Tuesday, January 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அமைச்சர் ராஜேந்திரன்: தரை தட்டும் கப்பலா? கரையேறும் மாலுமியா?

ராஜேந்திரன், அமைச்சர்

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் பிரித்தாளும் அரசியல் தந்திரம், வரும் சட்டமன்ற தேர்தலில் அவரையே பூமராங் ஆக திருப்பித் தாக்கும் என்கிறார்கள் திமுகவின் மூத்த உடன்பிறப்புகள்.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் ராஜேந்திரன் (66). குரு நானக் கல்லூரியில் இளங்கலை மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது நடந்த மாணவர் அமைப்புத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, கலைஞரின் கவனத்தை ஈர்த்தார். காரணம், அந்த நேரத்தில் வேறு எந்தக் கல்லூரியிலும் திமுகவின் மாணவர் அமைப்பு வெற்றி பெறவில்லை. மாணவர் அணி அமைப்பாளர், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர், இளைஞரணி மாநில துணை செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்த ராஜேந்திரன், திமுகவின் தனிப்பெரும் அமைப்பான தொமுசவின் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

மறைந்த வீரபாண்டியார், ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்தபோது, அவருக்கு எதிராக மு.க.ஸ்டாலினால் வளர்த்து விடப்பட்ட ராஜேந்திரன், 2001 முதல் சட்டமன்ற தேர்தல் களத்திலும் இறக்கிவிடப்பட்டார்.

அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஓமலுர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், 2006ல் பனைமரத்துப்பட்டி தொகுதியில் வென்றதன் மூலம், ராஜேந்திரன் பெயருடன் பனைமரத்துப்பட்டி பெயரும் முன்னொட்டாக சேர்ந்து கொண்டது.

பின்னர் 2011ல் சேலம் மேற்கில் களம் கண்ட அவர், தோல்வி அடைந்தார். அதன்பிறகு 2016, 2021 தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற்றார்.

கடந்த 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விடும் என பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கட்சி மேலிடம் அவரை கண்டுகொள்ளவில்லை. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் அவர் மட்டுமே வெற்றி பெற்றார் என்பதும், தேர்தலில் அவர் பரிந்துரைத்த நபர்களைக்கூட அவரால் வெற்றி பெற வைக்க முடியவில்லை என்பதாலும்தான் அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற பேச்சும் கிளம்பியது.

இந்த நிலையில்தான், 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, கடந்த 2024ம் ஆண்டு செப். 29ம் தேதி, ராஜேந்திரனை சுற்றுலாத்துறை அமைச்சராக்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அப்போது, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர்களையும் ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டும் என்றும் முதல்வரிடம் இருந்து ராஜேந்திரனுக்கு முக்கிய அறிவுரையும் வழங்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு கதை என்கிறார்கள் கட்சி சீனியர்கள். அமைச்சர் ராஜேந்திரன், உப்புச் சப்பில்லாத சமாச்சாரத்திற்கு எல்லாம் நிர்வாகிகளை கட்டம் கட்டுகிறார் என்றும், பிற மாவட்டச் செயலாளர்களுடன் அனுசரித்துப் போவதில்லை என்றும் குமுறுகின்றனர்.

இது தொடர்பாக, சேலம் மத்திய மாவட்ட திமுக மூத்த உடன்பிறப்புகள் நம்மிடம் பேசினர்.

”சுற்றுலாத்துறை அமைச்சராக ராஜேந்திரன் பொறுப்பேற்று ஓராண்டிற்கு மேலாகிறது. இதுவரை எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரால் சொந்த மாவட்டத்திற்கேகூட பெரிய நன்மைகள் இல்லை.

அதேநேரம், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர் காமராஜ், கவுன்சிலர்கள் தமிழரசன், சாந்தமூர்த்தி மற்றும் ஏ.டி.சி., மணி என்கிற மணி, பகுதி செயலாளர் பிரகாஷ், மாநகர துணை செயலாளர் ‘பழக்கடை’ கணேசன், ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஓ.எம்.ரமேஷ், மாநகர செயலாளர் ரகுபதி ஆகிய எட்டு பேர் வலுவாக ‘செட்டில்’ ஆகிவிட்டனர்.

