Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரோசாப்பூ ரவிக்கைக்காரி – நந்தினியும் செம்பட்டையும் கலாச்சார மாற்றத்தின் முதல் பலியாடுகள்!

பழமையில் ஊறிப்போயிருக்கும்
சமூகதளத்தில் புதிய கலாச்சார
மாற்றத்திற்கான வாயில் கதவுகளை
திறந்து வைத்து, பெரும் தாக்கத்தை
ஏற்படுத்திய படம் என்ற பெருமை,
‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’க்கு உண்டு.
1979, மே 18ல் வெளியானது.
தேவராஜ் – மோகன் என்ற
இரட்டை இயக்குநர்களின்
அற்புத படைப்பு. ஏற்கனவே,
அன்னக்கிளியில் வெற்றிக்கொடி
நாட்டியவர்கள்தான். எனினும்,
இவர்களிடம் இருந்து ரோசாப்பூ
ரவிக்கைக்காரி என
உலகப்படங்களின் தரத்தில்,
இன்றளவும் ‘கல்ட்’ (Cult)
வகைமையிலான படம் வரும்
என்ற எதிர்பார்ப்பு அவ்வளவாக
இல்லாத காலக்கட்டம் அது.

இந்தியா, சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நிகழும் பீரியட் படம்தான் இந்த ரோ.ர. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ரோ.ர. பற்றி ஒரு மீளாய்வாகவே எழுதுகிறேன். சேலம் மாவட்டத்தின் வண்டிச்சோலை எனும் சிறிய மலைக்கிராமம்தான் ரோ.ர.வின் கதைக்களம். மண்ணின் மைந்தனாக இருந்தும் வண்டிச்சோலை கிராமம் எங்கே இருக்கிறது என்பது பற்றிய தகவல் இல்லை. கொலம்பஸ் போல நானும் அந்த கிராமத்தை தேடி கண்டுபிடிக்கும் நிலையில்தான் இருக்கிறேன்.

 

பட்டணத்து வாசனையே இல்லாத,
ஆணாதிக்கமும் அடிமைத்தனமும்
நிறைந்த, பழமைத்துவ கோட்பாடுகளில்
திளைத்து, அதையே நியாயப்படுத்தும்
சிற்றூர்தான் இந்த வண்டிச்சோலை.
இந்த ஊரைச் சேர்ந்த செம்பட்டை
(சிவகுமார்), நகரத்துக்கும்
கிராமத்துக்குமான இணைப்பு
ஊடகமாக இருக்கிறான்.
திரிசடை, மழிக்காத தாடி,
அரை டிரவுசர்… இதுதான்
செம்பட்டையின் தோற்றம்.

 

ஊரில் உள்ள பெண்களும்
ரவிக்கை (ப்ளவுஸ்), உள்ளாடை (ப்ரா),
பாவாடை அணிவதில்லை.
ரவிக்கை, ப்ரா பற்றி ஓரிரு
பெண்கள் கேள்விப்பட்டு
இருக்கிறார்களே தவிர,
அவர்களும் அவற்றைப்
பார்த்ததில்லை. ஒற்றை சேலைதான்
பெண்களின் ஒரே உடுப்பு.
சாக்கின் மொத்தத்தில்
தைக்கப்பட்டிருக்கும் அந்த
சேலைதான், அடிபிடிக்கு
தாங்குமாம். சிறுவர்களுக்கும்
வட்டு கிராப்தான். சட்டித்தலையன்
என்று சிறுவர்கள் சகஜமாக
கிண்டல் செய்து கொள்கிறார்கள்.

 

தலையில் ஒரு கூடையைச்
சுமந்து கொண்டு, வெற்றிலை
விற்பதுதான் செம்பட்டையின்
தொழில். என்றாலும்,
சொந்த ஊர் சனங்களுக்கு
பட்டணத்தில் இருந்து தேவையான
பொருள்களை வாங்கி வந்து
சேர்ப்பதும், அதற்காக அவர்கள்
தரும் கூலியும்தான் செம்பட்டைக்கு
கூடுதல் வருமானம். அவனை
நம்பிதான் கணவரை இழந்த
அவனது தாய், அண்ணன், அண்ணி,
அவர்களுடைய சிறிய மகள்
கருப்பாயி ஆகியோர்
இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான்
செம்பட்டைக்கு திருமண
ஏற்பாடுகள் நடக்கின்றன.
சேலத்தை அடுத்த
மன்னார்பாளையத்தில் வசிக்கும்
நந்தினியுடன் (தீபா) திருமணம்
நடக்கிறது. பட்டணத்தில்
எட்டாம் வகுப்பு வரை படித்து,
நாகரிக மங்கையாக இருக்கிறாள்.
நாகரிகமாக வளர்ந்த பெண்
என்பதால், தலையில் எப்போதும்
ரோசாப்பூ சூடியிருக்கிறாள்.
ரவிக்கையும், ப்ராவும்
அணிந்திருக்கிறாள். கிராமங்களில்,
ஜாக்கெட் தைக்கும்போது
தோள்பட்டையில் பஃப் வைத்து
தைக்க வேண்டும் என்பார்கள்.
அப்படி தைக்கப்பட்ட ரவிக்கை.
உள் பாவாடை அணிந்திருக்கிறாள்.

சாக்கின் தரத்தில் சேலை
அணிந்த பெண்கள் உள்ள
சிறு கிராமம்; நாகரிக வளர்ச்சியே
எட்டாத அந்த ஊருக்குள் நவயுக
மங்கையான செம்பட்டையின்
மனைவியாக ஊருக்குள்
நுழைகிறாள் நந்தினி எனும்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி.
ஊர் மொத்தமும் அவள்
உடுத்தியிருக்கும் உடைகளைப்
பார்க்கவே கூடி நிற்கிறது.
மட்டுமல்ல. தங்கச்சிலை போன்ற
அவளின் அழகும் உள்ளூர்
பெண்களையும் ஆண்களையும்
அவள் பக்கம் ஈர்த்து இருக்கிறது.
‘நம்ம செம்பட்டைக்கு இப்படி
ஒரு அலவான பொண்ணா…
லவுக்க…. பாடி எல்லாம்
போட்டிருக்காளாம்ல…,’
என அவள்தான் ஊரின்
பேசு பொருளாக இருக்கிறாள்.
(ப்ராவை பாடி என்றும்,
ரவிக்கையை லவுக்கை என்றும்,
அழகு என்பதை அலவு என்றும்
வட்டார வழக்கில்
சொல்கிறார்கள்).

