Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்திராவின் காலில் விழுந்தாரா கருணாநிதி? பரவும் காணொலியின் பின்னணி என்ன?

தேர்தல் காலம் என்றாலே ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் பரஸ்பரம் புகார் புஸ்தகம் வாசிப்பது என்பது தேர்தல் ஜனநாயகத்தில் சகஜம்தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, இப்போது சமூக ஊடகங்களில் ஒரு காணொலி காட்சி திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

 

‘அம்மையார் இந்திரா காலில்
விழும் கருணாநிதி. என்ன உங்க சுயமரியாதை?’
என்று தலைப்பிட்டு ஒரு காணொலி
பரவி வருகிறது. அந்தக் காணொலியில்,
வயதான ஒரு பெண்மணிக்கு மறைந்த
திமுக தலைவர் கருணாநிதி மாலை அணிவிக்கிறார்.
பிறகு அந்தப் பெண்மணியின்
காலைத் தொட்டு வணங்குகிறார்.
அவர் அருகில் மறைந்த பேராசிரியர் அன்பழகன்
மற்றும் திமுக முன்னணியினர் இருக்கின்றனர்.

காணொலி,
மொத்தம் 7 வினாடிகள் ஓடுகிறது.
அந்தப் பதிவில் இருக்கும் பெண்மணி
யாரென்றே தெளிவாகத் தெரியாதபோது,
அவர் இந்திராகாந்திதான் என்ற
முன்முடிவுடன் காணொலி பகிரப்பட்டு
வருவது அபத்தத்தின் உச்சம் மட்டுமல்ல;
திமுக மற்றும் கருணாநிதிக்கு
எதிரான வன்மமும் கூட.

 

இந்திரா காந்தி, கருணாநிதியை
விட உயரமானவர். ஆனால் காணொலியில்
காணும் பெண்மணியோ கருணாநிதியை விட
உயரம் குறைவாக இருக்கிறார்.
இப்படி தர்க்க ரீதியான
முரணும் இருக்கிறது.

 

சென்னையில்,
1987ம் ஆண்டு, செப்.16ம் தேதி,
அண்ணா அறிவாலயம் திறப்பு
விழா நடந்தது. இதில்,
அண்ணாவின் மனைவி ராணி அம்மையார்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சோனியா காந்தியும் கலந்து கொண்டார்.

 

ராணி அம்மையாரை கவுரவிக்கும் விதமாக,
அவருக்கு மாலை அணிவித்த கருணாநிதி,
காலில் விழுந்து வணங்குகிறார்.
ராணி அம்மையார், கருணாநிதியை விட
வயதிலும் மூத்தவர் என்கிறார்கள்
திமுக முன்னணியினர்.

உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க,
பாஜக சங்கிகளும், அதிமுகவினரும்
கையில் கிடைத்த ஏதோ ஒரு காணொலியை
ஆராயாமல் சமூக ஊடகங்களில்
பரப்பி வருகின்றனர்.

 

ஏற்கனவே கடந்த 2020ம் ஆண்டு,
அதிமுக செய்தி தொடர்பாளர்
கோவை சத்யன்,
இந்திராவின் காலில்
கருணாநிதி விழுந்தார் என்று கூறி பொய்யான
ஒரு புகைப்படத்தை காண்பித்தார்.
அவருக்கும் மேற்கண்ட விளக்கத்தை
திமுகவினர் அளித்தனர். மேலும்,
கோவை சத்யன் மீது அவதூறு
வழக்கும் தொடரப்பட்டது.

 

இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி
இடைத்தேர்தல் நடந்து வருவதாலும்,
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும்
ஓராண்டே உள்ளதாலும், திமுகவுக்கு எதிராக
வழக்கம்போல் அடிப்படையற்ற காணொலிகள்,
போட்டோஷாப் செய்யப்பட்ட பத்திரிகை செய்தி
நறுக்குகளை எதிர்க்கட்சிகள்
வேகமாக பரப்பத் தொடங்கி விட்டனர்.

 

என்னவென்றே தெரியாமல்
அதிமுக தரப்பிலும், அவர்களை அடியொற்றி
சங்கிகளும், பார்ப்பன கும்பலும் கருணாநிதிக்கு
எதிராக சர்க்காரியா கமிஷன்,
திருட்டு ரயிலேறி வந்தவர் உள்ளிட்ட
அவதூறுகளை பரப்பி வருவதுபோல்தான்
இந்திரா காலில் விழுந்தார் என்ற காணொலியும்
முற்றிலும் அடிப்படையற்ற பதிவாகும்.

 

அதற்காக நாம் கருணாநிதி
தலைமையிலான திமுக அரசும்,
மு.க.ஸ்டாலினின் திமுக அரசும் ஊழல்
கறை படியாத அரசுகள் என்று
சொல்லி விட முடியாது. அது வேறு விவகாரம்.

 

இது ஒருபுறம் இருக்க, அண்மையில், பெங்களூருவில் சொகுசுப் பேருந்தும், தமிழ்நாட்டில் ஓடும் சொகுசுப் பேருந்தையும் ஒப்பிட்டு ஒரு படத்தை சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பழுதடைந்த, பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்ட பேருந்தை எடுத்து பதிவிட்டிருந்தது அலுவலர்கள் ஆய்வில் தெரிய வந்தது.

திமுகவுக்கு எதிராக என்றில்லை;
எந்த ஒரு அரசியல் கட்சிகள் அல்லது பிற
அமைப்புகளுக்கு எதிராக வரும் தகவல்களை,
காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு
முன்பாக கூகுள் அல்லது தங்களுக்குத்
தெரிந்த சோர்ஸ்களிடம் விசாரித்து
மெய்த்தன்மையை தெரிந்து கொண்ட
பின்னர் பகிருங்கள்.

 

ஒருவேளை, தங்களுக்குக் கிடைத்த தகவல் உண்மையாகவே இருந்தாலும்கூட அதை தங்களுக்கு கிடைத்த வேகத்தில் சமூக ஊடகங்களில் பகிர வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அந்தத் தகவலை பகிராவிட்டால் உங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா என்ன? ஐயத்திற்கு இடமான பதிவுகளை பகிராமல் இருப்பது இன்னும் உத்தமம்.

 

மெய்ப்பொருள் காண்பது அறிவு.

 

– பேனாக்காரன்