Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

காற்றிலே கரைந்த பாடும் நிலா பாலு! நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே…!!

கடந்த 2010ம் ஆண்டில் சிபிராஜ், பிரசன்னா நடிப்பில் ‘நாணயம்’ படம் வெளியானது. அதில், ‘நான் போகிறேன் மேலே மேலே… பூலோகமே காலின் கீழே…’ என்ற டூயட் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். அந்தப்பாடலின் பல்லவியை இன்று (செப். 25, 2020) மெய்யாக்கி, கோடிக்கணக்கான ரசிகர்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார், ரசிகர்களால் ‘பாடும் நிலா பாலு’ என்றழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74).

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 4.6.1946ல் பிறந்த எஸ்.பி.பி.யின் முழு பெயர், ஸ்ரீபதி பண்டிதராத்யூலா பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட 16 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் திரையிசை பாடல்களுக்கு மேல் பாடி, கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த எஸ்.பி.பி., கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சில நாள்களிலேயே அவர் கவலைக்கிடம் என்றெல்லாம் தகவல்கள் கசிந்த நிலையில், திடீரென்று உடல்நலத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் மீண்டும் அவருடைய உடல்நலம் மோசமடைந்ததால், அவருக்கு வெண்டிலேட்டர் மற்றும் ‘எக்மோ’ உபகரணங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று பகல் 1.04 மணிக்கு உயிரிழந்தார். நேற்றே நடிகர் கமல்ஹாசன், மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்துவிட்டு வந்தார். இன்று காலை முதலே ஏராளமான திரை பிரபலங்கள் மருத்துவமனையில் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தனர்.

 

இயக்குநர் பாரதிராஜா எஸ்.பி.பி.யை மருத்துவமனையில் பார்த்துவிட்டு வந்தார். அவரிடம் ஊடகக்காரர்கள் கேட்டபோது, ”நானும் அவனும் 50 ஆண்டு கால நண்பர்கள். ‘வாடா போடா’னுதான் பேசிக்குவோம். சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. அதிலும் நான் இப்போது எமோஷனலாக இருக்கிறேன். என்னால் பேட்டி கொடுக்க முடியாது.

 

இயற்கைக்கு முன்னாடி யாருமே பெரியவன், சின்னவன் என்பதெல்லாம் கிடையாது. ஏதோ ரசிகர்கள் பிரார்த்தனையால் நடுவில் பத்து நாள் உடல்நலம் தேறி வந்தது. இப்போது எந்த பிரார்த்தனைக்கும் பலம் இல்லாமல் போய்விட்டது. மகிழ்ச்சியான விஷயங்கள் இருந்தால் பேசலாம். இப்போது என்னால் பேச முடியவில்லை,” என்று கண்ணீர் விட்டு அழுதார்.

 

அப்போதே எஸ்.பி.பி. இறந்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாயின. அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனை நிர்வாகமே எஸ்.பி.பி. மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது. எஸ்.பி.பி.யின் உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அடக்கம் செய்வதற்காக அவருடைய உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. நாளை (செப். 26) பகல் 11 மணிக்கு எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

எஸ்.பி.பி.யுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், 5 சகோதரிகள். சகோதரிகளில் ஒருவர்தான் எஸ்பி.ஷைலஜா. அவரும் பிரபல பின்னணி பாடகர்.

 

எஸ்.பி.பி.க்கு மனைவி சாவித்ரி, மகன் எஸ்பி.சரண், மகள் பல்லவி உள்ளனர். அவர் பாடகர் மற்றும் படத்தயாரிப்பாளராக உள்ளார். எஸ்.பி.பி.யை வெறுமனே பாடகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அவர் ஒரு பன்முகக் கலைஞர்.

 

பாடகர், பின்னணி குரல் கலைஞர், நடிகர், இசையமைப்பாளர் என பல துறைகளிலும் வித்தகர். தெலுங்கு மொழியில் கமல் நேரடியாக நடித்தபோதும், அவருடைய படங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டபோதும் அவருக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தது எஸ்பிபிதான்.

 

பொறியாளர் ஆவதுதான் லட்சியம் என்று சொல்லி வந்த அவர், ஆனந்தபூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் படிப்பை பாதியிலேயே கைவிட நேர்ந்தது. பின்னர் சென்னை ஏஎம்ஐஇ&ல் சேர்ந்து பொறியியல் பயின்றார். என்றாலும், மற்றொருபுறம் மேடைகளில் அமெச்சூர் கலைஞராக பாடல்களும் பாடி வந்தார். அதில் அவருக்குக் கிடைத்த கைத்தட்டல்களும் விருதுகளுமே சினிமா பக்கம் கவனம் செலுத்த வைத்தது.

 

முதன்முதலில் அவர் தெலுங்கில் 1966ல் வெளியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். தாய்மொழிக்கு வெளியே கன்னடத்தில் 1966ல் ஒரு படத்தில் பாடல் பாடினார்.

