Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

5 ஆண்டுகளை நிறைவு செய்த பணமதிப்பிழப்பு எனும் பேரழிவு! பிரதமரும் முட்டாள் குரங்கும்!

அதற்கு முன்பு இந்தியா கண்டிராத ஒரு மாபெரும் பேரிடரை நாடு அன்று இரவு சந்தித்தது. அந்த நாள், நவ. 8, 2016. திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி, தொலைக்காட்சிகளில் தோன்றி, இரவு 8 மணி முதல் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்று அதிரடியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

அதை டீமானிடைசேஷன்
என்றார் பிரதமர். அதாவது,
பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம்.
இப்படியொரு அஸ்திரத்தை
ஏவிய பிறகு, தான் ஏன் அவ்வாறான
முடிவுக்கு வந்தேன் என்பதற்கு
மூன்று காரணங்களையும் சொன்னார்.

பணமதிப்பிழப்பின் மூலம்
நாட்டில் உள்ள அத்தனை கருப்புப்
பணத்தையும் ஒழித்துக் கட்டுவது;
கள்ளப்பணத்தை அழிப்பது;
டிஜிட்டல் பேமன்ட் எனப்படும்
பணமில்லா நடவடிக்கையை
வளர்த்தெடுப்பது என காரணங்களை
பட்டியலிட்டார், பிரதமர் மோடி.

இந்த அறிவிப்பு வெளியிட்ட
அடுத்த நான்கு மணி நேரத்தில்,
அதுவரை புழக்கத்தில் இருந்த
86 சதவீத 500, 1000 ரூபாய் தாள்கள்
செல்லாதவையாக மாறிப்போயின.

பிரதமர் திடுதிப்பென்று
இப்படியொரு அறிவிப்பை
வெளியிடுவார் என்று பாஜக
கேபினெட்டில்கூட யாருக்கும் தெரியாது
என்றே சொன்னார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரும் கூட
தனக்கு இதைப்பற்றி எந்த முன் குறிப்புகளும்
தரப்படவில்லை என அதிரடித்தார்.
அதாவது, நாட்டின் சகல அதிகாரங்களையும்
மோடி மட்டுமே அன்றிரவு பெற்றிருந்தார்
என்பது சரியாக பொருந்தும்.

அவருடைய இந்த முடிவை
பொருளாதார நிபுணர்கள் யாரும்
ஒப்புக்கொள்ளவில்லை.
மோடி குறிப்பிட்டதுபோல கள்ளப்பணமோ,
கருப்புப்பணமோ அவை வெறும்
5 சதவீத அளவுக்குள்தான்
பணத்தாள்களாக இருக்கும்.
கருப்புப்பணத்தில் 95 சதவீதம்
ரியல் எஸ்டேட், தங்கம் அல்லது
இன்னபிற சொத்துகளின் மீது
முதலீடுகளாகத்தான் இருக்கும்
என்றும் கூறினர்.

வாசகர்களின் புரிதலுக்காகச்
சொல்கிறேன். கருப்புப்பணம் என்பது,
வங்கி நடைமுறைக்குள் வராத,
அரசு கணக்கில் காட்டப்படாமல்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணமாகும்.
மோடியின் மூன்று இலக்குகளில்
கருப்புப் பணத்திற்கு எதிரான
நடவடிக்கைதான் பெரிதாக இருந்தது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு,
நவ.8ம் தேதியுடன் ஐந்து
ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
அப்போது வீழ்ந்த இந்திய பொருளாதாரம்
இப்போது வரை பெரிய அளவில்
வளர்ச்சி அடையவில்லை.

சரி…
பணமதிப்பிழப்பு நடவடிக்கை,
மோடியின் கூற்றுப்படி
கருப்புப்பணத்தை ஒழித்துக்
கட்டியதா?

இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி,
செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட
மொத்தப் பணமும் அதாவது,
99 சதவீதத்திற்கும் சற்று அதிகமாகவே
வங்கி அமைப்புக்குள் வந்து
சேர்ந்து விட்டன. செல்லாத
15.41 லட்சம் கோடி ரூபாய்
மதிப்பிலான 500, 1000 ரூபாய்
பணத்தாள்கள் ரிசர்வ் வங்கிக்கு
திரும்பி விட்டன.

கடந்த 2019ல்,
மத்திய நிதியமைச்சராக இருந்த
பியூஷ் கோயல், பண மதிப்பிழக்கம்
உள்ளிட்ட பல்வேறு கருப்புப்பண
எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம்
1.30 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம்
மீட்கப்பட்டு உள்ளதாக மக்களவையில்
தெரிவித்து இருந்தார்.
இதை நாம் சொல்லவில்லை.
பாஜக அமைச்சரே ஒப்புக்கொண்டது.