 

முதலிரவு அறையில்,
நந்தினியை வெறிக்க வெறிக்கப்
பார்க்கும் செம்பட்டை,
இது என்ன? என்று கேட்கிறான்.
இதுதான் ரவிக்க என்கிறாள்.
அதுக்குள்ள ஒண்ணு
போட்டிருக்கியே அது என்ன…?
அதுதான் பாடி. இந்த
புழுக்கத்துல எப்படித்தான்
இத்தனை துணிமணிய
போட்டிருக்கியோ எனக்கூறும்
செம்பட்டை, இது என்ன?
என்று சிறு பாட்டிலை
எடுத்து காட்டுகிறான்.
அதற்கு நந்தினி, இதுதான்
சென்ட். உடம்புல பூசிக்கிட்டா
வாசனையா இருக்கும் என்கிறாள்.
பூசி பாருங்க என நீட்டுகிறாள்.
இதை எங்க பூசிக்கிறது? என
அப்பாவியாய் கேட்க,
நான் எங்க சொல்றேனோ
அங்க எனக்கு பூசி விடுங்க.
நான் உங்களுக்கு பூசி விடறேன்
என்கிறாள். கழுத்து, மார்பு என
ஒவ்வொரு இடமாகச் சொல்ல,
செம்பட்டை அதுவரை அப்படி
ஒரு அழகுப்பெண்ணை
அருகில் பார்த்ததில்லை.
கிலேசமுறுகிறான்.
கலவி கொள்கிறார்கள்.
‘அய்யோ முரட்டுத்தனமா
கட்டிப்பிடிக்கிறீங்களே…?’
என அங்கேயே முதல்
பிணக்கு ஏற்படுகிறது நந்தினிக்கு.

 

மறுநாள் காலை.

 

குளிக்கற இடம் எங்கே இருக்கு?
என பக்கத்துவீட்டு சிறுவனிடம்
கேட்கிறாள் நந்தினி.
குளிக்கறதுக்கு குளத்தாங்கரை….
மத்ததுக்கெல்லாம் சோளக்காடுதான்
என்று சொல்லிவிட்டு கடந்து
போகிறான். அவள் பல்பொடி
கொண்டு துலக்க, செம்பட்டையோ
அடுப்பு கரித்துண்டை ‘கறக்முரக்’
என்று கடித்து பல் துலக்குகிறான்.

 

அதிகாலையில்,
சேவல் கூவும்போது
எழுந்து கொள்ளும் வழக்கம்
செம்பட்டையின் தாயாருக்கு
உண்டு. ஊர் மொத்தமும்
அப்படித்தான். நந்தினி, நகரத்தில்
வளர்ந்த பெண் என்பதால்
நீண்ட நேரம் கழித்தே
எழுந்திருக்கிறாள்.
காலையில் தூக்கத்தில்
இருந்து விழிக்கும்
அவளின் உடல் மீது
கோழிகள் மேய்ந்து
கொண்டிருக்க,
அசூயை அடைகிறாள்.
குளிக்காத மனிதர்கள்,
அழுக்கான உடைகள்,
நாகரிகமற்ற பேச்சு,
கால்நடைகளின் வீச்சம்
என எதுவுமே பிடிக்காமல்
திணறுகிறாள்.

 

தாமதமாக எழுந்திருக்கும் நந்தினியை மாமியார் வார்த்தையால் வறுத்தெடுக்கிறாள். ”இங்க பாருடி… உன் உடுப்பெல்லாம் இங்க சரிப்பட்டு வராது. அடிபிடிக்கு இந்த சேலைதான் சரியா இருக்கும். போய் கட்டிக்க” என அவள் உடுத்தி இருப்பதுபோன்ற சாக்கு தரத்திலான ஒரு சேலையை கொடுக்கிறாள். அந்த சேலையை வாங்கிய மாத்திரத்திலேயே வீட்டுக்கு வெளியே வீசி எறிகிறாள் நந்தினி. அவர்களுக்குள் மோதல் முற்றுகிறது. தந்தையுடன் பிறந்த வீட்டுக்குப் புறப்படுகிறாள். யார் பக்கம் நியாயம் என்று பேச முடியாமல் நிலைக்குத்தி நிற்கிறான் செம்பட்டை.

 

”அம்மா… அவள் ஊருக்குப் போறா… நான் வழியனுப்பிட்டு வந்துறட்டுமா…” என கெஞ்சும் செம்பட்டையிடம், ‘பொண்டாட்டிய மோப்பம் புடிச்சிக்கிட்டு போறதா இருந்தா அப்படியே போய்டு,’ என தெறித்து விழும் தாயாரின் திராவக பேச்சுக்குப் பிறகும், மாட்டு வண்டி பின்னாடியே நந்தினியை பார்க்க ஓடிச்செல்கிறான். செம்பட்டையின் அழைப்புக்கு அவள் இறங்கி வருவதாக இல்லை. நான் வேணும்னா… நீங்களே என்னை வந்து கூட்டிப்போங்க என்று சொல்லிவிட்டு தந்தையுடன் பயணிக்கிறாள்.

 

பிறகு தாயார் மனம் மாற, செம்பட்டை மனைவியை அழைத்து வர ஊருக்குப் போகிறான். யார் வீட்டிலும் வானொலி பெட்டி இல்லாத வண்டிச்சோலைக்கு, செம்பட்டைதான் நடமாடும் சேதி சொல்லி. அதனால் மகளின் விருப்பத்திற்காக பெரிய கிராமபோன் ஒன்றை வாங்கி அனுப்புகிறார் நந்தினியின் தந்தை. அதை மாட்டு வண்டியில் எடுத்து வரும்போது, அந்த கிராமஃபோன் பெட்டியை ஊரே ஆச்சர்யமாக பார்க்கிறது. நந்தினி திருமணமாகி வரும்போதும் அப்படித்தான் பார்த்தனர். அப்போது காட்டிய அதே ஆச்சர்யம் இப்போதும் ஊர் மக்களிடம் இருந்தது.

