கை விவசாயி. மோகன்ராஜா நடத்திய குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுள் ஒருவர். அவரிடம் இருந்து நாட்டுப்பசுவை குலுக்கலில் வென்றவர்.
மோகன்ராஜாவுடனான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

“இயற்கை விவசாயத்தைக் காக்க வேண்டும் என்பதில் மோகன்ராஜா, கொள்கை ரீதியாக ரொம்பவே தீவிரமாக இருக்கிறார். குலுக்கலில் வெற்றி பெற்றாலும் அவர் தானமாக வழங்கும் நாட்டு மாடுகளைப் பெறக்கூடியவர்கள் அதற்கு தகுதியானவர்தானா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்தே வழங்குகிறார். அவர் நேரில் வந்து விவசாய முறைகளை பார்வையிட்டார்.

பாரம்பரிய விவசாயம் செய்து வருவதை அறிந்த அவர் எனக்கு ஒரு நாட்டுப் பசுவை வழங்கினார். அந்த மாடு அப்போது சினைபிடித்து இருந்தது.

அதற்கு அவர் சில நிபந்தனைகளையும் விதித்தார். எக்காரணம் கொண்டும் தானமாக பெறப்பட்ட நாட்டு மாட்டை விற்கக்கூடாது; பசு ஈனும் முதல் கன்றுக்குட்டியை அவருக்கே தந்துவிட வேண்டும். ஒருவேளை, மாட்டை விற்பதாக இருந்தால் அவரிடமே விற்றுவிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்தார்.

அவரிடம் இருந்து பெற்ற மாட்டுக்கு நாங்கள் ‘அம்சவள்ளி’ என்று பெயரிட்டு பராமரித்து வருகிறோம். அந்த மாடு தற்போது ஒரு பெண் கன்றை ஈன்றுள்ளது. அதற்கு,’மோகனா’ எனப் பெயர் சூட்டியிருக்கிறோம். அவருடைய உயர்ந்த பண்பும், பேச்சும் என் கண் முன்னாடியே இருக்கிறது,” என்றார்.

விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் நிச்சயம் மோகன்ராஜாவுக்கும் இடமுண்டு.

தொடர்புக்கு : 98422 29687.

( “புதிய அகராதி” சந்தா தொடர்புக்கு: 98409 61947).