நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.
“ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவர்களை மோத விடுவது தான் “சம வாய்ப்பு” என விளக்கம் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில், பள்ளிக்கூடத்துக்கு வெளியே நீட் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு செலவு செய்த மேட்டுக்குடி குலக்கொழுந்துகள், அதுவும் போதாமல் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியுள்ளது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சி.எம்.எஸ் நிறுவனம், காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.
இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்க கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டுள்ளது. கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத லஞ்சம் பெற்றுள்ளனர். இக்கணினிகளில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர். நீர் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே அவற்றில் உள்ள ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர். சில மையங்களில் நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வை எழுத அனுமதிப்பதற்கு லஞ்சம் பெற்றுள்ளனர். லஞ்சம் கட்டிய மேட்டுக்குடி குலக் கொழுந்துகள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.
நீட் தேர்வுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கபட்ட போதே, இது இன்னுமொரு வியாபம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டது – இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த லட்சணத்தில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வுகளில் தோல்வியடைந்ததற்கு தமிழகத்தின் கல்வித் தரம் பின் தங்கியுள்ளதே காரணம் என சொர்ணாக்கா தமிழிசையும், ஆர்.எஸ்.எஸ் அடிமை பொன்னாரும் அளந்து விட்டனர். பார்ப்பன மேட்டுக்குடி கும்பலும் அவர்களின் ஊதுகுழலாக செயல்படும் ஊடகங்களும் நீட் தேர்வை எதிர்ப்பவர்களைத் தகுதிக்கும் திறமைக்கு எதிரானவர்களாக சித்தரித்தனர்.
கல்வி நிலையங்களை பணக்காரக் குலக்கொழுந்துகளுக்கான அக்கிரகாரங்களாக மாற்றி புதிய மனுநீதியை நிலைநாட்டும் முயற்சியாகத் தான் நீட் தேர்வு முறையை இந்துத்துவ கும்பல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும், மோசடிகளையும் முறைகேடுகளையும் செய்யும் “திறமை” கொண்டவர்களே வெற்றி பெரும் விதமாக விதிகளை வகுத்துள்ளனர்.