Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்!

ரேஷன் மானியம் ரத்து குறித்த அறிவிப்பு, சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.இந்திய அரசாங்கம் என்பது, சாமானிய மக்கள் நலன் நாடும் அரசு என்ற எண்ணவோட்டத்தில் இருந்து விலகிச்சென்று, கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு மட்டுமே இனி சேவகம் செய்யும் என்ற நிலைக்கு தன்னை உருமாற்றிக் கொண்டு வருகிறது.

ரேஷன் கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய குடிமைப் பொருட்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்பதுதான் தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஷரத்து.

இதற்காகத்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடுமையாக இந்த சட்டத்தை எதிர்த்து வந்தார். அதற்கு மக்கள் நலன் மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. ஏனெனில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அரசியலும் ஒன்று இருக்கிறது. தமிழகத்தைப் பின்பற்றி மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட ஏனைய மாநில அரசுகளும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை தமிழ்நாடே அறியும்.

ரேஷன் மானியம் ரத்து என்பதற்கான பிள்ளையார் சுழியும் வழக்கம்போல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் போடப்பட்டது. பொருளாதாரப் புலியான மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தபோது அதாவது, 1994-ம் ஆண்டிலேயே ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தக மையம். அதாவது, டபுள்யூ.டி.ஓ. (WTO).

உலக வர்த்தக மையத்துடன் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம், இப்போதுள்ள ஆளும் கட்சியான பாஜக கையெழுத்திட்டது. அப்போதே இந்தியா மட்டுமல்ல டபுள்யூ.டி.ஓ-வில் கையெழுத்திட்டுள்ள எல்லா நாடுகளிலும் என்னென்ன பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மிகத்தெளிவாகவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

குறிப்பாக எந்த ஒரு நாட்டிலும் இலவசம், விலையில்லா பொருட்கள், மானியம் போன்ற பெயர்களில் சமூகநலத்திட்டங்களை செயல்படுத்தக் கூடாது; அல்லது, அவற்றை படிப்படியாக நிறுத்தி விட வேண்டும் என்பதுதான் உலக வர்த்தக மையத்தின் முக்கிய நிபந்தனை.

இந்த ஒப்பந்தத்தின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், உலக நாடுகள் தாராளமாக இந்தியாவுக்குள் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். இப்படி இறக்குமதி செய்யப்படும் உணவு தானியங்கள் தங்கு தடையின்றி விற்பனை ஆவதற்கு, ரேஷன் மானியம் மிகப்பெரும் தடைக்கல்லாக இருக்கும் என்று உலக வர்த்தக மையம் சுட்டிக்காட்டியது. அதனால், மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அதன் ஆரம்பக்கட்டமாகத்தான், காஸ் சிலிண்டர் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டம். பாஜக அரசு இத்திட்டத்தைக் கொண்டு வந்தபோதே, இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். எதிர்காலத்தில் மானியங்கள் நிறுத்தப்பட்டு விடும் என்றும் எச்சரித்தனர். அதை இப்போது செயல்படுத்த இருக்கிறது பாஜக.

நம்மால் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இல்லாமல்கூட இருந்துவிடலாம். ஆனால், 70 விழுக்காடு விவசாயத்தையே நம்பி இருக்கும் இந்திய நாட்டில் மானியமில்லா உரம், இடு பொருட்கள், மின்சாரமின்றி இருக்க முடியுமா? மானியங்கள் கொடுத்தும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருக்கும் தேசத்தில், ரேஷனில் விநியோகிக்கப்படும் குடிமைப் பொருட்களுக்கான மானியத்திற்கும் ஆப்பு வைத்தால் என்னாவது?

ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், வணிக நிறுவனம் பதிவு செய்தவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், வீடுகளில் கார், ஏசி வைத்திருப்பவர்கள், மூன்று அறைகளுக்கு மேல் கொண்ட வீட்டு உரிமையாளர்கள் ஆகியோருக்கு இனி ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவுப்பொருட்கள் கிடைக்காது. இதுதான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டவை. இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுவிட்டது.

நம்ம ஊர் விவசாயிகளிடம் ஐந்து ஏக்கர் மானாவாரி நிலம் இருக்கும்; சமயத்தில், அவர்கள் சேர்ந்தார் போல பத்தாயிரம் ரூபாயை ரொக்கமாக வைத்திருப்பதுகூட கடினம். வானம் பார்த்த பூமியை வைத்திருக்கும் அவர்களுக்கு ஐந்து ஏக்கர் அளவீட்டைக் காட்டி மானியத்தை ரத்து செய்வது எங்ஙனம் தகும்?

ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பவர்கள் எல்லாருமே வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றனவா? மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம், இதர சலுகைகள் பெறும் எம்.பி.க்களுக்கு அரசு கேண்டீனில் உணவுப்பொருட்களை ஒரு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் வழங்கும் இந்திய அரசு, ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் ரேஷன் மானியத்தில் கை வைக்கலாமா?

எல்லோரையும் வருமான வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதும், ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய அம்சங்களில் ஒன்று. சிறு,குறு வணிகர்கள்கூட வருமான வரித் தாக்கலில் இருந்து தப்பிக்க முடியாது என்ற நிலை இருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் ரேஷன் மானியம் ரத்து செய்வதில் தர்க்க ரீதியில் என்ன நியாயம் இருக்க முடியும்?

காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த திட்டக்குழு, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.29ம், ஊரகப்பகுதிகளில் ரூ.23க்கும் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் எல்லோருமே வறுமைக்கோட்டிற்கு மேலே இருப்பதாக ஓர் அளவீட்டை பரிந்துரை செய்தது. அதன்படி, நகர்ப்புறங்களில் தினசரி ரூ.30க்கு மேல் பொருளீட்டுபவர்களை ‘பெரும் பணக்காரர்கள்’ ஆக சித்தரித்தது.

இதையே அளவீடாக வைத்துக் கொண்டுதான், இனி ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் எனத்தெரிகிறது. அதாவது, யாருக்கும் இனி மானிய விலையில் குடிமைப் பொருட்கள் கிடைக்காது என்பதுதான் மத்திய, மாநில அரசுகளின் திட்டமே.

அரசுடைமை வங்கிகளுக்கு மட்டும் நாளது தேதி வரை ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன்கள் உள்ளன. ஏற்கனவே ஸ்டேட் வங்கி வாராக்கடன் மட்டும் ரூ.7016 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்கிய பெருமுதலாளிகளின் பட்டியலை அரசு ஒருபோதும் வெளியிடாமல் அவர்களை ரட்சிக்கும்; ஏதுமற்ற ஏழைகளை நிந்திக்கும்.

ஏடிஎம்ல்- பணம் பெறும் சேவைக்கு சேவைக்கட்டணம் விதித்து, வாராக் கடன் நிலுவையை சரிசெய்து கொள்ளும். ஆக, மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் கம்பளம் விரிக்கும். ஏழைகளின் நலன் நாடும் அரசாக இருக்காது.

ரேஷன் மானியம் ரத்து காரணமாக, அன்றாடங்காய்ச்சிகள் பட்டினிச்சாவால் மடியும் நிலையும் அபாயமும் உருவாகும்.

– அகராதிக்காரன்
தொடர்புக்கு: selaya80@gmail.com

இணையத்தில் தொடர: www.puthiyaagarathi.com