Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்தவர்களுக்கு நிரம்பவவே ஆயாச உணர்வை ஏற்படுத்தி இருக்கும். ‘இந்த சினிமாகாரனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல? நாம்மலாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா…?’ என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, சினிமா நடிகர்களைப் பற்றி, அவர் பாணியில் கிண்டலடித்து இருப்பார். ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் செய்திகளை, ‘காலை அரும்பி பகலெல்லாம் போதாகி’ கணக்காக நேரலை செய்து, மக்களின் கோபத்திற்கு கிட்டத்தட்ட எல்லா தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுமே ஆளாகி இருந்தன.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின்
தலைநகரம், தவித்த வாய்க்கு ஒரு மிடறு
தண்ணீர்கூட தர இயலாத நிலையில்
இருப்பதுதான், நிகழ்காலத் துயரம்.
கையில் குடங்களுடன் குழாயடிகளில்
மைல் நீள வரிசையில் கொதிக்கும் வெயிலில்
காத்திருக்கும் தமிழக தாய்மார்கள் ஒருபுறம்;
அதேநேரம், டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்கள்
முண்டியடிக்கும் முரண்பட்ட
நிலையில்தான் தமிழகம் இருக்கிறது.

இந்த சமூகப் பேரவலத்தைப் பேச
வேண்டிய தருணத்தில், நடிகர் சங்கத் தேர்தல்
பற்றி போர்க்கால செய்தி போல நேரலையில்
காட்டிக்கொண்டே இருந்ததுதான்,
தமிழர்களை நிரம்பவே
கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த நடிகர் விவேக், ஊடகங்களிடம் பேசினார். ‘வெறுமனே ரெண்டாயிரத்து சொச்சம் பேர் கொண்ட நடிகர் சங்க தேர்தலை படம் பிடிக்க ஒட்டுமொத்த ஊடகங்களும் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், இதே நாளில், சிட்லபாக்கம் ஏரி, மனப்பாக்கம் ஏரிகளில் பொதுமக்கள் தூர் வாருகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டதை ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்க ஆசைப்படுகின்றனர். அவர்களுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,’ என்று சூழலை அறிந்து, கடிதோச்சி மெல்ல எறிந்தார் விவேக்.

அடுத்து வந்த நடிகர் ‘ஆர்ஜே’ பாலாஜியும், ‘இந்த நடிகர் சங்க தேர்தலால நாட்டுல மழை பெய்யும். விவசாயிகள் பிரச்னைகள் தீர்ந்துடும். ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டு விடும்,’ என்று ‘பிளாக் ஹியூமர்’ வகைமையில் பகடி செய்தார்.

அத்தோடு அவர் நிற்கவில்லை. ‘விவேக் சார் சொன்ன மாதிரி இன்றைக்கு சில இடங்களில் ஏரிகளை தூர் வாருகின்றனர். அதை ஏன் ஊடகங்கள் நேரலை செய்யவில்லை? இங்கே அஜித் ரசிகர்கள், விஜய் ரசிகர்கள் வந்திருக்கின்றனர். அவர்களையும் ஊடகங்கள் அழைத்தால் ஏரிகளை தூர் வார இன்னும் 100 பேர் கிடைத்திருப்பார்களே? முதல்வன் படத்தில் வருவதுபோல் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீடியாவும் இங்கேதான் இருக்கின்றன,’ என்று வெளிப்படையாக நையாண்டி செய்தார்.

அன்றைய தினம் ட்விட்டர் தளத்தில்,
‘#வண்டுமுருகன்அஜித்’ என்றும்
‘#கைப்புள்ளவிஜய்’ என்றும்
இருதரப்பு ரசிகர்களும் கடுமையாக
விமர்சித்து தொடர்ந்து கீச்சுகளை
பதிவிட்டதைக் கூட, தொலைக்காட்சிகளில்
செய்திகளாக வந்தன. ஆனால், பேச வேண்டிய,
விவாதிக்க வேண்டிய பலவற்றை நடிகர்
சங்க தேர்தல் போர்வையில் அனைத்துத் தமிழ்
காட்சி ஊடகங்களும்
ஏனோ மறந்து போயின.

ஏற்கனவே தமிழ் காட்சி ஊடகங்கள் மீது கடும் கொந்தளிப்பில் இருந்த இணையவாசிகள், விவேக், ‘ஆர்ஜே’ பாலாஜி ஆகியோரின் கருத்துகளைக் கேட்டபிறகு, நிரம்பவே வெகுண்டெழுந்தனர். தங்கள் சினத்தை, #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்று ஹேஷ்டேக் ஆக தயார் செய்து, தொடர்ந்து ரீட்வீட் செய்து கொண்டே இருந்தனர். 23ம் தேதி, இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்த ஹேஷ்டேக், ஜூன் 24ல் தேசிய அளவில் முதலிடத்தையும் பிடித்தது.

ஒரு செய்தி என்பது,
அதன் கருப்பொருள் அளவில் மட்டுமே
செய்தியாக ஆவதில்லை. மாறாக,
அதோடு தொடர்புடைய மக்களின் பரப்பளவை,
எண்ணிக்கையைப் பொருத்தும் செய்தியாகிறது
என்பதை நாம் மறுக்க இயலாது.
அந்த வகையில், நடிகர் சங்க தேர்தல்
முக்கியத்துவம் வாய்ந்ததாக காட்சி ஊடகங்கள்
கருதியிருக்கலாம். ஆனால்,
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற அளவில்
கருப்பொருளிலும், மக்களின் பயன்பாட்டிலும்
தண்ணீரே பிரதானமாகி விடுகிறது.
அப்படியான சூழலில்
நமக்கெதற்கு கேளிக்கைகள்?

