Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரெம்டெசிவர், சி.டி. ஸ்கேன் தேவையில்லை! மருத்துவர் பிரியா சம்பத்குமார் தகவல்!!

கொரோனா இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றுநோய் ஆராய்ச்சியாளர் பிரியா சம்பத்குமார் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த தகவல்களில் இருந்து…

தொற்றின் வேகம் முதல் அலையைவிட இரண்டாவது அலையில் அதிகமாக இருப்பது ஏன்?

 

உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதேபோல வீட்டில் இருக்கும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும்போது அதிக நெருக்கம் காரணமாக அதிகப்படியான வைரஸ், நுரையீரலை சென்றடைகிறது. இதனால் நோயின் வீரியமும் அதிகமாக ஆகிறது.

 

முதல் அலையில் குடும்பத்தினுள் கொரோனா வைரஸ் பரவும் விகிதம் 30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 100 சதவீதமாக மாறியிருக்கிறது. ஆகையால், குடும்பத்தினுள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவரை முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பிறர் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த பின்னர் தனது உடலை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும்?

 

கொரோனா வைரஸ் என்பது நுரையீரலை மட்டுமின்றி, உடலின் இதர உறுப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. ஆகையால் இணை நோய் உள்ளவர்கள் அவர்களுடைய உடலை நன்றாக பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிக எடையுள்ளவர்களாக இருந்தால் எடையை குறைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். உணவை பொருத்தவரை சர்க்கரை அளவை மட்டும் கட்டுக்குள் வைத்து, என்ன பிடிக்கிறதோ அதை உண்ணலாம்.

 

ரெம்டெசிவர் மருந்து அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற மருந்துதானா?

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அதிகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும். அந்த சமயத்தில் ஸ்டீராய்டு மருந்துகளை எடுக்கும்போது அதுவே வைரஸை அதிகரிக்க உதவி புரியும். ஆதலால்தான் ஆரம்பக்கட்டத்தில் ஸ்டீராய்டு ஆபத்தானது என்கிறோம். நோயாளிக்கு ஆக்சிஜன் தேவைப்படும்போது நமது உடல் கொரோனாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் வீக்கத்தை (Inflammation) குறைக்க ஸ்டீராய்டு எடுத்துக் கொள்ளலாம்.

 

நோயாளிகள் ரெம்டெசிவர் மருந்தை எடுத்துக் கொள்வதால் அவர்கள் மருத்துவமனையில் தங்கும் நேரம் குறைவாக இருக்கிறது. ஆகையால் இது யாருக்கும் எதற்கும் பயனில்லை.

 

ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது என்ற தகவல் உள்ளதே?

 

கருப்பு பூஞ்சை தொற்று நோய் அதிகமாக ஸ்டீராய்டு கொடுத்தால் ஏற்படும். சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டு கொடுக்கும்போது அவர்களுடைய சர்க்கரை அளவு கட்டுக்கடங்காத அளவில் செல்கிறது. இதுவும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.

 

ஊரடங்கு தேவைதானா? இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதே?

 

ஊரடங்கு கட்டாயம் தேவை. அதன் பலன் ஓரிரு வாரங்களுக்குப் பிறகுதான் தெரியும். வாழ்வாதாரத்தை விட வாழ்க்கை முக்கியம். ஆகையால் இந்த நேரத்தில் நாம் வாழ்க்கை குறித்துதான் யோசிக்க வேண்டும்.

 

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

 

கர்ப்பிணிகள் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். நியூயார்க்கில் பைசர், எம்ஆர்என்ஏ உள்ளிட்ட தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்கு நன்றாக வேலை செய்திருக்கிறது.

 

தடுப்பூசிகளை பொருத்தவரை முன்பதிவு செய்து தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக இது சாமானியனுக்கும் சென்று சேரும் வகையிலான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

இப்போது கையில் இருக்கும் ஒரே தடுப்பூசி முகக்கவசம் அணிவது மட்டும்தான். அது இரண்டு அடுக்கு கொண்ட முகக்கவசமாக இருக்க வேண்டும். அதனை வழிமுறைகளின்படி முறையாக பயன்படுத்த வேண்டும். அதேபோல சி.டி. ஸ்கேனும் நோயாளிகளுக்கு தேவையில்லை. அதற்குப் பதிலாக பல்ஸ் ஆக்சிமீட்டரை பயன்படுத்தலாம்.

 

– பேனாக்காரன்