Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

 

 

எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:

 

எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

 

முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளுடன் இணையுங்கள். பல கிராமங்களில் சுடுகாட்டுக்குப் போக சாலை வசதி இல்லை. உழைக்கும் தொழிலாளர்கள் செல்லும் பாதையில் சாலை வசதி இல்லை. விவசாயிகள் சென்று வர சாலை வசதி இல்லை. இருக்கின்ற பசுமையை எல்லாம் அழித்துவிட்டு, பத்தாயிரம் கோடியில் பசுமைவழிச் சாலை போடுவது என்பது சுத்த அயோக்கியத்தனம்.

 

அரசுக்கு தெரிந்தோ தெரியாமலோ முதல்வரின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் இப்போது வருமானவரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. மோடியுடன் எடப்பாடி பழனிசாமி இணக்கமாக இல்லை என்பதையே இந்த சோதனைகள் காட்டுகின்றன. இந்த அரசு ஊழல் அரசு என்று பாஜக தலைவர் அமித்ஷா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். இதே கருத்தை, அவர் பாஜக ஆளும் மாநிலங்களில் சென்று சொல்லி விட முடியுமா?

 

 

இப்போதுள்ள ஊழலைவிட ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திற்குள்ளேயே புகுந்து ரெய்டு நடத்தினார்கள். உண்மையில் அப்போதுதான் ஊழல் அதிகமாக நடந்துள்ளது. மத்திய அரசு தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்காகவே வருமானவரித்துறை, சிபிஐ மூலம் இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. இதுபோன்ற ரெய்டுகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் நடந்தது.

 

 

மக்களை பாதிக்கும் திட்டங்களை எதிர்ப்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கின்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர்.

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்டது யார்? என்பது எனக்குத் தெரியும். உண்மையிலேயே அதுபற்றி அப்போது முதல்வருக்கு தெரிந்திருக்காது என்றுதான் கருதுகிறேன். ஏனென்றால் நானே டிவியில் வந்த செய்தியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டேன் என்று முதல்வரே வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடிதான் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை.

 

 

ஆனாலும் ஒரு விதத்தில் எடப்பாடி பழனிசாமி கில்லாடிதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியையும் கட்சியையும் கில்லாடித்தனமாக கைப்பற்றியிருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர மோடி நினைப்பது வேதனையாக இருக்கிறது.

 

 

இந்த எட்டு வழிச்சாலை மக்களுக்கான சாலை அல்ல. சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்பு, மாக்னசைட் உள்ளிட்ட கனிமங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்காகவே போடப்படுகிறது. இங்கிருந்து கனிமங்களை நேரடியாக துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தைக் கொண்டு வருகின்றனர். எட்டு வழிச்சாலைத் திட்டத்தை தடுத்த நிறுத்த விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து போராடும்.

 

 

இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

 

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார், வன்னியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக, அக்கட்சியினர் ‘கைவிடு கைவிடு எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடு’, ‘எடப்பாடி அரசே மோடி அரசே வேண்டாம் வேண்டாம் எட்டுவழிச்சாலை வேண்டாம்’ என்று முழக்கங்களை எழுப்பினர்.