Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க திட்டம்?

சேலம் மக்களவை தொகுதியில்
டி.டி.வி.தினகரனின் அமமுக சார்பில்
முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம்
போட்டியிடுகிறார். முதல்வர்
எடப்பாடி பழனிசாமியைப் பொருத்தவரை,
இந்த தொகுதியை சிந்தாமல் சிதறாமல்
கைப்பற்றி விட வேண்டும் என்று
தனது பரிவாரங்களை களத்தில்
இறக்கி விட்டிருக்கிறார். இந்த தொகுதியில்
தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு
இருக்கும் கணிசமான வாக்குகள் மூலம்,
அதிமுக வேட்பாளரை எளிதில்
வெற்றி பெற வைத்துவிடலாம்
என்றும் ஆளும்தரப்பு கணக்குப் போடுகிறது.

ஆனால், அமமுக சார்பில் களம் இறங்கியுள்ள முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம், பிரதான எதிர்க்கட்சியான திமுகவைக் காட்டிலும் கடும் சவாலாக விளங்குவார் என எடப்பாடி தரப்பினரே சொல்கின்றனர். ஏனெனில் எஸ்.கே.செல்வம், சேலம் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, ஓமலூர், வீரபாண்டி, எடப்பாடி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். ஏற்கனவே அதிமுகவில் மாவட்ட செயலாளராகவும் இரு ந்துள்ளார். தேர்தல் களப்பணிகளில் பழுத்த அனுபவம் மிக்கவர்.

 

ஆறு சட்டமன்ற தொகுதிகளில், அவருடைய கோட்டையான வீரபாண்டி தொகுதியில் ஆளும்தரப்புக்கு நிச்சயமாக கடும் சவாலாக விளங்குவார் என்கிறார்கள் தேர்தல் களத்தை நன்கு அறிந்தவர்கள். ஏற்கனவே சேலம் தொகுதிக்கு உள்பட்ட 1800 வாக்குச்சாவடிகளுக்கும் தலா 33 பேர் கொண்ட குழுவை அமைத்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.

 

அமமுக என்ற பெயரில் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அக்கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி என்பதால், அமமுக வேட்பாளர்கள் அனைவருமே சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவர். அக்கட்சிக்கென பொதுவான சின்னம் ஒதுக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இன்னும் 20 நாள்களில் அனைத்து நகரம், கிராமம்தோறும் சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சற்று சவாலாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

 

இது ஒருபுறமிருக்க, வருகின்ற மக்களவைத் தேர்தல்தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வாழ்வா? சாவா? தேர்தல் என்பதால், வெற்றி பெற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற தகவல்களும் உலா வருகின்றன. குறிப்பாக, அமமுகவை தேர்தல் போட்டிக்களத்தில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான் ஆளும்தரப்பின் அதிரடி வியூகமாக இருக்கிறது என்கிறார்கள்.

சுயேச்சை வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்யும்போது பத்து பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தெந்த தொகுதியில், எந்த பாகத்தில் வாக்கு இருக்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களையும் மனுவில் குறிப்பிடுவது அவசியம். இப்படி சில டெக்னிக்கல் சங்கதிகளும் வேட்புமனுவில் அடங்கியுள்ளன. இப்படி ஏதோ ஒன்றை சரியில்லை எனக்கூறி, அமமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு, பாஜக மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

மக்களவை தொகுதிகளைக் காட்டிலும்
இடைத்தேர்தல் நடக்க உள்ள 18 சட்டமன்ற
தொகுதிகளில், அமமுக வேட்பாளர்கள்
களத்தில் இல்லாதிருந்தால் நிச்சயமாக
வெற்றி பெற்று விடலாம் என
எடப்பாடி தரப்பு நம்புவதால், அத்தொகுதிகளில்
அமமுகவினரின் வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவே
தகவல்கள் கசிகின்றன.

 

ஒருவேளை, இதுபோன்ற தந்திரங்களை
எடப்பாடி தரப்பு கையாளக்கூடும் என்பதை
அறிந்ததால்தான், சேலம் தொகுதி
அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம்
முன்னெச்சரிக்கையாக தனது மனைவி ராதாவை,
சுயேச்சையாக வேட்புமனு தாக்கல்
செய்ய வைத்துள்ளார். வேட்புமனு தாக்கல்
செய்ய கடைசி நாளான செவ்வாய்க்கிழமை
(மார்ச் 26, 2019) அவருடைய மனைவி
வேட்புமனு தாக்கல் செய்த பிறகே,
எஸ்.கே. செல்வம் மனுதாக்கல் செய்தார்.

 

மனுதாக்கல் செய்த பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த எஸ்.கே.செல்வம், மிகுந்த தன்னம்பிக்கையுடன் பேசினார். ‘திமுக என்பதெல்லாம் முடிந்து போன கதை’ என்றவர், ‘எடப்பாடி தரப்பில் நிறுத்தப்பட்டு உள்ள அனைத்து வேட்பாளர்களையும் மக்கள் தோற்கடிப்பார்கள்’ என்றும், ‘அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் தேர்தலில் வெற்றி பெறுவேன்’ என்றும் குறிப்பிட்டார்.

 

– பேனாக்காரன்.