Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

கருப்பு பணம் – ஊழல் ஒழிப்பு கோஷங்களை, தேர்தல் சுலோகமாக பயன்படுத்தி, அரியணையேறிய மோடி உள்ளிட்ட காவி கும்பலின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி, அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் இனி செல்லாது என்று ஓர் அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இந்திய தேசத்தின் மீது இந்திய அரசாங்கமே நடத்தியிராத மிகப்பெரும் தாக்குதல் அது. மோடியின் பாணியில் சொல்வதென்றால் சொந்த நாட்டினர் மீதான ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’.

இந்த அறிவிப்பினால் சாமானியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்களையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்து வைத்திருக்கும் 1000, 500 பணத்தாள்களை உடனடியாக மாற்றியாக வேண்டுமே. அவர்களின் கவலை அவர்களுக்கு. அடுத்த நாளே வங்கிகளில் தங்களிடம் உள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை டெபாசிட் செய்ய மக்கள் படையெடுத்தனர். பல இடங்களில் காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். ஏடிஎம்களில் நிரப்பப் பட்டிருந்த சொற்ப 100 ரூபாய் தாள்களை எடுக்க, எந்த ஒரு ஏடிஎம் மையங்கள் முன்பும் சீனப்பெருஞ்சுவர் கணக்காய் வரிசை.

வங்கிகள், ஏடிஎம் மையங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நாட்டுக்காக ராணுவ வீரர்கள் கடும் பனியில் நமக்காக உயிர்த்தியாகம் செய்ததுபோல் அவர்களின் இறப்பையும் தேசத்திற்கான தியாகமாக கருதுங்கள் என்றனர் மோடியும், சகாக்களும். மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணத்தை ரூ.500, 1000 தாள்களைக் கொடுத்தால் பெற்றுக்கொள்ள மறுத்தனர். குறிப்பிட்ட நாள் வரை உயர்மதிப்பு தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தும், அரசின் கோமாளித்தனங்களை நம்ப மருத்துவமனைகள் தயாராக இல்லை.

கர்நாடகாவில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் (உடன் பிறந்த சகோதரர் என கருதுகிறேன்) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உடலை எடுத்து வர வேண்டுமானால் சிகிச்சை கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். ஆனால் அந்த மருத்துவமனையோ யாராக இருந்தாலும், உயர் மதிப்பு பணத்தாள்களை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கறாராகச் சொல்லிவிட்டது. அந்த தகவல் கிடைத்தபோது, பாஜக அரசின் முடிவை எண்ணி தலையில் அடித்துக்கொண்டார் சதானந்தகவுடா. அவர்களுக்கு வந்தால் ரத்தம்?. சாமானியர்களின் ரத்தம், தக்காளி சட்னிதானே.

இங்கு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட சில நாள்களில் வெனிசூலா நாட்டிலும் அதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கும் மோடி மஸ்தான்கள் இருப்பார்கள் போலிருக்கிறது. மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதை அடுத்து, சில நாள்களில் தன் முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது. இவ்விஷயத்தில் இந்தியர்கள் ரொம்பவே எருமைத் தோல்காரர்கள்தான்.

அதேநேரம், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஸ்டீவ் ஃபோர்ப்ஸ், ”பணமதிப்பிழப்பு செய்ததன் மூலம் இந்திய அரசு சொந்த மக்களிடம் மிகப்பெரிய திருட்டை செய்துள்ளது. இது, இந்திரா காந்தியின் கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு சமம்,” என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

நாம் பொருளாதார புலிகள் அல்ல. ஆனால் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வேணுகோபால் ரெட்டி, பணமதிப்பிழப்பால் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது என்று அப்போது கூறியிருந்தார்.

இரு நாள்களுக்கு முன்பு வெளியான ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை அதைத்தானே பிரதிபலிக்கிறது. நாட்டில் ரூ.1544000 கோடி மதிப்பிலான 500, 100 ரூபாய் தாள்களில், ரூ.1528000 கோடி வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. அதாவது, வங்கிகளுக்கு திரும்பி வராத ரூ.16000 கோடி மட்டுமே கருப்பு பணம் என்று கருதிக்கொள்ள வேண்டியது. அதேநேரம், ரூ.2000, ரூ.500 ஆகிய புதிய ரூபாய் தாள்களை அச்சிட ரூ.8000 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும், புதிய ரூபாய் தாள்களுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் வசதிகளை செய்த வகையில் ரூ.35000 கோடி செலவானதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின்படி அரசுக்கு வங்கிகளுக்கு ரூ.16000 கோடி வருமானம் என்று வைத்துக்கொண்டால், புதிய பணத்தாள்கள் அச்சடிப்பு, ஏடிஎம் பராமரிப்பு செலவுகளை சேர்த்து ரூ.43 ஆயிரம் கோடி செலவிட்டுளளது. அதாவது, ரூ.23 ஆயிரம் கோடி செலவு செய்து ரூ.16 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டியுள்ளது என்றே நாம் கருத வேண்டும். அதனால்தான், பணமதிப்பிழப்பு யோசனையைக் கூறியவருக்கு நோபல் பரிசுதான் வழங்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார்.

