Monday, February 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பூவனம்: நீரில் ஆடும் நிலா (கவிதை)

நீரில் ஆடும் நிலா…! 

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கவிஞர் பெ.அறிவுடைநம்பி எழுதி இருக்கிறார். தமிழக அரசின் கதர் வாரியத்தில் பணியாற்றி, ஓய்வுபெற்றவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

கவிஞர் மு.மேத்தாவின் முன்னுரையுடன், திண்டுக்கல் அய்யனார் பதிப்பகம் நூலை வெளியிட்டு உள்ளது. நூலில் இருந்து…

கீழே விழுவது புவி ஈர்ப்பு
மேலே எழுவது விலைவாசி
அது நியூட்டன் விதி
இது அரசியல் சதி

என நையாண்டி செய்கிறார்.

ஒவ்வொருமுறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயரும்போதும் நாட்டில் விலைவாசியும் உயர்ந்து விடுகிறது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவர்தானே நம் கவிஞர்.
மற்றொரு இடத்தில்,

தீச்சட்டி எடுப்போம்
பேருந்தையும் உடைப்போம்
இது நேர்த்திக்கடன்!

என்று சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகளை பகடி செய்கிறார்.

இதைவிட கவிஞரின் இன்னொரு நுட்பமான பதிவு, நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. ஒரே பெயரிலான விளைவு, ஆனால் வெவ்வேறு வகையான முடிவுகளை உண்டாக்குவதை புதிய கோணத்தில் பார்த்திருக்கிறார், கவிஞர்.

கல்விச்சாலையில்
ராமன் விளைவு?
அறிவியல் வளர்ச்சி;
அரசியல் பயணத்தில்
ராமன் விளைவு?
மசூதி இடிப்பு!

என வார்த்தை ஜாலம் செய்கிறார்.

எங்கும் கோயில்கள்
எண்ணற்ற தெய்வங்கள்
குடமுழுக்கு முதல் வீதிஉலா வரை
அரங்கேற்றங்கள் இருந்தபோதிலும்
வேலையில்லா இளைஞர்கள்
வீடில்லா மனிதர்கள்
வாழ்வில்லா உழவர்கள்
பட்டினிச்சாவுகள்
பரதேசிக் கோலங்கள்
பாரதத்தில் நிறைஞ்சிருக்கு
மக்கள் பிரச்சனைகள்
மலைபோல் குவிஞ்சிருக்கு!

என கடவுள் நம்பிக்கையாளர்களைப் பார்த்தும் கேள்வி எழுப்ப அவர் தவறவில்லை.

“பள்ளிக்குப் போனான்
சாதி கேட்டனர்
பெண் பார்க்கப்போனான்
குலம் கோத்திரம் கேட்டனர்
கோயிலுக்குப் போனான்
தீட்டுக்கழித்தனர்
முற்போக்கு அமைப்பிற்குள் இணைந்தான்
அங்கும் அவனை அடையாளம் கண்டு
அளவோடு பயன்படுத்திக் கொண்டனர்”

இந்தியச் சமூகத்தில் மதத்தைவிட சாதிய கட்டமைப்பு வலுவானது. ஒருவன் எளிதில் மதம் மாறிவிட முடியும். ஆனால், சாகும்வரை சாதி மாற முடியாது என்ற பெரியாரின் கருத்தை இந்தக் கவிதையின் வாயிலாக மிகுந்த மன வலியோடு கேட்கிறார். அத்துடன், முற்போக்காளர் என்போரின் முகமூடிகளையும் கிழிக்கிறார் கவிஞர் அறிவுடைநம்பி.

புத்தகம் முழுவதும் சமகால அரசியல் மீதான எள்ளல், சாதிக்கொடுமைகள், கொடூரக்கொலையைக்கூட கவுரவக் கொலையாக பார்க்கும் சமூகத்தின் மீதான சாடல் என நிறைந்து இருக்கிறது. கவி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

மொத்தப் பக்கங்கள் 112; விலை ரூ.75.
தொடர்புக்கு: 9788352514, 9698646585.

(“புதிய அகராதி” இதழ் சந்தா தொடர்புக்கு: 9840961947)