காமராஜ், ஓ.எம்.ரமேஷ், தமிழரசன், சாந்தமூர்த்தி

சேலம் மாநகராட்சி தொடர்பான பல ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தப் பணிகள் காண்ட்ராக்டர் காமராஜின் கம்பெனிக்கு நேரடியாகவும், சில ஒப்பந்தப் பணிகள் அவர் கைகாட்டும் கம்பெனிக்கும் கைமாறுகிறது. மாநகராட்சியைப் பொறுத்தவரை காமராஜ்தான் அதிகார மையமாக வலம் வருகிறார்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மொத்த அரசு கேபிள் டிவி ஒப்பந்தப் பணிகளும் ஓ.எம்.ரமேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. ஒரு காலத்தில், ஓமலூர் முன்னாள் எம்எல்ஏ தமிழரசுவிடம் எடுபிடியாக இருந்து வந்த ஓ.எம்.ரமேஷ், இன்றைக்கு அமைச்சருக்கே தேர்தல் செலவுக்கு பைனான்ஸ் செய்யும் அளவுக்கு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார். ஓமலூரில் தனக்குதான் கட்சித் தலைமை சீட் கொடுக்கும் என்றும் சொல்லி வருகிறார் ஓ.எம்.ரமேஷ். கலெக்டர் முதல் விஏஓ வரை அனைத்துத் துறை அதிகாரிகள் மட்டத்திலான ‘லாபி’யை காண்ட்ராக்டர் காமராஜூம், ஓ.எம்.ரமேஷூம்தான் ‘டீல்’ செய்கின்றனர். இவர்கள் இருவரும்தான் அமைச்சருக்கு இரண்டு கண்கள்.

கவுன்சிலர்கள் தமிழரசன், சாந்தமூர்த்தி, பகுதி செயலாளர் பிரகாஷ் ஆகியோர் மாநகராட்சி சைக்கிள் ஸ்டேண்டு, சாலையோரக் கடைகள், தொங்கும் பூங்கா, ஆனந்தா மார்க்கெட் டெண்டர் ஆகியவற்றை கவனித்துக் கொள்கின்றனர். தமிழரசன் மட்டும் கூடுதலாக குவாரி உரிமையாளர்களையும் ‘டீல்’ செய்து கொள்கிறார்.

மாநகராட்சி தொங்கும் பூங்கா, பன்னடுக்கு கார் நிறுத்துமிடம் ஆகியவற்றை அஸ்தம்பட்டி ராஜேந்திரன் என்பவருடன் சேர்ந்துதான் சாந்தமூர்த்தி டெண்டர் எடுத்துள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு அஸ்தம்பட்டி ராஜேந்திரன் திடீரென்று இறந்து விட்டார். அவருடைய குடும்பத்திற்கு அமைச்சர் மூலம் கட்டப்பஞ்சாயத்து பேசிய சாந்தமூர்த்தி, பெயரளவுக்கு ஒரு தொகையைக் கொடுத்து கணக்கை முடித்துவிட்டார். இதனால் அஸ்தம்பட்டி ராஜேந்திரன் குடும்பத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இப்பிரச்னை பெரிய அளவில் வெடிக்கும்.

சேலம் மாநகராட்சியில் பணியாளர்கள் நியமனம், வ.உ.சி. மார்க்கெட் டெண்டர் விவகாரம், அதிகாரிகளிடம் வசூல் ஆகிய பணிகளை ‘பழக்கடை’ கணேசன் கவனித்துக் கொள்கிறார். சேலம் மாநகராட்சியில், கிரேடு&2 செயல்திறன் உதவியாளர் 6 பேரை முறைகேடாக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் பழக்கடை கணேசன், அமைச்சர் பெயரை மொத்தமாக நாஸ்தி செய்துவிட்டார். சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 6 பேரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

பிரகாஷ், ‘பழக்கடை’ கணேசன், ‘ஏ.டி.சி.’ மணி, ரகுபதி

அரசுப் போக்குவரத்துத் துறையில் டிரைவர், கண்டக்டர் பணி நியமனம், இடமாறுதல் முதல் சென்னையில் அமைச்சருக்குத் தேவையான சில தனிப்பட்ட சேவைகள் வரை ஏ.டி.சி., மணிதான் செய்து வருகிறார். இதற்கு பிரதி உபகாரமாக சேலம் புதிய பஸ் நிலையத்தில் சில கடைகள் அவருக்கு ஒதுக்கிக் கொடுத்து, நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அமைச்சர்.

ஒரு காலத்தில் சில புகார்களின்பேரில் கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரகுபதிதான் இப்போது சேலம் மாநகர செயலாளராக அமைச்சரின் நெருக்கமான வட்டத்தில் இருக்கிறார். அவர், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் ரீதியான கட்டப்பஞ்சாயத்து, டாஸ்மாக் பார் வசூல் விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார்,” என அமைச்சர் ராஜேந்திரனின் 8 தளபதிகள் குறித்தும் புட்டு புட்டு வைத்தனர் கழகத்தின் சீனியர்கள்.

இன்னும் சில மூத்த உடன்பிறப்புகள் கூறுகையில், ”அமைச்சர் ராஜேந்திரன் தனக்குப் பிடிக்காத நபர்களிடம், தனது ஆதரவாளர்களும் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்ளக்கூடாது என தடை விதிக்கிறார்.