இதில் இன்னொரு நகைப்புக்குரிய செய்தி என்னவென்றால் ரிசர்வ் வங்கி அறிவித்ததைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் இந்தப்பணம் யாருடையது? என்பதே இப்போதைய சர்ச்சைக்குரிய கேள்வி.

மக்களவையில் பேசாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை அப்போதைய எதிர்க்கட்சியான பாஜக கேலி செய்தது. பணமதிப்பிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வரை ஒருமுறைகூட மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது ஏன்? ‘மன் கீ பாத்’-ல் மட்டும் பேசினால் போதுமென்று கருதுகிறாரா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், 91 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். சுமார் 3.50 லட்சம் போலி நிறுவனங்களின் பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. ரொக்கமற்ற அதாவது டிஜிட்டல் வழி பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இதெல்லாமே ஆக்கப்பூர்வமான செய்திகள். ஆனால் இதற்காக பணமதிப்பிழப்பு என்ற மூர்க்கத்தனமான / மூடத்தனமான நடவடிக்கை தேவைதானா?

பணமதிப்பிழப்பு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP) தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த காலாண்டில் 5.7% ஆக சரிந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் 6.1% ஆக இருந்தது. வளர்ச்சி குறித்து அதிகம் பேசும் மோடி, இதைப்பற்றி இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. 1.50 லட்சத்திற்கு மேலான சிறு, குறு வரும் ஞாயிறன்று ‘மன் கீ பாத்’-ல் சொல்லுவாரோ என்னவோ!

 

பணமதிப்பிழப்பையொட்டி டிஜிட்டல் பணப்பறிமாற்றம், கருப்பு பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு என்ற சுலோகங்களை மோடி முன்னிறுத்தினார். இதில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் என்ற நோக்கம் மட்டும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஊழல், கருப்பு பணம் ஒழிப்பு என்பதெல்லாம் முன்பை விட அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோதுதான் கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் இல்ல திருமண விழாவை ரூ.500 கோடிக்கு மேல் செலவு செய்து தடபுடலாக நடத்தினர். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டியிடமும் கோடிக்கணக்கில் புதிய ரூ.2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கெல்லாம் இன்னும் பாஜக அரசிடம் இருந்து பதிலே இல்லை.

வெகுஜன மக்களின் பார்வையில் இருந்து பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றோம்.

கருப்பு பணம் பதுக்கலுக்கு உயர்மதிப்பு பணத்தாள்கள் காரணம் எனில், முன்பிருந்ததை விட ரூ.2000 மதிப்பிலான ரூபாய் தாள்கள் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?

ரொக்கமற்ற பணப்பரிமாற்றம்தான் இலக்கு என்றால், மீண்டும் ரூ.200, ரூ.50 மதிப்பிலான தாள்கள் அச்சிட்டது ஏன்?

புதிய ரூபாய் தாள்களுக்காக கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளதா? (கேரளாவில் மட்டும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக அறிகிறோம்).

புழக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் கூடுதல் மதிப்பில் மதிப்பிழக்கம் செய்யப்பட்ட பணம் வங்கிகளுக்கு திரும்பியுள்ளதே. அது எப்படி?

பணமதிப்பிழக்கத்திற்குப் பிறகு 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதே. அவற்றை மீட்பதற்கான நடடிக்கைகள் என்ன?

பணமதிப்பிழக்கம் செய்யப்படுவதற்கு சில மாதங்கள் முன்பே பாஜக, தோழமைக் கட்சிகளின் முக்கிய புள்ளிகள் வங்கிகளில் பெரிய அளவில் டெபாசிட் செய்ததாக தகவல்கள் வந்தனவே?

பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன்களில் எவ்வளவு மீட்கப்பட்டு உள்ளன?

இதுபோன்ற கேள்விகள் நம்மிடம் அப்படியேதான் இருக்கும். இந்நேரம், மோடி-அமித் ஷாக்கள், மக்கள் மீதான அடுத்த சர்ஜிகல் ஸ்டிரைக் பற்றி யோசித்துக் கொண்டிருக்கக் கூடும்.

– இளையராஜா சுப்ரமணியம்.
தொடர்புக்கு: 9840961947

E-mail: selaya80@gmail.com