Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?

நீட் தேர்வில் கேட்கப்பட்ட
வினாக்கள் எளிமையாக இருந்ததால்,
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமானோர்
தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளதாக
மாணவர்கள் மகிழ்ச்சியுடன்
தெரிவித்துள்ளனர்.

 

இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் போட்டித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் முழு கை வைத்த சட்டை அணிந்து வரக்கூடாது, அடர்த்தியான நிற உடைகள் அணியக்கூடாது, எந்த விதமான எழுதுபொருள்களும் கொண்டு மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது, மாணவிகள் கொலுசு, வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது என்பது உள்ளிட்ட கடந்த ஆண்டுகளில் இருந்த அதே கெடுபிடிகள் இந்த ஆண்டும் இருந்தன.

 

தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் என்டிஏ தனியார் முகமைக்கு ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், கெடுபிடிகளும் அதிகமாகவே இருந்தன. தேர்வு மையத்திற்குள் வந்த தேர்வர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிட அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிக்கு தேர்வு முடியும். இம்முறை மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்தது. என்னதான் தேர்வுக்கான விதிகள் குறித்து முன்கூட்டியே சொல்லப்பட்டாலும், தேர்வு மையத்திற்கு தாமதமாக வருவது, ஆடை கட்டுப்பாடுகளை மீறுவது என்பது போன்ற சின்னச்சின்ன கவனக்குறைவுகள் தேர்வர்கள் பக்கம் இருப்பதை காண முடிந்தது.

 

சேலம் அம்மாபேட்டை வித்யா மந்திர் பள்ளியில் உள்ள மையத்திற்கு கொலுசு அணிந்து ஒரு மாணவி சென்றார். அவர் அணிந்து இருந்த கொலுசை கழற்றுவதற்காக அவருடைய தந்தை கையில் கட்டிங் பிளேயரையும் தயாராக எடுத்து வந்திருந்தார். அதை அவர் வீட்டிலேயே செய்திருக்கலாம்.

 

இதை மையத்தில் ஒரு மாணவர்
முழு கை வைத்த சட்டை அணிந்து
உள்ளே சென்றார். வாயிலில் நின்றிருந்த
சோதனையாளர்கள் அந்த மாணவனை
தேர்வு நடக்கும் அறைக்கு அனுமதித்துவிட்டனர்.
ஆனால் அந்த அறையில் இருந்த
கண்காணிப்பாளர் முழு கை சட்டையை
கழற்றிவிட்டு அரைக்கை சட்டை போட்டு
வந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்
என கறார் காட்டினார். வேறு வழியின்றி
அந்த மாணவர் மீண்டும் நுழைவு வாயிலுக்கு
வந்து தந்தையிடம் கூற, அவரும்
தயார் நிலையில் வைத்திருந்த அரைக்கை
சட்டையை கொடுத்து அணிந்து
கொள்ள செய்தார்.

 

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. 17339 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். வித்யா மந்திர் என்ற பெயரில் சேலம் அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, மெய்யனூர், கொண்டலாம்பட்டி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் வெளியூர்களைச் சேர்ந்த தேர்வர்கள் எந்த வித்யா மந்திர் பள்ளி என்று தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.

 

 

மெய்யனூர் வித்யா மந்திர் பள்ளிக்குச் செல்ல வேண்டிய ஒரு மாணவி, தவறுதலாக அம்மாபேட்டை வித்யாமந்திர் பள்ளிக்குச் சென்றுவிட, பின்னர் அங்கிருந்த ஒரு மாணவியின் தந்தை அந்த மாணவியை சரியான மையத்தில் விட்டுவிட்டு வந்தார்.

 

இப்படி கெடுபிடிகளும், கவனக்குறைவுகளும் ஒருபுறம் இருக்க, நீட் தேர்வு மாலை 5 மணிக்கு முடிந்தது. தேர்வு குறித்து நாம் சில மாணவ, மாணவிளிடம் கருத்துகளை கேட்டறிந்தோம்.

 

சேலத்தைச் சேர்ந்த அபி என்ற மாணவி கூறுகையில், ”நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடந்தது. நான் முதன்முதலாக இத்தேர்வை எழுதுகிறேன். இதற்காக தனிப்பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். இதில், உயிரியல் பாடப்பகுதியில் இருந்த கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்தன. இயற்பியல் பகுதியில் 25 முதல் 30 வினாக்கள் எளிமையாக விடையளிக்கும் வகையில் இருந்தன. மற்ற வினாக்கள் கணக்கீடு தொடர்பாக இருந்ததால் கொஞ்சம் கடினமாக இருந்தது. வேதியியல் பகுதி வினாக்களும் ஓரளவு எளிமையாக இருந்தன,” என்றார்.