ஊடகங்கள் மீது நமக்கும் அதிருப்திகள் இல்லாமல் இல்லை. எனக்குத் தெரிந்து அவை ஒருபோதும், பேசாப்பொருள்கள் பற்றி ஒருபோதும் பேசியதே இல்லை. ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி, ஊடக கார்ப்பரேட்டுகளை ஆக்டோபஸ் போல கைப்பற்றி வைத்திருக்கிறார். அதன் சாத்தியக்கூறுகள் பற்றி யாருமே விவாதிப்பதில்லையே ஏன்?

நாட்டின் 70 சதவீத வளங்கள் வெறும் நூறு பேரிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறதே? அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தியாவின் 57 சதவீத உள்நாட்டு உற்பத்தியை, ஒரு சதவீதம் பேரால் மட்டுமே உருவாக்க முடிகிறதே? எப்படி அதுவும் சாத்தியமானது? இப்படி எனக்குள் நிறைய வினாக்கள் கொட்டிக்கிடக்கினறன. இவையெல்லாம் தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களின் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவை என கருதிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆனால், பாரதியாரின் தலைப்பாகை
காவி நிறத்தில் இருக்கிறது, மேம்பாலத்திற்கு
காவி வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது
என்பதை மட்டுமே இங்குள்ள காட்சி ஊடகங்கள்
ஊதிப் பெரிதாக்குகின்றன. செய்தி ஊடகங்களில் பல,
திமுகவின் பின்புலத்தோடு செயல்படுவதாக
ட்விட்டரில் இணையவாசிகள் கழுவி கழுவி
ஊற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழ்
செய்தி ஊடகங்களை பரத்தமைத்தன்மையுடன்
ஒப்பிட்டுதான் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு காட்சி ஊடகங்களை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் அறைகூவல் விடுக்கவும் தவறவில்லை. அதேநேரம், நேஷனல் ஜியாக்ரபி, அனிமல் பிளானட், டிஸ்கவரி போன்ற சானல்களை இணையவாசிகள் பெரிதும் வரவேற்றுள்ளதையும் காண முடிந்தது.

நடிகர் சங்கத் தேர்தல் நடந்த நாளன்று,
ஹைட்ரோகார்பன், மீத்தேன்
திட்டங்களை கண்டித்து,
மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை
மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.
அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
பிரம்மாண்ட போராட்டம்.
இன்னொருபுறம், ரஜினி மக்கள் மன்றத்தினர்,
மக்களுடன் இணைந்து சிட்லபாக்கம்,
மனப்பாக்கம் ஏரிகளை சீரமைத்தனர்.
பல மாவட்டங்களில் அந்த அமைப்பினர்
டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர்
விநியோகம் செய்தனர். அவற்றுக்கெல்லாம்
காட்சி ஊடகங்கள் பெரிய அளவில்
முக்கியத்துவம் அளிக்காமல் போனதன்
பின்னணியில் அரசியலும்
இல்லாமல் இல்லை.

அதனால் ரஜினி ரசிகர்களும்கூட, செய்தி தொலைக்காட்சிகளை ஏகத்துக்கும் வறுத்தெடுத்து இருந்தனர். எல்லாவற்றுக்கும் மேல், ஜூன் 24ம் தேதி, தினத்தந்தி நாளிதழ், முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக, நடிகர் சங்க தேர்தல் பற்றியே வெளியிட்டு இருந்தது நமக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. அதையும் இணையவாசிகள் வசை பாடியிருந்தனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்,
‘சேலத்தில் பட்டர்பிளை மேம்பாலத்தின்
அடியில் 100 பெண்களை ஆபாசப்படம்
எடுத்து கற்பழிப்பு’ என்று ஒரு
தொலைக்காட்சி நிறுவனம் செய்தி
வெளியிட்டது. அதற்கு முன்பாக
பல நாளிதழ்களிலும் 50 பெண்கள்,
80 பெண்கள், 90 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக
முழுமையான குறுக்கு விசாரணையும்,
கள ஆய்வும் மேற்கொள்ளாமலேயே
கட்-காப்பி-பேஸ்ட் செய்திருந்தன.
நாம் பகிரும் ஒரு தகவல் யாருக்கானது?
அது இந்த சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்தும் என்ற சமூக பிரக்ஞையே
இல்லாமல்தான் அந்த செய்திகள்
அப்போது வெளியிடப்பட்டு இருந்தன.

இதுபோன்ற போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிடுவதால், நாம் அந்த செய்தியாளர்களை பெரிய அளவில் குறை சொல்லி விட முடியாதுதான். ஊடகப்போட்டிகளில் செய்தியாளர்களின் குரல் எங்கேயும் ஓங்கி ஒலித்துவிட முடியாது. ஆனால், செய்தியாளர்களும் வயிற்றுப்பாடு மட்டுமே வாழ்க்கையாகி விடாது என்பதையும் உணர வேண்டியது அவசியம்.

 

”சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு”

 

என்கிறான் அய்யன் வள்ளுவன்.

 

அறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும். ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?. சமூக ஊடகங்களின் தாக்கமும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய நிலையில், மக்கள்தான் முதல்நிலை செய்தியாளர்கள். ஊடகங்கள், இங்கே செய்திகளை, தரவுகளை ஒருங்கிணைக்கும் வேலையைத்தான் செய்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். ஆகையால், ஊடகங்கள் அறம் பேண வேண்டியது கட்டாயம்.

 

– பேனாக்காரன்

Leave a Reply