 

கிராமத்துப் பெண் ஒருவள்,
‘ஆத்தீ… அந்த பொட்டிக்குள்ளதான்
பாடுவாங்களாம். அதுக்குள்ள
எப்படி உட்காந்துக்கிட்டு பாடுவாங்க…?’;
இன்னொருவளோ, ‘ஆமா…
பொட்டிக்குள்ள பாடுறவங்களுக்கு
சோறு, தண்ணீலாம் எப்படி குடுப்பாங்க…?,’
விவரம் தெரிந்தவராக இன்னொரு
ஆண், ”போடீ… அந்தா தெரியுது
பாரு நீளமான கொழா… அதுவழியாத்தான்
சோறு, குழம்பெல்லாம் ஊத்துவாங்கடி…
இதுகூட தெரியலையா உனக்கு…,”
என்பார். அந்த கிராமஃபோனை
அப்படித்தான் அவர்கள் பார்த்தார்கள்.

 

பாட்டு கேட்பதற்காக
ஊர் மொத்தமும் நந்தினி வீட்டு
முன்பு கூடி நிற்பதை பார்த்த மாமியார்,
ஆத்திரத்தில் அந்த பெட்டியை
போட்டு உடைத்து விடுகிறார்.
”ஏன்டீ குடுத்தனம் இருக்கற வீடா…
இல்ல தேவடியா இருக்கற வீடா..”
என மாமியார் காறி உமிழ,
”நீங்கதானே இத்தன வருஷமாக
இங்க இருக்கீங்க. உங்களுக்கு
தெரியாதா இங்க இருக்கறது யாருன்னு,”
என சண்டைக்கோழியாய்
எகிறுகிறாள் நந்தினி.

 

அன்று இரவு வீட்டுக்கு
வரும் செம்பட்டை, மனைவியை
காணாமல் அதிர்ச்சியுறுகிறான்.
மாமியார், மருமகள் சண்டையை
அறிந்து கொண்ட அவன்,
ஊர் முழுக்க கையில் லாந்தர்
விளக்குடன் தேடுகிறான்.
அங்கே ஓரிடத்தில் விசும்பிக்
கொண்டிருக்கும் மனைவியை
கண்டுபிடித்தபோதுதான் தனது
தாயார், நந்தினியின் தொடையில்
சூடு வைத்திருப்பதை பார்த்து
மேலும் அதிர்ச்சி அடைகிறான்.
யார் பக்கம் பேசுவது என்று
தெரியாமல் கையறு நிலையில்
நொந்து போகிறான். விவகாரம்,
பாகப்பிரிவினை வரை செல்கிறது.

 

தங்களுக்கு பிரித்து
விடப்பட்ட மேட்டு நிலத்தில்
தனியாக வீடு கட்டி
குடியேறுகிறார்கள்
நந்தினியும் செம்பட்டையும்.
மகனின் பிரிவை தாளாத
அவனது தாயார், ”போடா போ…
ஒருநாள் அம்மாவோட
அரும தெரியும். எனக்குப்
பிறகும் வாழப்போறான்ல
அப்பவாவது நான் சொல்றத
புரிஞ்சுக்குவான்…” என
பொறுமுகிறாள்.

 

இந்த நிலையில்தான், ஆங்கிலேயே துரையிடம் மேலாளராக இருக்கும் மாணிக்கம் (சிவசந்திரன்) நந்தினியின் தந்தை அழைப்பின் பேரில் வண்டிச்சோலைக்கு வருகிறான். முதல் சந்திப்பிலேயே மாணிக்கத்தின் அயர்ன் செய்யப்பட்ட உடையும், அளவாக வெட்டப்பட்ட கிராப் தலை முடியும், தாடி மழிக்கப்பட்ட முகமும், இடை இடையே பேசும் ஆங்கிலமும் நந்தினிக்கு பிடித்துப்போய் விடுகிறது. இந்த கிராமத்தில் இப்படியொரு அழகுப் பதுமையா? என மாணிக்கத்துக்கும் அவள் மீது கிலேசம் ஏற்ப டுகிறது.

 

முதல் முறையாக வீட்டுக்கு வந்திருக்கும் மாணிக்கத்திற்கு தடபுடலாக விருந்து வைக்கிறார்கள். வா-ழை இலையில் பொரியல், சாம்பார் ஊற்றி பிசைந்து சாப்பி டுவதையும், கணவர் செம்பட்டை சாப்பாடு, பொரியல், ஊறுகாய் என எல்லாவற்றையும் குழைத்து சாப்பிடுவதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள். அப்பளத்தை சாப்பிடுகிற வலது கையிலும், வாயில் மென்று துப்பும் முருங்கைக்காய்களை இடது கையிலும் எடுத்துப் போடும் செம்பட்டையை பார்க்கும்போதே அவளுக்கு குமட்டல் வருகிறது. மனித நாகரிகத்திற்குள் இத்தனை பெரிய வேறுபாடா என புழுங்குகிறாள்.

 

மற்றொருமுறை நந்தினி வீட்டில் தனியாக இருக்கும்போது, மாணிக்கம் அங்கு வருகிறான். சேலத்துக்கு போயிருந்தேன். ஊரில் திருவிழாவாம். உங்க ரெண்டு பேரையும் திருவிழாவுக்கு வருமாறு உங்க அப்பா சொல்லச் சொன்னார் என தகவல் சொல்கிறான். அவனுக்கு அன்பாக காபி வைத்துத் தருகிறாள் நந்தினி.

 

இரவில் வீடு திரும்பிய
செம்பட்டையிடம் தந்தை சொல்லி
அனுப்பியதையும், மாணிக்கம் வந்து
போனதையும் சொல்கிறாள்.
”இப்போ எனக்கு தலைக்கு
மேல வேலை கிடக்கு.
யாராவது ஒருத்தரு போனா
போதும். நீ மட்டும் போய்ட்டு
வந்துடு. ஒண்ணு பண்ணு…
மாணிக்கம் ஜீப் எடுத்துட்டு வந்தா,
அவர் கூடவே போய்ட்டு வந்துடு”
என்கிறான். ஆனால்,
எதிர்பார்த்ததுபோல் மாணிக்கம்
ஜீப்பில் வராமல், புல்லட்டில்
வருகிறான். இருவரும் ஒன்றாக
பயணிக்கிறார்கள். மேடு, பள்ளத்தில்
செல்லும்போது இருவரின்
உடல்களும் உரசிக்கொள்ள,
அவர்களுக்குள் ஏற்கனவே
உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும்
காமத்தீயும் மேலும் ‘மளமள’வென
பற்றிக்கொள்கிறது. ஆள்
நடமாட்டமில்லாத வனப்பகுதியில்
இருவரும் கலவி கொள்கின்றனர்.

