Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரை இசையில் வள்ளுவம்!: வரவு எட்டணா செலவு பத்தணா…: (தொடர்)

தேனினும் இனிய குறள் அமுதத்தை, திரை இசையில் நயம்பட, எல்லோரையும் ஈர்க்கும்படி செய்வதன் நம் இளங்கம்பன் கவியரசர் கண்ணதாசன். ‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது முதுமொழி. அதுபோல், ‘ஆடம்பரம், அழிவையே தரும்’ என்பது சான்றோர் அனுபவ மொழி.

 

 

வெட்டி பந்தா குடும்பத்திற்கு ஆகாது என்பதை நகைச்சுவையுடன், தனக்கே உரிய மேதைமைத் தனத்துடன் ‘பாமா விஜயம்’ படத்தில் சொல்லி இருப்பார் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். 24.2.1967ல் வெளியான ‘பாமா விஜயம் படத்தின் ஒரு வரி கதை ரொம்பவே எளிமையானது.

 

 

ஊரே கொண்டாடும் திரைப்பட நடிகை பாமா, அவருடைய குடியிருப்பு அருகில் கூட்டுக்குடும்பமாக வாழும் தனது ரசிகர்களின் வீட்டிற்கு ஒரு நாள் விஜயம் செய்கிறாள். அவளுடைய வருகைக்காக, நடுத்தர வரக்கத்தைச் சேர்ந்த அந்த ரசிகர்கள், சக்திக்கு மீறி கடனை உடனை வாங்கி விலை உயர்ந்த சோஃபா, கட்டில் மெத்தைகள், தோரணங்கள், விலை உயர்ந்த தரை விரிப்புகளால் வீட்டை அலங்கரிக்கின்றனர்.

 

 

போலி கவுரவத்தை உடைத்து, குடும்ப கவுரவத்தை நிலைநாட்டும் வகையில் கதை சொன்ன விதம் அன்று பெரிதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரும் ஆளுமைகளின் படங்கள் வெளியான அதே காலக்கட்டத்தில், அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள நட்சத்திரங்களைக் கொண்டு ‘பாமா விஜயம்’ என்றொரு மகத்தான நகைச்சுவை கலந்த குடும்பச்சித்திரத்தை கொடுத்து, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார், கே.பாலச்சந்தர்.

 

இதே கதையம்சத்துடன், 1994ம் ஆண்டு வி.சேகர் இயக்கத்தில், ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்ற பெயரில் ஒரு வந்தது. நாசர், ராதிகா, ஜெய்சங்கர், கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப்படமும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்போது யாரும் குடும்பக் கதையம்சமுள்ள படங்களை இயக்க முன்வராதது ஏனோ தெரியவில்லை.

 

‘பாமா விஜயம்’ படத்தில், நடிகையின்முன் பகட்டாக ஜொலிக்க நடுத்தர குடும்பத் தலைவிகள் வைர நெக்லஸை அக்கம்பக்கத்தில் இரவல் வாங்குகின்றனர். இதனால் அந்த குடும்பத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை காமெடியாய் சொல்லி இருப்பார் கே.பி.

 

வழக்கம்போல் கே.பி.யின் கூட்டணிதான் இந்த படத்திலும். டி.ஆர்.பாலையா, சவுகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், முத்துராமன் ஆகியோர் அனாயசமான நடிப்பால் படத்துக்கு மேலும் அழகு சேர்த்து இருப்பார்கள். டைட்டில் ரோலில் ராஜஸ்ரீ, நடிகையாக நடித்து இருப்பார்.

 

இதுபோன்ற கதை கிடைத்தால் விடுவாரா எம்எஸ்வி…? தன் பங்குக்கு இசை சாம்ராஜ்யம் காட்டி இருப்பார்.

 

 

 

கதையை உள்வாங்கிக் கொண்ட கவியரசர், மையக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், ”வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா துந்தனா…” என்ற பாடலில் விளாசி இருப்பார். அதுவும் வள்ளுவனின் துணையோடு. இந்தப் பாடலில் பங்குபெற்ற குழந்தை நட்சத்திரங்களும் தாத்தா பாலையாவுக்கு பக்கவாத்தியமாக இருந்து தங்கள் பெற்றோருக்கு புத்தி சொல்லும் அழகே தனி.

 

விரலுக்கேத்த வீக்கம் பற்றி அய்யன் வள்ளுவன், ‘வலியறிதல்’ என்று ஓர் அதிகாரமே படைத்து இருக்கிறான். வரவுக்கேற்ற செலவு என்பதை,

 

”ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை” ……. (48:478)

 

என்கிறான்.