ஒரு காலத்தில் அமைச்சர் கிழித்த கோட்டை தாண்டாத தீவிர விசுவாசியாக இருந்த மேயர் ராமச்சந்திரன், ஒருமுறை சூரமங்கலம் மண்டலக்குழுத் தலைவர் கலையமுதனிடம் சிரித்துப் பேசினார் என்பதற்காக அவரை கட்டம் கட்டிவிட்டார். பொது மேடையில் அவைத்தலைவர் ஜி.கே.சுபாஷ், மேயரை தரம் தாழ்ந்த வகையில் பேசியதை அமைச்சரும் ரசித்துப் பார்த்த சம்பவத்தில்தான் மேயர் மனதளவில் நொந்து போய்விட்டார். மாநகராட்சி ஒப்பந்த விவகாரங்களில் கரம், சிரம், புறம் நீட்டாதவர் என்பதால் மேயர் மீது கட்சித் தலைமைக்கும் கரிசனம் இருக்கிறது என்பதும்கூட மாவட்டத்தின் எரிச்சலுக்கு இன்னொரு காரணம்.

மறைந்த வீரபாண்டியார் காலத்தில் இருந்தே கழகத்தின் முரட்டு பக்தராக வலம் வந்தவரும், அமைச்சர் ராஜேந்திரனின் நம்பிக்கை வட்டத்தில் இருந்தவருமான கவுன்சிலர் குமரவேல், மகளின் திருமணத்திற்கு கவுன்சிலர் குணசேகரனை அழைத்தார் என்பதற்காக அவரை அடியோடு ஓரங்கட்டிவிட்டார்.

மாநகர செயலாளராக இருந்த கவுன்சிலர் ஜெயக்குமார், சூரமங்கலம் மண்டலத்தில் சாதி மற்றும் கட்சி ரீதியாக வலுவாக இருக்கும் கவுன்சிலர் ‘சர்க்கரை’ சரவணன், கன்னங்குறிச்சி பேரூராட்சியில் அமைச்சரின் படைத் தளபதியாக இருந்த குபேந்திரன், மாணவர் அணி தமிழரசன், முன்னாள் அவைத் தலைவர் கலையமுதன், கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன், வழக்கறிஞர் அணி மயில்வேல்;

ஓமலூரில் தனிப்பெரும் செல்வாக்குடன் இருக்கும் முன்னாள் எம்எல்ஏ தமிழரசு, இளந்தலைவரின் நேரடி பார்வையில் இருக்கும் இளைஞரணி அருண் பிரசன்னா, போட்டியாக உருவெடுப்பார் என்பதால் முன்னாள் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன், தனி ஆவர்த்தனம் செய்வார்கள் என்பதால் கவுன்சிலர்கள் குணசேகரன், உமாராணி, தெய்வலிங்கம், அசோகன், திருஞானம் வரை அமைச்சரால் ‘ரெட் கார்டு’ போடப்பட்டவர்களின் பட்டியல் சீனப் பெருஞ்சுவரை விட நீளமானது,” என்கிறார்கள்.

அமைச்சருக்கு நெருக்கமான நிர்வாகிகள் இருவரிடம் பேசினோம்.

”சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி எம்.பி., கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம் எம்.பி., ஆகியோரை ஒருங்கிணைத்துச் செல்வதில்லை. கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் அரசுத் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கச் செல்லும்போது, அங்குள்ள நிர்வாகிகளுக்கு அமைச்சர் தரப்பில் முறையாக தகவல் கொடுப்பதில்லை.

ராஜேந்திரனின் செயல்பாடுகள் குறித்து மண்டல தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் புகார் கூறியும் எந்த ரெஸ்பான்ஸூம் இல்லை.

அமைச்சரால் கட்டம் கட்டப்பட்ட நபர்களை, அவரே திரும்பவும் அழைத்துப் பேச வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் அவர் எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது சுலபமல்ல. 2021 தேர்தலில், ராஜேந்திரன் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவால்தான் 7588 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடிந்தது. த.வெ.க. வருகையால் இந்தமுறை சிறுபான்மை வாக்குகள் சிதறும்பட்சத்தில் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்” என்கிறார்கள்.

அமைச்சரின் தீவிர ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, ”அமைச்சராக ராஜேந்திரன் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் பெரிதாக சாதித்து விடவும் முடியாது. அதேநேரம், தனக்கு எதிரான மனநிலையில் இருக்கும் சிலரை அவர் கட்டம் கட்டுவதில் உடன்பாடு இல்லை,” என்று சுரத்தே இல்லாமல் சொன்னார்.

அமைச்சர் ராஜேந்திரன் வாக்காளர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு பொருட்கள்

இவை ஒருபுறம் இருக்க, பொங்கல் விழாவையொட்டி ஜன. 6ம் தேதி, சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5 கோடி ரூபாயில் ஒரு எவர்சில்வர் பாத்திரம், பேன்ட்&சட்டை துணி, ஒரு சேலை ஆகியவற்றை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். தன் மீது உருவாகியுள்ள அதிருப்தியைச் சரிக்கட்டவே பரிசுப் பொருள்களை வழங்கியதாகச் சொல்கிறார்கள்.

சேலம் வடக்கு தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு, வரும் தேர்தலில் வெற்றி என்பது ‘கேக்வாக்’ போல அத்தனை சுலபமாக இருக்காது என அடித்துச் சொல்கிறார்கள் கழகத்தின் மூத்த உ.பி.க்கள்.

  • – பேனாக்காரன்

Leave a Reply