 

அடிக்கடி மாணிக்கம், செம்பட்டை இல்லாத நேரங்களில் அவனுடைய வீட்டுக்கு வந்து செல்வதை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த திருச்சங்காட்டான், ‘உன் பொண்டாட்டி முந்தானையில மண்ணு பட்டுடுச்சுடா’ என பலர் முன்னிலையில் எள்ளி நகையாடுகிறான். ஆத்திரம் அடையும் செம்பட்டை, அவனை அடித்து உதைக்கிறான். பிறிதொரு நாளில், மனைவியும் மாணிக்கமும் ‘ஒன்றாக’ வீட்டில் இருப்பதை பார்த்து விடும் செம்பட்டை, ஊருணியில் விழுந்து உயிர் துறக்கிறான். கணவன் பார்த்துவிட்ட குற்றவுணர்வில் ரோசாப்பூ ரவிக்கைக்காரியும் தூக்கிட்டு உயிர் துறக்கிறாள்.

 

நடிகர் சிவகுமாருக்கு
இது 100வது படம்.
அந்த ஆண்டில் அதிகளவில்
வசூல் செய்த படமும் கூட.
அந்தப் படத்தில் கிடைத்த
வருமானத்தில் இருந்துதான்
அவர் ஒரு கல்வி அறக்கட்டைளையை
அப்போது தொடங்கினார்.
அவருடைய 100 படங்களை
வரிசைப்படுத்தினால் முதலிடத்தில்
ரோசாப்பூ ரவிக்கைக்காரிதான் நிற்கும்.
வழக்கமாக, 100வது படமாக
ஆக்ஷன் படங்களையோ
அல்லது ஹீரோயிஸ படங்களையோ
தெரிவு செய்யும் நடிகர்கள்
மத்தியில் சிவகுமார் அழுத்தமான
கதை, வலுவான திரைக்கதையை
மட்டுமே நம்பி ரோ.ர.யை
தெரிவு செய்திருக்க வேண்டும்.
கமல்ஹாஸன், தனது 100வது
படமான ராஜபார்வையில்
பார்வையற்றவராக பாத்திரம் ஏற்க,
சிவகுமார் முன்னோடி எனலாம்.
ரோ.ர.யில் ஒளித்து மறைத்து
பேசத் தெரியாத கள்ளமில்லாத
செம்பட்டையாகவே வாழ்ந்திருப்பார்
மனிதர். லொடுக்கு பாண்டி
போல அவருடைய நடை,
அந்த பாத்திரத்திற்கே
உரிய பாங்கு.

 

பாகப்பிரிவினை பஞ்சாயத்துக்காக
வந்திருக்கும் ஊர் பெரியவர்களிடம்
பேசும் செம்பட்டை,
”ஆரு பக்கம் ஞாயம்னு
எனக்கு தெரியாதுங்க.
டவுனுல நாவரியமா சந்தோஷமா
இருந்த மாதிரி இருக்கோணும்னு
பொஞ்சாதி சொல்லுது.
அதுவும் ஞாயம்னு படுதுங்க.
நாவரியமாக இருந்தா குடி
கெட்டுப்போகும்னு அம்மா சொல்லுது.
இதுவும் ஞாயம்னு படுதுங்க.
ஆரு தப்பு பண்ணுனாலும்
கருப்பாயிதாங்க தண்டிக்கோணும்.
நாமலே சூடு வெக்கறது
பாவமில்லீங்களா…,” என
ஈன்றவள் பக்கம் நியாயமா?
மனைவி பக்கம் நியாயமா?
என இனம் காண இயலாமல்
கையறு நிலையில் பேசும்
காட்சியில் பெரிய அளவில்
ஸ்கோர் செய்திருப்பார்.

 

நந்தினியைப் போலவே வண்டிச்சோலையின் இளம் வயது பெண்கள்கூட ப்ரா, ரவிக்கை, உள் பாவாடை அணிய பிரியப்படுகின்றனர். ஒருமுறை திருச்சங்காட்டானிடம் அவனுடைய மனைவி, தனக்கும் அதுபோன்ற உடைகளை வாங்கித் தரும்படி கேட்க, அவனோ தென்னை மரத்தில் இருந்து கள்ளுப்பானையை கீழே நின்றிருக்கும் மனைவியின் தலை மீது போட்டு உடைக்கிறான். அதுபோன்ற நாகரிக உடைகள் தேவையற்ற செலவாக மட்டுமில்லாமல், வீணான வேலையாகவும் பழமைவாதம் ஊறிப்போய் கிடக்கிறார்கள் வண்டிச்சோலை மக்கள். அப்படி இருந்தும் ஊரில் சில பெண்கள் செம்பட்டையிடம் ரகசியமாக காசு கொடுத்து அனுப்பி, உள்ளாடைகளை வாங்கி அணிந்து மகிழ்கிறார்கள்.

 

இந்த நிலையில்தான்,
செம்பட்டைக்கு எதிராக
ஊர் பஞ்சாயத்து கூடுகிறது.
”இவனால்தான் பாடி, லவுக்கனு
போட்டு நம்ம ஊர்
பொம்பளைங்கள்லாம்
கெட்டுப்போய்ட்டாங்க.
இவன்தான் எல்லாருக்கும்
டவுனுல இருந்து வாங்கியாந்து
கொடுக்கிறான். அது
மட்டுமில்லீங்க. இவன்
அந்த வெள்ளைக்கார
துரைக்கு கங்காணி வேலை
பார்த்து, வெள்ளைக்கல்
குவாரிக்கு ஆளெடுக்கிறேனு
சொல்லிப்போட்டு, பர்மாவுக்கு
ஆளனுப்பி வெச்சிட்டான்,” என
செம்பட்டைக்கு எதிராக
புகார்களை அடுக்குகிறார்கள்
ஊர்க்காரர்கள். அதற்குள்
ஒரு தரப்பு, செம்பட்டையை
போட்டு சரமாரியாக
அடித்து உதைக்கிறது.