 

தமிழில் அவர் முதன்முதலில் ‘சாந்தி நிலையம்’ படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி…’ என்ற பாடலை பாடினார். அதுதான் முதலில் பதிவு செய்யப்பட்டது. என்றாலும், அதற்கு அடுத்து அவர் எம்ஜிஆர் நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் அவருக்காக பாடிய, ‘ஆயிரம் நிலவே வா…’ பாடல்தான் முதலில் வெளியானது. அதுவே அவருக்கு தமிழில் முதல் பாடலாகவும் அமைந்தது.

 

‘சாந்தி நிலையம்’,
‘அடிமைப்பெண்’
படங்களில் எஸ்பிபி பாடிய
இரண்டு பாடல்களும் பெரும்
வரவேற்பு பெற்றதால்,
ஒரே இரவில் திரைத்துறையில்
புகழின் உச்சிக்கே சென்றார்.
அடுத்தடுத்து தமிழில்
அவருக்கு பட வாய்ப்புகள்
வரிசை கட்டி நின்றன.

 

எஸ்பிபிக்கு 80களின்
தொடக்கமே பெரும்
திருப்புமுனையாக அமைந்தது.
1979ல் தெலுங்கில் ‘சங்கராபரணம்’
படத்தில் அவர் பாடிய
பாடலுக்காக முதன்முதலில்
தேசிய விருது பெற்றார்.
அந்தப் படத்தில் இடம் பெற்ற
பாடல்கள் அனைத்துமே
கர்னாடக இசையில் அமைந்த
பாடல்கள். தேசிய விருது
பெற்றபோது எஸ்பிபி,
எனக்கு கர்னாடக இசை
தெரியாது என்றார். அதைக்கேட்டு
ரசிகர்கள், கர்னாடக
இசைக்கலைஞர்களே
மெய்சிலித்தனர். அந்தளவுக்கு
கனகச்சிதமாக அவர்
தாளக்கட்டுடன் சுதி சுத்தமாக
பாடியிருந்தார்.

 

அதன் பிறகு,
ஹிந்தியில் கமல் நடித்த
‘ஏக் துஜே கே லியே’ (1981)
படத்தில் எஸ்பிபி பாடிய
‘தேரே மேரே பீச் மெய்ன்…’
பாடலுக்காக இரண்டாவது
தேசிய விருதைப் பெற்றார்.
அப்போதும் அவருக்கு
ஹிந்தி மொழி தெரியாது
என்றபோது, ஹிந்தி தெரியாமலேயே
அந்த மொழியையே தாய்மொழியாகக்
கொண்டவர் போல கச்சிதமாக
பாடிய அவரின் பாட்டுத்திறத்தைக்
கண்டு அனைத்துத்தரப்பு
ரசிகர்களும் அவரை தலையில்
தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

 

எம்ஜிஆர் மட்டுமின்றி,
‘சூரியகாந்தி’ படத்தில்
ஜெயலலிதாவுடனும் இணைந்து
பாடியிருக்கிறார்.

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க,
இசைஞானி இளையராஜாவின்
இசையில் எஸ்பிபி பாடிய
பாடல்கள் அனைத்துமே
பெருமளவில் ஹிட் அடித்தன.
அவர்கள் துறைக்கு வெளியிலும்
‘வாடா போடா’ நண்பர்களாக
இருந்தனர். சொல்லப்போனால்
ஈருடல் ஓருயிராக இருந்தனர்.
80, 90களில் தமிழில் உச்சத்தில்
இருந்த ரஜினி, கமல் ஆகிய
இரு பெரும் நடிகர்களுக்கும்
90 சதவீத பாடல்களை எஸ்பிபியே
பாடியிருந்தார். அந்தந்த
நடிகர்களுக்கு ஏற்ப குரலில்
மாற்றத்தைக் கொண்டு
வருவதில் கெட்டிக்காரர்.

 

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி,
ஜெமினி தொடங்கி ரஜினி, கமல்
மற்றும் அவர்களுக்குப் பிந்தைய
தலைமுறை நடிகர்களுக்கும்
பாடிக்கொண்டிருந்தார் எஸ்பிபி.

 

இதுவரை அவர் தெலுங்கில் பாடல்களுக்காக 3 முறையும், கன்னடம், தமிழ், ஹிந்தி மொழி பாடல்களுக்காக தலா ஒரு முறை என 6 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளும் பெற்றுள்ளார்.

 

‘பாடும் நிலா பாலு’ என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்த எஸ்பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் பேரிழப்பு.

 

நல்ல கலைஞன் என்பதைக் கடந்து நல்ல நண்பன், எல்லோருக்கும் உதவுக்கூடிய மனித நேயமுள்ள மனிதன் என்கிறார்கள் உடன் பழகிய திரைத்துறை கலைஞர்கள், நண்பர்கள்.

 

மனித நேயமிக்க கலைஞனின் மறைவுக்கு ‘புதிய அகராதி’ இணைய இதழும் தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.