காங்கிரஸ் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு ஒரு மோசமான கொள்கை முடிவு என்றும், இதை ஒரு பேரழிவு என்றும் விமர்சனங்கள் கிளம்பின.

புதிய 2000 ரூபாய் பணத்தாளை வாங்குவதற்காக வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் மைல் நீள வரிசையில் காத்திருந்த ஏழைபாலைகள் பலர் மயங்கி விழுந்து மாண்டதுதான் மிச்சம்.

”புழக்கத்தில் இருந்த 15 லட்சம் கோடி ரூபாய்களை கருப்புப் பணமாக பதுக்கி வைக்கப்படவில்லையா அல்லது பணமதிப்பு நீக்க நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஓட்டைகளைப் பயன்படுத்தி பதுக்கல்காரர்கள் பணத்தின் நிறத்தை கருப்பு நிறத்தில் இருந்து வெள்ளையாக மாற்றினார்கள் என்பதுதான் உண்மை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தாள்கள் அனைத்தும் ஆர்பிஐக்கு திரும்பியது. எதுவும் பயனற்ற காகிதத் துண்டுகளாக மாறவில்லை,” என கிண்டலடிக்கிறார் சுபாஷ் சந்திர கார்க். இவர், முன்னாள் நிதித்துறை செயலர்.

இவரைப் போலவே ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும், பிரதமரின் செயலை கடுமையாக விமர்சித்து உள்ளார். பணமதிப்பு நீக்க யோசனையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், இந்த நடவடிக்கையின் குறுகிய கால தாக்கம் நீண்டகால ஆதாயங்களை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்தால் மட்டும் வங்கி நடைமுறைகளுக்கு வெளியே, குறைந்தபட்சம் 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் ஒழிந்து விடும் என்று பிரதமர் அப்போது அசட்டுத்தனமாக நம்பி இருந்தார். அதுதான் இந்த பேரழிவு திட்டத்துக்கு அடித்தளமே. கருப்புப்பணம் ஒழிந்து விடும் என்று அவர் சொன்னதற்கு மாறாக, பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகுதான் அன்றாடம் கருப்புப்பணம் பிடிபடுவது அதிகரித்துள்ளது. இதிலிருந்தே மோடியின் திட்டம் எத்தனை பெரிய தோல்வி கண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து நாம், மோடியின் இரண்டாவது இலக்கான கள்ளப்பணம் ஒழிப்பு எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 2016ம் ஆண்டில், நாடு முழுவதும் 6.32 லட்சம் எண்ணிக்கையிலான கள்ள ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அடுத்த நான்கு ஆண்டுகளில், இந்தியா முழுவதும் மொத்தம் 18.87 லட்சம் போலி ரூபாய் தாள்கள் பல்வேறு வகைகளில் பிடிபட்டிருக்கின்றன என்கிறது ஆர்பிஐ.

எவ்வளவு கள்ளப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாக ஆர்பிஐ சொல்கிறது. 2019-2020ம் ஆண்டில், வங்கிகள் மூலம் கண்டறியப்பட்ட போலி இந்திய ரூபாய் தாள்களில் 4.6 சதவீதம் ரிசர்வ் வங்கியிலும், 95.4 சதவீதம் மற்ற வங்கிகளிலும் கண்டறியப்பட்டு உள்ளன.

பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகான ஆண்டுகளில் பிடிபட்ட பெரும்பாலான போலி ரூபாய் தாள்களில் 100 ரூபாய் மதிப்பிலானவை 2019-2020ல் 1.70 லட்சம், 2018-2019ல் 2.2 லட்சம், 2017-2018ல் 2.4 லட்சம் ஆக இருந்துள்ளது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்,
144.6 சதவீதம் 10 ரூபாய் தாள்களும்,
50 ரூபாய் தாள்களில் 28.7 சதவீதமும்,
200 ரூபாய் தாள்களில் 151.2 சதவீதமும்,
500 ரூபாய் தாள்களில் 37.5 சதவீதமும்
போலிகள் அதிகரித்துள்ளதாக
கூறுகிறது ரிசர்வ் வங்கி.

