Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் பெரியார் பல்கலை புதிய துணைவேந்தராக ஜெகன்நாதன் நியமனம்! தொடரும் ‘ஜி’ சென்டிமென்ட்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக கொங்கு மண்டலத்தில் இருந்தும், கவுண்டர் சமூகத்தினரையே துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது யதார்த்தமா? அல்லது உள்நோக்கமா? என்ற விவாதமும் பல்கலை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் பெரியார் பல்கலை
துணைவேந்தராக இருந்து வந்த
பேராசிரியர் குழந்தைவேலுவின்
பதவிக்காலம் கடந்த ஜன. 8ம்
தேதியுடன் முடிவடைந்தது.
எனினும், புதிய துணைவேந்தர்
நியமிக்கப்படும்வரை அவருக்கு
பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

 

பல்கலை விவகாரங்களில்
வேந்தர் என்ற முறையில்
ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்
இருப்பதை மறுக்க முடியாது.
என்றாலும், பணி நிறைவு பெற்று,
வழியனுப்பு விழா நடத்தப்பட்ட
நிலையில் குழந்தைவேலுவுக்கு
பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதும்
கூட அப்போது லேசான
சலசலப்பை ஏற்படுத்தியது.

 

இது ஒருபுறம் இருக்க,
புதிய துணைவேந்தரை தேர்வு
செய்வதற்கான தேடுதல் குழு
அமைக்கப்பட்டது. இப்பதவிக்கு
150க்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் இருந்து 10 பேரை
தேர்வு செய்து, தேடுதல் குழு
ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
அதிலிருந்து சென்னை பல்கலை
இயற்பியல் துறை பேராசிரியர்
வேல்முருகன், அழகப்பா பல்கலை
பேராசிரியர் மாணிக்கவாசகம்,
கோவை தமிழ்நாடு வேளாண்
பல்கலை முன்னாள் டீன் ஜெகன்நாதன்
ஆகிய மூன்று பேர் கொண்ட
இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.

 

அவர்களில் இருந்து
கல்வித்தகுதி, நிர்வாகத்திறனில்
முன்னனுபவம், ஆய்வுக்கட்டுரைகள்
வெளியீடு, முனைவர்களை
உருவாக்கியது உள்ளிட்ட
பல்வேறு அம்சங்களின்
அடிப்படையில் ஒருவரை
ஆளுநர் தெரிவு செய்ய
வேண்டும். அதன்படி,
பெரியார் பல்கலையின்
புதிய துணைவேந்தராக
ஜெகன்நாதனை நியமித்து
ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித் புதன்கிழமை
(ஜூன் 30) உத்தரவிட்டுள்ளார்.

புதிய துணைவேந்தர்
ஜெகன்நாதன், மூன்று
ஆண்டுகள் இந்தப்
பதவியில் நீடிப்பார்.

 

கோவையில் உள்ள
தமிழ்நாடு வேளாண்
பல்கலையில் டீன் பதவியிலும்
இருந்துள்ளார். 39 ஆண்டுகள்
கற்பித்தல் அனுபவம் உள்ள
இவர், 55 ஆராய்ச்சிக்
கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

 

சர்வதேச ஆய்வரங்குகளில் மட்டும் 14 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுள்ளார். பணிக்காலத்தில் 5 முறை சர்வதேச கல்வி ஆய்வரங்குகளை நடத்தியுள்ளார்.

 

யுஜிசி மற்றும் பல்வேறு நிதி நல்கை முகமைகள் மூலம் 7.64 கோடி ரூபாய் மதிப்பில் 8 ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி உள்ளதோடு, 14 பிஹெச்.டி., ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி உள்ளார்.

 

கல்வியாளராக மட்டுமின்றி, சமூக வெளியில் பணியாற்றுவதிலும் ஆர்வமாகச் செயல்படக்கூடிய ஜெகன்நாதன், சுனாமியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி, வேளாண் துறையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளித்துள்ளார்.

 

வேளாண் துறையில் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி, அவருக்கு அசோசியேஷன் ஆப் அக்ரோ மெட்டீயோராலஜி அமைப்பு கடந்த 2017ல் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

 

வியாழக்கிழமை (ஜூலை 1) சென்னையில் நடக்கும் துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இன்று மாலை அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) பெரியார் பல்கலையில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

 

பெரியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தாலும் கூட, திட்டமிட்டோ திட்டமிடாமலோ தொடர்ந்து மூன்றாவது முறையாக வெள்ளாள கவுண்டர் சமூகத்தினருக்கே துணைவேந்தர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுவும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவியை மூன்று முறையும் அலங்கரித்து வந்துள்ளனர்.

 

கடந்த அதிமுக ஆட்சியில்தான் கவுண்டர் சமூகத்தினருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டதாக பேச்சு நிலவிய நிலையில், தற்போது திமுக ஆட்சியிலும் பெரியார் பல்கலைக்கு அதே சமூகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருப்பதும் பல்கலை வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

 

பெரியார் பல்கலையில் தொடரும் ‘ஜி சென்டிமென்ட்’ எனப்படும் கவுண்டர் சமூகத்தினரின் ஆதிக்கப் பின்னணி, பெரும் விவாத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்