 

அதாவது வருவாய் கொஞ்சமாக இருந்தாலும், அதற்கேற்றாற்போல் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மிஞ்சி செலவு செய்தால் கேடு வருவதை யாராலும் தடுக்க முடியாது என கடுமையாக எச்சரிக்கை தவறவில்லை. வரவுக்கேற்ற திட்டமிடல் இல்லாவிட்டால் இழப்புதான் மிஞ்சும். தன் பலம் தெரியாமல், கையிலிருந்த சேமிப்பு, வங்கிக் கடனெல்லாம் வாங்கி தொழில் தொடங்கிய பலர், பாதியிலேயே நட்டப்பட்டு வீட்டில் முடங்கியவர்கள் பலர்.

 

 

வியர்வை சிந்துபவனுக்குத்தானே பணத்தின் அருமை புரியும். மக்கள் பணத்தில் முத்துக்குளிப்பவர்கள், பத்து லட்ச ரூபாய்க்குக் கூட கோட் சூட் அணிந்து கொள்ளலாம். அதற்கு எதிர்ப்பு வந்தால் பொது ஏலம் விட்டு, ‘நமோ’ நாராயணா என்று தேசபக்தியின் பெயரில் பழியைப் போக்கிக்கொள்ளலாம். நான் பொதுவாகச் சொன்னேன்.

 

சரியான திட்டமிடல் இல்லாததால் தமிழக அரசாங்கமே 3.50 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கும்போது மாதச்சம்பளத்தில் குடும்பம் நடத்தும் நாமெல்லாம் எம்மாத்திரம்?

 

இதை,

 

”உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்” …… (48:473)

 

என்கிறார்.

 

கண்ணதாசன் தன் பாடலில், ”அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்கு ஆகாது அய்யா குடும்பத்துக்கு ஆகாது” என குறிப்பிட்டு இருப்பார். இதற்கும் வள்ளுவனைத்தான் சாட்சிக்கு அழைத்து இருப்பார் கண்ணதாசன்.

 

அதாவது, ‘பெண்வழிச் சேறல்’ அதிகாரத்தில்,

 

”இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்” …… (91:905)

 

எனக்கூறுகிறான் வள்ளுவன்.

 

‘மனைவிக்கு அஞ்சி நடக்கிறவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான செயல்களை, கடமையை செய்வதற்கும் அஞ்சுவான்’ என உரைக்கும் வள்ளுவனின் குறள், யதார்த்த வாழ்வில் இன்றும் கண்கூடு. பாடல் இணைப்பு.

 

சரி. வள்ளுவன் வழி நின்று, ‘பாமா விஜயம்’ படத்தில் கண்ணதாசன் தீட்டிய கவி ஓவியம் இதோ…

 

வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தனா
துந்தனா துந்தனா (2)

ம்ம்…..ம்ம்….ம்ம்….

நிலைமைக்கு மேலே
நினைப்பு வந்தால்
நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது

அளவுக்கு மேலே
ஆசையும் வந்தால்
உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது

வயசுக்கு மேலே
உலகத்தில் உள்ள
நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது (2)

வயசு பிள்ளைகள்
புதுசா பெருசா
வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது (2)

வாடகை சோஃபா
இருபது ரூபா
விலைக்கு வாங்கினா
முப்பதே ரூபா

வாடகை சோஃபா இருபது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா…  (வரவு எட்டணா…)

அடங்கா மனைவி
அடிமை புருஷன்
குடும்பத்துக்கு ஆகாது
அய்யா குடும்பத்துக்கு ஆகாது

யானையைப் போலே
பூனையும் தின்னா
ஜீரணம் ஆகாது
அய்யா ஜீரணம் ஆகாது (2)

பச்சைக் கிளிகள்
பறப்பதை பார்த்தால்
பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது (2)

பணத்தைப் பார்த்தால்
கவுரவம் என்பது
மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது (2)

தங்கச் சங்கிலி இரவல் வாங்கினா
தவறிப் போச்சுனா தகிட தந்தனா
ஹே….ஹே….ஹே….

பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக
இங்கே எதற்காக…?
அய்யா இங்கே எதற்காக…?
மாதர்கள் எல்லாம் கன்னியராக
மாறணும் அதற்காக
அப்பா வேறே எதற்காக…

கன்னியராக மாறணுமென்றால்
பிள்ளைகள் எதற்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக…
காதல் செய்த பாவத்துக்காக
வேறே எதற்காக
அய்யா வேறே எதற்காக

பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்
                                       (வரவு எட்டணா…)

 

– பொய்யாமொழியன்.
பேச: 9840961947.