Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிறை கொட்டடியில் சந்தன வீரப்பன் அண்ணன் மாதையன் மரணம்; வயதான கைதிகளின் கதி என்ன?

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன், மே 25ம் தேதி, புதன்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.

மாதையன்

78 வயதான மாதையன்,

நீண்ட காலமாக சிறைக் கொட்டடியில்

இருந்தே உயிர் விட்டிருக்கிறார்.

அவருடைய மரணம்,

தமிழக சிறைச்சாலைகள் வயதான

கைதிகளின் வதை முகாம்களாக

மாறி வருகிறதா என்ற கேள்வியை

எழுப்பி இருக்கிறது.

சந்தன கடத்தல் வீரப்பனின்

அண்ணன் மாதையன்,

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர்

காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட

பகுதியில் வனச்சரகர் சிதம்பரம் என்கிற

சிதம்பரநாதன் கொல்லப்பட்ட வழக்கில்

கைது செய்யப்பட்டார்.

1987ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஆரம்பத்தில், சிதம்பரம் கொலை வழக்கில்

மாதையன் பெயர் சேர்க்கப்படவில்லை.

ஆனாலும் அவரை கைது செய்து

சிறையில் அடைத்தனர்.

கடந்த 1996ம் ஆண்டு அவருக்கு

ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை

விதித்து, தீர்ப்பு அளித்தது.

சடலமாக மாதையன்…

கோவை மத்திய சிறையில்

அடைக்கப்பட்டிருந்த மாதையன்,

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு

சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த

அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை

இருதய அறுவை சிகிச்சை

செய்யப்பட்டுள்ளது.

 

மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்ட

மாதையன், மே 1ம் தேதி சேலம்

அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஐசியூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை

அளிக்கப்பட்டு வந்தது.

 

சிகிச்சை பலனின்றி,

புதன்கிழமை (மே 25) அதிகாலை

5.45 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு

வந்த அவர், மாரடைப்பால் இறந்ததாகச்

சொல்கிறது மருத்துவர்களின் அறிக்கை.

 

உடல்நலமின்றி இறந்தாலும் கூட

சிறை மேற்பார்வையில் இருந்தபோது

நிகழ்ந்த மரணம் என்பதால்,

சிஆர்பிசி பிரிவு 176 (1ஏ)-ன் படி,

மாதையன் மரணமும்,

காவல் மரண வழக்காகவே கருதப்படும்.

அதனால், அவருடைய மரணம் குறித்து

நீதித்துறை நடுவர்தான் விசாரிக்க முடியும்.

அதன்படி, சேலம் மூன்றாவது குற்றவியல்

நீதிமன்ற நடுவர் தங்க கார்த்திகா,

நேரில் சடலத்தைப் பார்வையிட்டு,

விசாரணை நடத்தினார்.

 

இது ஒருபுறம் இருக்க, மாதையன் ஆயுள் தண்டனை கைதியானது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வதும் அவசியம்.

 

தமிழக, கர்நாடகா மாநில காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரப்பன், தன் தம்பி அர்ஜூனனுடன் சேர்ந்து காட்டுக்குள் சந்தன கட்டை கடத்தலில் ஈடுபட்டிருக்க, அவருக்கு வெளியில் இருந்து மூளையாக செயல்பட்டவர்தான் மாதையன்.

 

இந்த நிலையில்தான், உறவினர் ஒருவருடைய மகள் பெரிய மனுஷியாகி இருக்க, அந்த விழாவில் கலந்து கொள்ள வீரப்பன் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதன்பேரில் விழா நடந்த வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர், மாதையன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்தனர். ஆனால் அந்த நேரத்தில் வீரப்பனும், அவருடைய தம்பியும் தப்பிச் சென்றுவிட்டது பின்னர்தான் தெரிய வந்தது.

 

காவல்துறையினர், மாதையன் உள்ளிட்ட 5 பேரையும் தலைமலை வனச்சரகராக இருந்த சிதம்பரநாதனிடம் ஒப்படைத்தனர். அவர் மாதையன் உள்ளிட்டோரை அடித்துச் சித்ரவதை செய்துள்ளார்.

 

அண்ணனை கொடுமை படுத்தியதற்கு வஞ்சம் தீர்க்கும் விதமாக வீரப்பன், சிதம்பரநாதனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கில்தான் மாதையனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

 

கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் சிறையில் இருந்து வந்த மாதையன் தற்போது உடல்நலமின்றி உயிரிழந்துள்ளார்.

