”கல்யாணமோ காதுகுத்தோ எந்த ஒரு வீட்டு விசேஷம் என்றாலும் மாமன்,மச்சான், அண்ணன்,தம்பி என்று ஒட்டுமொத்த சொந்தபந்தங்களும் களத்தில் இறங்கி, வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு பம்பரமாய் சுழன்றது எல்லாம் அந்தக்காலம். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைத்து, வீட்டு விசேஷங்களை சிறப்பாக நடத்திக் கொடுப்பதே என்னைப்போன்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள்தான்,” என தன் தொழில் மீதான பெருமிதத்தை மிடுக்கோடு கூறுகிறார் ஈசன் கார்த்திக்.
சேலம் பெரமனூர் மெயின் ரோடு, கேப்பிடல் டவர்ஸில் ‘யுனிக் ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஈசன் கார்த்திக். ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய வரவு.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறை தேவை குறித்து விரிவாக பேசலானார்…
சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் ஜீனிலேயே கலந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என் தாத்தா, சேலம் அறிந்த பிரபலம். அவர், ஈசன் துரைசாமி. அவரது குடும்பத்தில் இருந்து வந்த நான், ஆரம்பத்தில் ஓரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த நிறுவனம் என்னை ஏமாற்றிவிட்டது.
மீண்டும் வேறு சில நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தது. இனியும் யாருக்காகவோ ஏன் உழைத்துக் கொட்ட வேண்டும்? என யோசித்தபோது, ஏற்கனவே ஓரளவு அனுபவம் உள்ள ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையிலேயே முழுவீச்சில் இறங்கிவிட்டேன். சேலம் போன்ற நகரங்களில் இத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
முன்பெல்லாம் திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா போன்ற எந்த ஒரு இல்ல நிகழ்ச்சிக்கும் அதற்கான ஏற்பாடுகளை குடும்ப உறுப்பினர்களே செய்வார்கள். இப்போது தனிக்குடும்பங்கள் அதிகரித்து விட்டன. பணி நிமித்தமாகவும் குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக சிதறிக்கிடக்கின்றனர். இதுபோன்ற சூழலில் ஒரு வீட்டில் திருமண விசேஷம் என்றால், அழைப்பிதழ் அச்சிடுவது முதல் பந்தக்கால் நட்டு, வாழைமரம், தோரணங்கள் கட்டுவது வரை அனைத்து விதமான வேலைகளும் தெரிந்த ஆட்கள் இப்போது கிடைப்பது அரிது. அங்குதான், ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
இப்போது பணம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய ஆட்கள்தான் இல்லை. அதுபோன்ற சூழலில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் மூலம் விசேஷங்களை நடத்துவதன் மூலம் நிகழ்ச்சியாளர்களுக்கு அந்தஸ்து கூடுகிறது. வாழ்வில் பசுமையான நினைவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
திருமண விசேஷம் என்றால் திருமண மண்டபம் புக்கிங் செய்வது முதல், வாழைமரம், பழங்கள், உணவு உபசரிப்பு, சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், பூ ஜோடனை, மணப்பெண்-மணமகன் அலங்காரம், உடை அலங்காரம், நகைகள், மெகந்தி இடுதல், வாத்திய ஏற்பாடு, ஆர்க்கெஸ்ட்ரா, வெளியூர் விருந்தினர்கள் தங்குவதற்கு ஹோட்டல் அறை ஏற்பாடு செய்தல், அய்யர் வரை நீண்டு, புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்குச் செல்லும் வரை எங்களது ‘யுனிக் வெட்டிங்ஸ் அன் பர்த்டே’ நிறுவனம் மூலம் செய்து வருகிறோம்.
இந்து மத நிகழ்ச்சிகள் மட்டுமின்றி முஸ்லிம், கிறிஸ்டியன் உள்ளிட்ட அனைத்து மதத்தினரின் இல்ல நிகழ்ச்சிகளையும் அவரவர்களின் கலாச்சாரங்களுக்கு ஏற்ப வடிவமைத்து தருகிறோம். நாங்கள் சில ‘தீம்’களின் அடிப்படையில் மேடை அலங்காரம், முகப்புகளை அமைக்கிறோம். உதாரணமாக மயில் தீம், தாமரை தீம்களில் இப்போதைக்கு செய்து வருகிறோம். மணப்பெண், மணமகன் உடை அலங்கார தீம்களுக்கு ஏற்பவும் மேடை அலங்காரங்கள் செய்யப்படும்.
பிறந்த நாள் நிகழ்ச்சிகள், பெயர் சூட்டு விழா, வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, கார்ப்பரேட் நிறுவன நிகழ்ச்சிகளையும் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடத்திக் கொடுக்கிறோம். இந்த தொழிலில் மொத்த டென்ஷனையும் நாங்கள் எடுத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷத்தையும், மன நிறைவையும் பரிசாக தருகிறோம்.
எங்களை வாடிக்கையாளர்கள் அணுகுவதில் அவர்களுக்கு மற்றொரு ஆதாயமும் உண்டு. பல ஆண்டுகள் இத்துறையில் அனுபவமும், பலதுறை ஆட்கள் தொடர்பும் இருப்பதால் விசேஷங்களுக்கு தேவையான பொருட்களை தரமானதாக வாங்குவதுடன், குறைந்த விலையிலும் பெற முடியும். இதன்மூலம் நிகழ்ச்சியாளர்கள், பட்ஜெட்டில் 30 % வரை மிச்சப்படுத்த முடியும்.
இத்துறையில் எத்தனை போட்டிகள் வந்தாலும், வித்தியாசமான ‘கிரியேட்டிவிட்டி’ திறமையால் தனித்துவத்துடன் திகழலாம். நிகழ்ச்சிகளுக்கான மொத்த பட்ஜெட்டில் 10% முதல் சேவைக் கட்டணம் வசூலிக்கிறோம்.
என்னோடு, ஒத்தக்கருத்துள்ள நண்பர் தீபக் என்பவரையும் பார்ட்னராக சேர்த்துக் கொண்டேன். இதுவரை, சேலம் மட்டுமின்றி பொள்ளாச்சி, கரூர், திருச்சி, கோவில்பட்டி, கள்ளக்குறிச்சி, சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்.
திருமண வீட்டாரின் இருதரப்புமே வெவ்வேறு ஊராக இருந்து, மண நிகழ்விடம் வேறு ஓரிடமாக இருந்து, ஒட்டுமொத்த உறவுக்காரர்களையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி, திருமணத்தை நடத்தி முடிப்பதை ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ என்கிறோம்.
மும்பையைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கும், வேறு ஊரை சேர்ந்த மாப்பிள்ளைக்கும், அவர்களின் உறவினர்களை அழைத்து ஏற்காட்டில் திருமணத்தை நடத்திய சவாலான அனுபவம் மறக்க முடியாதது.
வரும் காலத்தில் எங்களது யுனிக் ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொழிலை ஃபிரான்சைஸீ மூலம் விரிவாக்கம் செய்யும் திட்டமும் உள்ளது. முதலீடு தேவை இல்லை. ஆனால், கணிசமான வருமானத்துக்கு உத்தரவாதம். உழைக்கத் தயாராக இருக்கும் படித்த இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
ஈசன் கார்த்திக்கின் கண்களில் நம்பிக்கை தெறித்தது.