 

அத்தனை அடி, உதையையும் வாங்கிக் கொண்டு, தான் சொல்வதைக்கூட காது கொடுத்து கேட்க நாதியற்ற நிலையில் சிவகுமார் கலங்கி தவிக்கும் அந்தக்காட்சியில் ரசிகர்களை உருக வைத்து விடுகிறார். செம்பட்டைக்கு பஞ்சாயத்தார் 50 ரூபாய் குத்தம் விதிக்கின்றனர். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கிட்டுங்க போவேன் என கெஞ்சும்போதும், அது போதாதுங்க. 100 ரூவா குத்தம் போடணும்ங்க என கொதிக்கிறது இன்னொரு தரப்பு. செம்பட்டை மீது எப்போதும் பிரியத்துடன் இருக்கும் பண்ணையார் வினுச்சக்கரவர்த்தி, அந்த குத்தத்துக்கான பணத்தை பஞ்சாயத்தார் முன்னிலையில் வீசி எறிகிறார்.

 

”இவனுக்கு குத்தம்
போடறது ஞாயம்னா…
உங்க வூட்டு பொம்பளைங்க
சொல்லித்தானேய்யா இவன் பாடி,
லவுக்கனு வாங்கியாந்து கொடுத்தான்.
அப்ப உங்க வூட்டு பொம்பளைங்களுக்கு
என்ன குத்தம் போடப்போறீங்க?
அப்பப்ப பட்டணத்து சேதியெல்லாம்
நமக்கு வந்து சொல்லுவான்.
அப்படித்தான் வெள்ளக்கார தொர,
ஆளெடுக்கிறது பத்தி சொல்லியிருக்காரு.
அதையும் வந்து சொன்னான்.
பண்ணை வேலைக்கு ஆள் இல்லாம
தடுமாறிட்டு இருக்கும்போதும்,
பணத்தாச பிடிச்சிப் போயித்தானேய்யா
வெள்ளக்கல் குவாரிக்கும்
பர்மாவுக்கும் போனீங்க…
நீங்க பண்றதெல்லாம் பண்ணிட்டு
இப்ப வந்து இவனை போயி
குத்தம் சொல்றீங்க…செம்பட்ட
இல்லைனாலும் மாற வேண்டிய
கலாச்சாரம் மாறிட்டேதான்யா
இருக்கப் போவுது. இங்கிருந்து
பட்டணத்துக்கு போறவன்
போய்க்கிட்டுதான் இருக்கப் போறான்…,”
என பரிந்து பேசுகிறார்.
அந்தக் காட்சியில், நேயமிக்க
மனிதனாக வினுச்சக்ரவர்த்தி
அசத்தி இருப்பார்.

 

படம் முழுக்க பரவலாக குறியீடுகளாலும், இடக்கரடக்கலாகவும் இடம் பெற்றிருக்கும் வசனங்களும், காட்சிகளும் படத்தை மேலும் அழகூட்டி இருக்கின்றன. எந்த ஓர் உலகப்படங்களுடன் ஒப்பிட்டாலும் கொஞ்சமும் சோடை போகாது ரோ.ர. நேர்க்கோட்டில் திரைக்கதையை நகர்த்தி இருப்பார்கள் இயக்குநர்கள். நகைச்சுவைக்கென தனி நடிகர்கள் இல்லாது போனாலும் கிராமத்துக்கே உரிய அப்பாவித்தனமான வசனங்களும், காட்சிகளும் ரசிகர்களை சிரிக்க வைக்கத் தவறவில்லை.

 

செம்பட்டை,
நந்தினி தவிர செம்பட்டையின்
தாயாராக நடித்திருப்பவரும்
பெரிய அளவில் ஸ்கோர்
செய்திருப்பார். அவர் வரும்
பல காட்சிகளில் கிராமத்திற்கே
உரிய சொலவடைகளும்,
பழமொழிகளும் வந்து விழும்.
மற்ற பாத்திரங்களிடமும் அத்தகைய தன்மை இருக்கவே செய்கிறது.

 

”கறக்கிறது உழக்கு பாலு… உதைக்கிறது பல்லு போக”, ”எறக்குடி கூடைய… வாடி மல்லுக்குனு நிக்காத… போய் மளமளனு வேலைய பாரு…” ”வித்தார கள்ளி வெறகு பொறுக்க போனாளாம். கத்தாழ முள்ளு கொத்தோட ஏறுச்சாம்…”, ”செய்யற வேலைய விட்டுப்போட்டு செனை ஆட்டுக்கு வேலைய பாக்குற” என பரவலாக விரவிக்கிடக்கும் சொலவடைகள் வசனங்களை மேலும் அழகூட்டுகின்றன.

 

இந்தப்படம் வந்த காலக்கட்டத்தில், இசைஞானி இளையராஜாவின் முந்தைய படங்களின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் கோட்டை கட்டிய நேரம். ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலும் அவர் குறை வைக்கவே இல்லை. மொத்தமே நான்கு பாடல்கள்தான். ஒவ்வொன்றும் இன்றைக்கும் கேட்கத் தூண்டும் ரகங்கள். ‘வெத்தல வெத்தல வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ…’ என்று ஒரு பாடல். நாயகனின் குணநலன்கள் மட்டுமல்ல; வண்டிச்சோலையின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லும் பாடலாகவும் அமைந்திருந்தது.

