Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

கொரோனா வைரஸ் தொற்று
பரவல் வேகமெடுத்துள்ள நிலையில்,
ஒட்டுமொத்த சமூகத்தின் அன்றாட
நடவடிக்கைகளையும் முடக்கிப்
போட்டுள்ளது. இதுவரை கோவிட்-19
தொற்றுக்குத் தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கப்படாத நிலையில்,
சமூக விலக்கல் மட்டுமே
ஆகச்சிறந்த தடுப்பு அரண்
என்கிறது மக்கள் நல்வாழ்த்துறை.
மார்ச் 24ம் தேதி மாலை முதல்
தொடர்ந்து 21 நாள்களுக்கு
144 தடை உத்தரவு நாடெங்கும்
அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,
வெளிநாடு சென்று ஊர்
திரும்பியவர்கள் மூலமாக
கோவிட்-19 தொற்று பரவ
கூடுதல் வாய்ப்பு உள்ளதால்,
அவர்களைப் பற்றிய தகவல்களை
உடனடியாக தெரிவிக்கும்படி
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்
உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் நபர்
சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட
நபர்களே இதுகுறித்த தகவல்களை
தெரிவித்து, மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்திக்
கொள்ள வேண்டும் என்றும்
அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனாலும், மக்களிடம்
பொறுப்பற்ற போக்கும்
தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது.

 

தேனிலவுக்காக வெளிநாடு சென்று திரும்பிய இளம் ஜோடி ஒன்றும், வெளிநாட்டுப் பயணத்தையே மறைத்து இருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியைச் சேர்ந்த புதுமண தம்பதி, கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தேனிலவுக்காக இந்தோனேஷியா நாட்டிற்குச் சென்றிருந்தனர். கடந்த 17ம் தேதி அவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.

 

இந்நிலையில் ஆணையம்பட்டி கிராம மக்கள், தேனிலவுக்குச் சென்று திரும்பிய புதுமண ஜோடி குறித்து கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று புதுமண ஜோடிக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

 

இந்த பரிசோதனையில்,
அவர்களுக்கு கொரோனா
வைரஸ் தொற்றுக்கான
அறிகுறிகள் இல்லை என்பது
தெரிய வந்தது. எனினும்,
அவர்களை அவர்களுடைய
வீட்டின் மூன்றாவது தளத்தில்
இருவரையும் தனித்தனியாக
தனிமைப்படுத்தி வைத்து,
அதிகாரிகள் தீவிரமாக
கண்காணித்து வருகின்றனர்.
அவர்கள் வெளியில் சென்று
விடக்கூடாது என்பதற்காக
காவல்துறையினரும் வீடு அருகே
24 மணி நேரமும் சுழற்சி
முறையில் கண்காணித்து
வருகின்றனர்.

 

மேலும்,
வெளிநாடு சென்று திரும்பிய
பிறகு அந்த ஜோடி, யார் யாரை
எல்லாம் சந்தித்துப் பேசினார்களோ
அவர்களைப் பற்றிய விவரங்களும்
சேகரிக்கப்பட்டு, மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்தும்
நடவடிக்கையில்
சுகாதாரத்துறையினர்
இறங்கியுள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, கெங்கவல்லி அருகே வீரகனூரைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வந்தனர். அவர்கள் இன்னும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமலும், தனிமைப்படுத்தப்படாமலும் தொடர்ந்து வெளியே நடமாடி வருவதால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். பொறுப்பற்ற சிலரின் அலட்சியத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயமும் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் சேலம் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0427-2450022, 0427-2450023, 0427-2450498 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

 

– பேனாக்காரன்