மோடியின் மூன்றாவது
இலக்கான டிஜிட்டல் வர்த்தகம்
பற்றி பார்க்கலாம்.
பணமில்லா வர்த்தகம் என்னவோ
ஓரளவு வளர்ச்சி கண்டிருப்பது உண்மைதான்.
ஆனாலும், டிஜிட்டல் யுகத்திலும்
நேரடி பண பரிவத்தனைதான்
டிஜிட்டலை விட பெரிய அளவில்
வளர்ந்திருக்கிறது. இதற்கும் ரிசர்வ்
வங்கிகளின் தரவுகளையே
ஆதரமாகக் கொள்ளலாம்.

புழக்கத்தில் உள்ள ரூபாயில்,
கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 2020
நிலவரப்படி, 16.4 லட்சம் கோடியில்
இருந்து, அக். 29, 2021 அன்று 29.17
லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

நிச்சயமாக டிஜிட்டல் பேமண்ட் முறை
வளர்ந்துள்ளது என்பதை ஆர்பிஐயும்
மறுக்கவில்லை. ஆனாலும் கூட,
எல்லா வகையான டிஜிட்டல் பேமண்ட்
வர்த்தகத்தை விடவும்,
நேரடி பணம் மூலமான வர்த்தக
மதிப்பு மிகப்பெரியது என்கிறது.
என்னதான் டிஜிட்டல் வர்த்தகம்
அதிகரித்தாலும் மக்கள், இன்னும்
அதிகளவில் நேரடி பண பரிவர்த்தனையை
விரும்புவது தெரிய வந்துள்ளது.

இதை இன்னொரு வடிவத்திலும்
புரிந்து கொள்ள முடியும். மோடியின்
சீர்குலைக்கக் கூடிய பணமதிப்பு நீக்க
நடவடிக்கை இல்லாமல் போயிருந்தாலும் கூட
டிஜிட்டல் பண வர்த்தகம் இந்தளவுக்கு
வளர்ச்சி கண்டிருக்கும் என்பது
இயல்பானதுதான் என
புரிந்து கொள்ளலாம்.

இந்திய பொருளாதாரச் சூழலில்
பணமதிப்பு நீக்கம் என்பது ஒரு
புத்திசாலித்தனமான முடிவா?
என்பது குறித்த விவாதங்கள்
இன்னும் ஓய்ந்தபாடில்லை.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை
நிச்சயமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
கண்டிருந்தபோது, பணமதிப்பு நீக்கத்தால்
கருப்புப்பணமோ, கள்ளப்பணமோ
ஒழியவில்லை என்பதே நிதர்சனம்.

எனக்கு இந்த நேரத்தில் ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். அவனுடைய அரண்மனையில் குரங்கு ஒண்ணும் வேலை செய்துட்டு இருந்ததாம்”

”ஒருநாள் ராஜா தூங்கிக்கிட்டு இருந்தபோது, அவனுடைய கழுத்தில் ஒரு கொசு வந்து உட்கார்ந்துச்சாம்”

”அதை பார்த்துவிட்ட அந்தக் குரங்கு, ராஜாவின் கழுத்தில் உட்கார்ந்து இருந்த கொசுவை அடிப்பதற்காக ஒரு வாளை எடுத்து வந்து ஒரே போடாக போட்டுச்சாம்”

”இதில், ராஜாவின் கழுத்தில் இருந்த கொசு செத்துப்போனது என்னவோ உண்மைதான். ஆனால் வாளால் வெட்டியதில் ராஜாவும் கழுத்து வெட்டப்பட்டு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செத்துப் போயிட்டாராம்”

”இதிலிருந்து என்ன தெரியுதுனா…. கழுத்தில் உட்கார்ந்த கொசுவை விரட்ட வாளை எடுத்து வெட்டிய குரங்கு போன்ற முட்டாள்களை நம் பக்கத்தில் ஒருபோதும் வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்துக் கொண்டால் ராஜாவுக்கு நேர்ந்த கதிதான் நமக்கும்!”

சரி… இப்போது இந்த கதையில் வரும் ராஜா, கொசு, குரங்கு ஆகிய மூன்று பாத்திரங்களை கொஞ்சம் உல்டாவாக திருப்பிப் போட்டுப் பாருங்கள். இங்கே ராஜா என்பது பிரதமராக கொள்ளாமல் இந்திய மக்களாக கருதிக் கொள்ளுங்கள்.

ராஜாவின் கழுத்தில் உட்கார்ந்த கொசு என்பது இங்கே மிகச்சொற்பமாக இருந்த கருப்புப்பணம் மற்றும் கள்ளப்பணமாக கருதிக் கொள்ளுங்கள். எனில், அந்த முட்டாள் குரங்கு யாராக இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

 

– பேனாக்காரன்