 

வயலில் ஏரோட்டும் உழவன்,
துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டிகள்,
குலை தள்ளி நிற்கும் வாழை
மரங்கள், மந்தையாக திரண்டு
வரும் கறவை மாடுகள்,
மேய்ச்சலுக்கு போகும் ஆடுகள்,
வாசலில் இட்லி சுட்டு
விற்கும் ஆயா, தாகம் என்றால்
தண்ணீருக்கு பதில் இளநீர்
அருந்தும் மூதாட்டி, கோவணம்
கட்டிய சிறுவர்கள், தானியங்களை
சுத்தப்படுத்தும் பெண்கள் என
கிராமத்து அழகியலையும்,
தற்சார்பு பொருளாதார
வாழ்வியலையும் அந்த
ஒரே பாடலில் அற்புதமாக
கேமராவில் சுருட்டி வந்திருப்பார்
ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத்.
ஊரில் உள்ளோரின் ஏவல்
பிள்ளையாக இருக்கும்
செம்பட்டையே, சோதாப்பயலே
என விளிக்கும் அளவுக்கு
அவனுக்கு உதவியாக
இருவர் இருக்கிறார்கள்.
அவர்களில், ஒருவர் ‘லூஸ்’ மோகன்.

 

தனக்கு திருமணம் நடக்கும்
தகவலையும் இந்தப் பாடலினூடாக
ஊர் பெரியவர்களிடம் சொல்லி
விட்டுப் போகிறான், செம்பட்டை.
வீட்டு வாசலில் இட்லி சுட்டு
விற்கும் ஆயாவிடம் இட்லி வாங்கும்
சிறுவன், ‘வர வர இட்லி இளைச்சுட்டே
போகுது ஆயா,’ என
எள்ளலாகச் சொல்ல,
கோபம் அடையும் ஆயா,
”ஓரணாவுக்கு நாலு இட்லி
கொடுத்தா இப்படிதான்டா பேசுவ.
பாரு பாரு… ரெண்டணாவுக்கு
ஒரு இட்லி வாங்கற காலம் வரும்,”
என்பார். இப்படி மனுஷங்க
வயிற்றுப் பசியை பார்த்து சொற்ப
காசுக்கு இட்லி விற்கும் ஆயாக்கள்
இப்போதும் நகரத்தின் சின்ன
தெருக்களில் இருக்கவே
செய்கிறார்கள்.

 

அதேநேரம், பவன்கள் பெயரில் உணவகத் தொழிலில் கொடி கட்டிப்பறக்கும் முதலாளிகள், 2 இட்லி கேட்டால், நம்மை கேட்காமலேயே மெதுவடை ஒன்றையும் கூடவே வைத்து கல்லா கட்டுகின்றனர். அதுவும் 30 ரூபாய்க்கு கீழ் ‘பில்’ தொகை இல்லை என்று, நாம் குறைந்தபட்சம் சாப்பிடும் அளவையும் தீர்மானிக்கின்றன இன்றைய நகரத்து உணவகங்கள்.

 

இட்லி சுடும் ஆயா, பட்டணத்தில் இருந்து வரும்போது ஏலக்காய், பத்தமடை பாய், சின்ன கருப்பட்டி கூடவே மூக்குப்பொடி டப்பியும் ரகசியமாக கேட்டிருப்பார். அதையெல்லாம் மனதில் இறுத்திக் கொள்வதாகவே பாடலினூடாக சொல்லிப் பார்த்துக் கொள்கிறான் செம்பட்டை. அதுவும் இப்படி…

 

”கேட்டாங்க கேட்டாங்க என்னென்ன கேட்டாங்க
பாட்டியும் ஏலக்கா வேணும்னு கேட்டாங்க
பத்தமடைப்பாயி வேணும்னு கேட்டாங்க
சின்ன கருப்பட்டி மூக்குப்பொடி டப்பி
வாங்கி வரும்படி கேட்டாங்க”

 

என்று பாடலாக பாடிக்கொண்டே மேட்டுக்காட்டிலும், வரப்பிலும், கரடு முரடான பாதையிலும் பொடி நடையாகவே செல்கிறான் செம்பட்டை. உடன், இரண்டு சோதாப்பயல்களும். எல்லா கிராமங்களிலும் சில ஜொள்ளு தாத்தாக்கள் இருப்பார்கள். ஊருக்கு வெளியே குடிசை போட்டு நீர் மோர் விற்கும் ஜொள்ளு தாத்தா ஒருவர், செம்பட்டைக்கு திருமணமானதும் முதல் ராத்திரிக்கு முன்னாடியே மனைவியை அழைத்து வரச் சொல்லி, தான்தான் அவளை தொட்டு முதல் ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்பார்.

 

அவரின் உள்நோக்கத்தை பகுத்தறிந்திடாத வெள்ளந்தியான செம்பட்டை, நிச்சயமாக மனைவியை அழைத்து வருவேன் என்கிறான். அதையும் அவன் ஒருமுறை,

 

”சொன்னாங்க சொன்னாங்க தாத்தாவும் சொன்னாங்க
பொண்டாட்டி கட்டிக்க வேணும்னு சொன்னாங்க
கல்யாணம் செஞ்சா அன்னிக்கு ராத்திரி
ஆசி வாங்கணுமின்னாங்க

நெசமாக வருவேங்க…
வயசான மனுஷங்க
வாயார மனசார வாழ்த்தணும் நீங்க

வெத்தல வெத்தல வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ…”

 

எனப் பாடுகிறான். இந்தப் பாடலுக்கென்றே தனி கட்டுரை எழுதலாம். அந்தளவுக்கு கதையோடு ஒன்றியிருக்கும். கங்கை அமரனின் வரிகளுக்கு, செம்பட்டையின் உடல்மொழிக்கு ஏற்ப குரல் கொடுத்திருப்பார் மலேசியா வாசுதேவன். அவர்தான் பாடினாரா இல்லை சிவகுமாரே பாடினாரா என அய்யமேற்படும் அளவுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் படுகச்சிதம்.

 

இவர் இப்படி என்றால், ‘மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்…’ பாடலில் எஸ்பி.பாலசுப்ரமணியமும் தன் பங்குக்கு குரலை லேசாக மாற்றி பாடியிருப்பார். ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். புலமைப்பித்தனின் வரிகளில் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…’ பாடல் எல்லா காலத்திலும் ‘ஒன்ஸ்மோர்’ ரகம். ரோசாப்பூ ரவிக்கைக்காரியின் ஒட்டுமொத்த கதையையும் இந்த ஒரு பாடலில் நயமாக சொல்லியிருப்பார் புலமைப்பித்தன். இந்தப் பாடலின் பின்னணியிலும், கிளைமேக்ஸ் காட்சியிலும் உடுக்கையை ஒலியை பயன்படுத்தி இருப்பார் இசைஞானி. தமிழ்ப்படங்களில் உடுக்கை ஒலியை தனித்துவமாக பதிவு செய்த பெருமை அவரையே சாரும்.