 

அதேநேரம், பங்களாபுதூர் கொலைக்கும் மாதையனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும், அது முற்றிலும் புனையப்பட்ட வழக்கு என்றும் வீரப்பன் ஆதரவாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

அன்புராஜ்

இது தொடர்பாக தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் பொறுப்பாளரும், வீரப்பனுடன் பயணித்தவர்களுள் ஒருவருமான அன்புராஜ் நம்மிடம் பேசினார்.

 

”வீரப்பன் வழக்கில்

தொடர்ச்சியாக தமிழ்நாடு, கர்நாடகா

சிறைகளில் 6 சிறைவாசிகள் 33 வருஷங்களாக

சிறையில் இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக

தமிழக சிறையில் அடைக்கப்பட்டிருந்த

வீரப்பனின் அண்ணன் மாதையன்

இப்போது உயிரிழந்திருக்கிறார்.

 

வயதான மற்றும் உடல்நலமின்றி

சிறையில் அவதிப்பட்டு வரும் அவரை

விடுவிக்கக் கோரி முதல்வரின்

கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.

அவர் விடுதலை செய்யப்படவில்லை.

இதேபோல் ஆண்டியப்பன், பெருமாள்

என்ற இருவர் 34 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

அவர்களின் விடுதலை எல்லாம்

சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

 

இந்தியாவில் ஒருவரின் நீண்ட

சிறைவாசமாக இதை கருதுகிறோம்.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்றால்,

நியாயமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டிய

விடுதலையும் விரைவாக கிடைக்க வேண்டும்.

 

இரண்டு மடங்கு ஆயுள் தண்டனையை விட

அதிக காலம் 34 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

வீரப்பன் வழக்கில் சிறையில் உள்ள மற்ற

இருவரையும் விரைவில் விடுதலை

செய்ய வேண்டும். 10 ஆண்டுக்கும்

மேலாக உள்ள கைதிகளை,

நன்னடத்தையின் அடிப்படையில்

விடுதலை செய்ய வேண்டும்,”

என்கிறார் அன்புராஜ்.

 

மாதையனின் உடலை,

மருத்துவர் கோகுல் தலைமையிலான குழுவினர்,

மாஜிஸ்ட்ரேட் தங்க கார்த்திகா

முன்னிலையில் கூராய்வு செய்தனர்.

இப்பணிகள் அனைத்தும் வீடியோ

கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

உடற்கூராய்வு முடிந்த பிறகு,

மே 25ம் தேதி மாலை 06:20 மணிக்கு

மாதையனின் சடலம் அவருடைய

மனைவி மாரியம்மாள்,

மகள் ஜெயம்மாள், மருமகன் முனுசாமி

ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாதையனின் மனைவி மாரியம்மாள், மகள் ஜெயம்மாள்

மாதையனின் சடலத்தைப் பார்த்து

அவருடைய குடும்பத்தினர் மற்றும்

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி,

அவருடைய மகள்கள் வித்யா, விஜயலட்சுமி

ஆகியோர் கண்ணீர் சிந்தினர்.

 

மருத்துவமனை வளாகத்தில்,

தமிழ்த்தேசிய அமைப்பினர்,

வீரப்பனின் ஆதரவாளர்கள் ஆகியோர்,

”வீர வணக்கம்… வீர வணக்கம்… வஞ்சகத்தால்

வீழ்த்தப்பட்ட மாதையனுக்கு

வீர வணக்கம்…,” என்று முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு சிறிது நேரம்

பரபரப்பு ஏற்பட்டது. கியூ பிராஞ்ச்

உள்ளிட்ட உளவுப்பிரிவு காவல்துறையினர்

தீவிர கண்காணிப்பில்

ஈடுபட்டிருந்தனர்.

 

இதையடுத்து, மாதையனின் சொந்த ஊரான மூலக்காடுக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டது. இரவு 11:00 மணியளவில், வீரப்பனின் சமாதி அருகே, மாதையனின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

கண்ணதாசன் – சிவக்குமார்

தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த

தர்மபுரி சிவக்குமார், திருவண்ணாமலை

கண்ணதாசன் ஆகியோர் கூறுகையில்,

”மாதையன் மறைவுக்கு அஞ்சலி

செலுத்தக் கூட உள்ளூர் தமிழ்த்தேசிய

ஆதரவாளர்கள், வீரப்பன் பெயரைச் சொல்லி

கட்சி நடத்தி வரும் பாமக, நாம் தமிழர்,

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள்

ஒருவர் கூட நேரில் வராதது

வருத்தம் அளிக்கிறது.

 

மாதையன் போல நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நோய்வாய்ப்பட்ட கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

 

மாதையன் போன்ற வயதான, உடல்நலமற்ற கைதிகளை சிறை கொட்டடியில் இருந்து விடுவிப்பது குறித்து தமிழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

– பேனாக்காரன்