 

அந்த மாணவியின் தந்தையிடம்,
தேர்வு மைய கெடுபிடிகள் குறித்து கேட்டபோது,
”நீட் தேர்வுக்கான உடை கட்டுப்பாடுகள்,
ஒழுங்கு விதிமுறைகள் குறித்து முன்பே
தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதனால், அதற்கேற்றார்போல் நாங்களும்
எங்கள் மகளை மனதளவில் தயார்படுத்தி
விட்டோம். தேர்வுக்கூடத்தில் வெளிர் நிற
உடைதான் அணிய வேண்டும் என்று
சொல்லப்பட்டு இருந்ததால், அதற்காகவே
இரு நாள்களுக்கு முன்பு வெள்ளை
நிறத்தில் புதிய உடையை மகளுக்கு
வாங்கிக் கொடுத்தோம்.

 

அதேபோல் ஒரு வாரத்திற்கு முன்பே
இந்த தேர்வு மையத்தை நேரில் வந்து
பார்த்துவிட்டுச் சென்றிருந்தேன்.
அனுமதிச்சீட்டில் வெள்ளை பின்னணியில்
புகைப்படம் இருந்ததால், அதற்கேற்றார்போல்
வெள்ளை பின்னணியில் என் மகளுக்கு
புதிய புகைப்படம் பிரிண்டு போட்டுக்
கொண்டு வந்தோம். இப்படி சின்னச்சின்ன
விஷயங்களில் கூட கவனமாக இருந்ததால்,
தேர்வுக்கூட கெடுபிடிகளால் என்
மகளுக்கு எந்த மன
உளைச்சலும் இல்லை,” என்றார்.

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நிர்மல்ராஜ் கூறுகையில், ”இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து நிறைய வினாக்கள் கணக்கு சம்பந்தமாகவே வந்திருந்ததால், கொஞ்சம் கடினமாக இருந்தன. ஆனால், வேதியியல், உயிரியல் பாடப்பகுதி வினாக்கள் மிக எளிமையாக இருந்தன. தனிப்பயிற்சி வகுப்புக்கு சென்று முறையாக பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை நன்றாக எதிர்கொண்டிருக்க முடியும். என்றாலும் கடந்த ஆண்டு வினாத்தாளைக் காட்டிலும் இந்தாண்டு நீட் தேர்வு கொஞ்சம் எளிமையாகவே இருந்தது,” என்றார்.

ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த உஷா கூறுகையில், ”நீட் தேர்வுக்காக நான் எங்கேயும் தனிப்பயிற்சிக்கு செல்லவில்லை. நானே வீட்டில் இருந்து தேர்வுக்காக தயார் ஆனேன். உயிரியல் பாடப்பகுதி வினாக்கள் 50 சதவீதம் எளிமையும், 50 சதவீதம் சற்று கடினமாகவும் கலந்து இருந்தன. இயற்பியல் பகுதியில் பார்முலா அடிப்படையிலான வினாக்கள் நிறைய வந்திருந்தன. அதனால்தான் பலருக்கும் கொஞ்சம் கடினமாக இருந்தது. அதில் பல வினாக்களை தவிர்த்து விட்டாலும்கூட மற்ற பகுதி வினாக்களுக்கு சரியாக விடையளித்தாலே நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் வகையில்தான் வினாத்தாள் இருந்தது. வேதியியல் பகுதியும் ஓரளவு எளிமையாகத்தான் இருந்தது,” என்றார்.

 

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியைச்
சேர்ந்த இரு மாணவிகள் கூறுகையில்,
”கோச்சிங் சென்றால் கண்டிப்பாக
நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.
குறிப்பாக என்சிஇஆர்டி புத்தகத்தில்
இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.
இயற்பியல் பிரிவில் நிறைய கணக்குகள்
கேட்கப்பட்டு இருந்தன. அதனால் அந்தப்பகுதி
கொஞ்சம் கடினமாக இருந்தாலும்,
முறையாக பயற்சி பெற்றிருந்தால்
விடையளித்திருக்க முடியும். உயிரியல்
பாடப்பகுதியைப் பொருத்தவரை
9, 10ம் வகுப்புகளில் படித்த பாடங்களில்
இருந்தும்கூட சில வினாக்கள்
கேட்கப்பட்டு இருந்தன,” என்றனர்.

 

இவ்வாறு மாணவ, மாணவிகள் கூறினர்.

 

நீட் தேர்வில், சரியாக எழுதப்பட்ட ஒவ்வொரு விடைக்கும் தலா நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேநேரம், ஒவ்வொரு தவறான விடைக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

– பேனாக்காரன்