 

பாடல்களில் மட்டுமின்றி
படம் முழுவதுமே மண்ணுக்கேற்ற
பின்னணி இசை கோவையில்,
அவர் ராஜாதான். அதுவும்,
”என்னுள்ளில் எங்கோ ஏங்கும்
கீதம் ஏன் கேட்கிறது…” என்ற
பாடலுக்கு வாணி ஜெயராமை
பாட வைத்திருப்பதிலேயே ராஜாவின்
மதிநுட்பத்தை அறிய முடியும்.
வாணி ஜெயராமின் ஒட்டுமொத்த
திரையுலக பயணத்திற்கும்
இந்த ஒரு பாடலே போதும்
என்ற அளவுக்கு குரல் வழியே
ரசிகர்களுக்கு தேன் வார்த்திருப்பார்.
நந்தினியும் மாணிக்கமும்
ஒரே மோட்டார் சைக்கிளில்
பயணிக்கும்போது இந்தப் பாடல்
பின்னணியில் இழையோடுகிறது.
பாடல் தொடங்கும் முன்,
திரையின் ஒருபுறம் பெட்டைக்கோழி,
எதிரில் சேவல் இரண்டும்
தாபத்தில் இருப்பதாக
இயக்குநர்கள் குறியீடாக
ஒரு காட்சி வைத்திருப்பார்கள்.
அவர்களின் தனிமைப் பயணத்தில்
அடுத்து என்ன நிகழப் போகிறது
என்பதை அழகியல் குறியீடு
வழியாகவே ரசிகர்களின்
கற்பனைக்கு காட்சியை
கடத்தி விடுவார்கள்.

 

இயக்குநர்களின் மதிநுட்பத்தைப்
பற்றி சொல்ல இன்னும் பல
காட்சிகள் இருக்கின்றன.
நந்தினிக்கும், செம்பட்டைக்கும்
முதலிரவு நாள். கலவிக்கு
தயாரானபோதில்,
‘டேய் மாணிக்கம்…’ என்று
அதிகார தொனியில்
திடீரென்று ஒரு குரல் கேட்கிறது.
திடுக்கிட்டு எழும் நந்தினி,
என்ன சத்தம்? எனக் கேட்கிறாள்.
”அது ஒண்ணுமில்ல. பக்கத்தூட்ல
மாணிக்கம்னு ஒரு பையன்.
அம்மாவோட அடிக்கு பயந்து
காலையிலேயே எங்காவது
ஓடிப்போய்டுவான்.
தெனம் ராத்திரியானா
அவங்க அம்மா கையில
கம்பும், லாந்தர் வௌக்கும்
எடுத்துக்கிட்டு பையனை
தேடிக்கிட்டிருக்கும்,” என
சாதாரணமாக விளக்கம்
சொல்வான் செம்பட்டை.

 

எப்போதும் கையில் சிக்காத
சிறுவன் மாணிக்கம்,
ஒரு நாள் இரவில் அவன்
தாயிடம் சிக்கிக் கொள்வான்.
அந்த இரவில்தான் நந்தினியும்
மாமியாருடன் ஏற்பட்ட
சண்டையில் வீட்டை விட்டு
ஓடிப்போயிருப்பாள்.
அவளை செம்பட்டை
கண்டுபிடித்து வீட்டுக்கு
அழைத்து வருவான்.
அந்த மாணிக்கத்தின்
பெயரையே, ஆங்கிலயே
துரையின் மேலாளராக இருக்கும்
சிவசந்திரனுக்கும் வைத்திருப்பார்கள்
தேவராஜ் – மோகன்.

 

பண்ணையார் மகளுக்கு
திருமண ஏற்பாடுகள் நடந்து
கொண்டிருக்கும். ‘டேய் செம்பட்ட…
நுங்கு கொலைய வந்து கட்டுடா…’
என ஒரு குரல் ஒலிக்கும்.
அதற்குள் ‘டேய் செம்பட்ட…
சோறு வெந்துடுச்சு. வடிக்கணும்…
போய் சாக்கு எடுத்தாடா…’ என
இன்னொரு குரல் ஒலிக்கும்.
மீண்டும், ‘டேய் செம்பட்ட…
ஒரு பந்தி முடிஞ்சிருச்சு.
அடுத்த பந்திக்கு ஆக
வேண்டியத பண்ணுடா…’
என மற்றொரு குரல்
அதிகாரம் செய்யும்.

 

இதற்கிடையே, விடிந்தால் திருமணம் என்ற நிலையில் வாசலில் சிறுவர்களுடன் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும் பண்ணையாரின் மகள், தனக்கு பதிலாக தனது ஆட்டைத்தை ஆடும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விடுவாள். அவன் சுழற்றிவிட்ட பம்பரம் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த பம்பரமாய் செம்பட்டையும் திருமண வீட்டு வேலைகளில் சுழன்று கொண்டிருப்பான்.

 

இன்னொரு காட்சியில் நந்தினி,
கணவனுக்கு ஆசையாக
வெற்றிலையில் சுண்ணாம்பு
தடவிக்கொண்டே, ”என்னங்க…
அந்த மாணிக்கம் இருக்காரே…
அதே மாதிரி நீங்களும் கிராப்
வெட்டிக்கலாம்ல. பேன்ட் சட்டை
போட்டுக்கலாம். குளிச்சிட்டு சென்ட்
போட்டுக்கிட்டு சுத்தமாக இருக்கலாம்ல,”
என தனது கணவனின்
புறத்தோற்றம் மாற வேண்டும்
என்ற தனது உள்ளடக்
கிடக்கையைச் சொல்வாள்.
பேச்சின் மும்முரத்தில் சுண்ணாம்பு
எவ்வளவு தடவினோம் என்பதையும்
மறந்து போன அவள்,
அந்த வெற்றிலையை மடித்து
கொடுக்க, செம்பட்டையோ
வாய் வெந்து போன எரிச்சலில்,
”ஒருத்தரு மாதிரி ஒருத்தரு
மாறணும்னு நினைச்சா இதுதான்
நடக்கும். உடம்பு சுத்தமா
இருக்கறத விட மனசுதான்
சுத்தமாக இருக்கோணும்.
நீ அவல நினைச்சு உரல இடிக்காத,”
என வழக்கம்போல மனதில்
பட்டதை நறுக்கென்று சொல்லி
விடுவான் செம்பட்டை.

