
ரசிகனை கிறங்கடிக்கும் நெல்லுச் சோறும் நேத்து வெச்ச மீன் கொழம்பும்!
இசையமைப்பாளர், கவிஞர், பாடகர், நடிகர் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களும் துல்லியமான பங்களிப்பை வழங்கும்போது ஒரு சினிமா பாடல் முழுமையான வெற்றி பெற்று விடுகிறது. அப்படி சரியான கலவையில் அமைந்த பாடல்களுள் ஒன்றுதான், 'நித்தம் நித்தம் நெல்லுச் சோறு… நெய் மணக்கும் கத்தரிக்கா…' பாடலும்.
ரஜினியின் திரைப் பயண வரலாற்றை, 'முள்ளும் மலரும் (1978)' படத்தை ஒதுக்கி விட்டு, எழுதிவிட முடியாது. இயக்குநராக மகேந்திரனுக்கும் அதுதான் மைல் கல் படம்.
'கெட்டப் பையன் சார் இந்தக் காளி…' என்று ரணகளப்படுத்தி இருக்கும் ரஜினியின் நடிப்பைத் தாண்டி, இந்தப் படத்தில் சிலாகிக்க நிறைய அம்சங்கள் நிரம்ப இருக்கின்றன. கதை, நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட திரைக்கதை, பாத்திரப் படைப்புகளைக் கடந்து, இதன் பாடல்களும், பின்னணி இசையும் இன்று வரை ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இசைஞானி இளையராஜா, இந்தப் படத்தை தோளில் சுமந்து சென்றிருப்ப...