 

திருச்சங்காட்டான்
நந்தினியைப பற்றி ஒருமுறை,
‘உன் பொண்டாட்டி முந்தானையில
மண்ணு பட்டுடுச்சுடா’ என்று
சொன்னதற்காக அவனை புரட்டி
எடுப்பான் செம்பட்டை.
பள்ளிச்சிறுவனான பண்ணையாரின்
மகன், வீட்டு சுவரில் சிம்னி
விளக்கு கரி படிந்த இடத்தில்
நந்தினி, செம்பட்டை ஆகியோரின்
பெயரை எழுதி வைத்திருப்பான்.
பிரிதொரு நாளில், சுவரில்
நந்தினியின் பெயர் மட்டும்
மறைந்து போயிருக்கும்.
அதைப்பற்றி செம்பட்டை
சிறுவனிடம் கேட்கும்போது,
”ஆமான்டா செம்பட்டை.
நந்தினி மேல கரி படிஞ்சிடுச்சுடா.
கரி படிய படிய அழியத்தானே
செய்யும்,” எனக்கூறுவான்.
நந்தினி தடம் புரண்டதை
இடக்கரடக்கல் வசனமாக
சொல்லி இருப்பார்கள்.

 

தாயிடம் பிணங்கிக் கொண்டு பாகப்பிரிவினை கேட்கும் காட்சியின்போது, தாய்ப்பசுவை நோக்கி கன்றுக்குட்டி மா… ம்மா… என்று அடித்தொண்டையில் இருந்து கத்துவது போன்ற காட்சியும், தாய் – மகன் பிரிவின் வலியை காட்சி மொழியாக ரசிகர்களுக்கு கடத்தி இருப்பார்கள் இயக்குநர்கள். இப்படி படம் முழுக்கவே கவிதையான காட்சி மொழிகளும், வெள்ளந்தி மனிதர்களின் ஒப்பனையற்ற வசனங்களாலும், குறியீடுகளாலும் படத்தை காவியாமாக்கி இருப்பார்கள் தேவராஜ் – மோகன்.

 

பாடி, லவுக்கைக்கு
பண்ணையாரின் குடும்பமும்
எதிரானதுதான். எனினும்,
மகளுக்கு நிச்சயம் செய்திருக்கும்
மணமகன் பட்டணத்தில் வசிப்பவர்.
அதனால் பாடி, லவுக்கை
எல்லாம் மகளுக்கு போட்டு
விடணும் என்று சொல்லி,
செம்பட்டையிடம் ரகசியமாக
பணம் கொட்டு வாங்கி
வரச்சொல்வார்கள். அப்போது
செம்பட்டை, ‘என்னடா இது…
இவங்கதான் பாடி, லவுக்கைலாம்
போடக்கூடாதுனு சொன்னாங்க.
இப்ப அவங்களே வாங்கியான்னு
சொல்றாங்களே…,’ என குழப்பம்
அடைவான். எவ்வளவு
பெரிய மனிதர்களாக
இருந்தாலும் ஊருக்கு ஒன்றும்,
தனக்கு ஒன்றுமாக இரட்டை
நிலைப்பாட்டில் இருக்கும்
போலிகளையும் கிழித்து
தொங்க விட தயங்கவில்லை.

 

கிளைமேக்ஸ் காட்சியில், ஊருணியில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்கிறான் செம்பட்டை. இந்தக் காட்சியையும்கூட, பூடகமாக முன்பே ஒரு காட்சியில், தண்ணீரில் எவ்வளவு நேரம் மூழ்கி இருப்பது என்ற போட்டியின் மூலமாக உணர்த்தி இருப்பார்கள். இப்படி படத்தைப் பற்றி சிலாகிக்க நிறைய சங்கதிகள் இருப்பினும், நந்தினி தடம் புரள செம்பட்டை அழுக்காக இருப்பதும், அவனின் நாகரிகமற்ற நடவடிக்கைகளும் மட்டும்தான் காரணமா? அல்லது அவளுக்கு நிகழ்ந்தது பொருந்தா திருமணமா? என்ற வினாக்களும் எழாமல் இல்லை.

 

செம்பட்டை இறந்ததைப்
பார்க்கும் சிலர், அவனுடைய
மனைவி சோரம் போனது
தெரிந்ததால்தான் தற்கொலை
செய்து கொண்டானோ என்றும்,
நீச்சல் தெரியாததால் மூழ்கி
செத்துப் போய்ட்டானோ என்றும்,
பஞ்சாயத்தார் அவனை
அவமானப்படுத்தியதால் செத்துட்டானோ
என்றும் ஒவ்வொரு விதமாய்
மனதிற்குள்ளாகவே நினைத்துக்
கொள்கிறார்கள். அப்படியான
எண்ண ஓட்டங்கள் மூலம்
ஒட்டுமொத்த சாமானிய
மக்களின் மனநிலையை
பதிவு செய்திருப்பார்கள்
இயக்குநர்கள்.

 

யாருடைய கேள்விக்கும்
இனி செம்பட்டை பதில்
சொல்ல மாட்டான்.
வேலி தாண்டிய மனைவியை
கண்டிக்க முடியாத
இயலாமையால் அவனும்,
குற்ற உணர்வில் நந்தினியும்
உயிரை மாய்த்துக் கொண்டனர்
என்பது அவரவர் மட்டுமே
அறிந்த உண்மைகள்.
புதிய கலாச்சார மாற்றத்தின்
நடுகற்கள் அவர்கள்.
பழமைவாதம் என்று தெரிந்தும்,
தன்னிலையில் இருந்து
மாற விரும்பாத
‘செனோஃபோபியா’ (Xenophobia)
நிலையில் இருக்கும்
வண்டிச்சோலை மக்களிடையே
நந்தினியும் செம்பட்டையும்தான்
கலாச்சார புரட்சிக்கான
பலியாடுகளும் கூட.

 

– வெண்திரையான்