ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரங்களில் பாஜகவின் கொள்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் கடுமையான சாடி வருகிறார். அவருடைய கருத்துகள், கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்தாக காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களிலும், பொதுவெளிகளிலும் ப.சிதம்பரம் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அண்மையில் ஒரு தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, ”பக்கோடா விற்பவர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். அதுவும் ஒரு வேலைதானே?. அதைச் செய்பவர்களை வேலை இல்லை என்று எப்படி கணக்கில் கொள்ள முடியும்?” என்றார்.
கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதெல்லாம் அவருடைய வழக்கமான ‘ஜூம்லா’ (தேர்தல் கால பேச்சு) என்பதாகவே ஆனது.
பெருமளவு வேலைவாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் ஜவுளித்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்ச வேலையிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதை, மத்திய மனிதவளத்துறையே ஒப்புக்கொண்டுள்ளது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க, பக்கோடா விற்பவரும் வேலைவாய்ப்பு பெற்றவர்தான் என்கிற தொனியில் பிரதமர் பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
இது தொடர்பாக பாஜகவுக்கும், ப.சிதம்பரத்திற்கும் ட்விட்டரில் இரு நாள்களாக கடும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது.
“என்னென்ன வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனக் கேட்டால், நம் பொது அறிவைக் கிண்டல் செய்யும் வண்ணம் பதில் வருகிறது. இன்னமும் வரும், தயாராக இருங்கள். தொழில் முனைவோருக்கும் வேலை செய்வோருக்கும் உண்டான வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரதமரின் கூற்றுபடி, பக்கோடா விற்பது ஒரு வேலைதான். அப்படிப் பார்த்தால், பிச்சை எடுப்பதும் ஒரு தொழில்தானே. ஊனத்துடன் பிச்சை எடுப்பவர்களையும் வேறு வழியின்றி கையேந்துபவர்களையும் வேலையுள்ளவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியுமா?. உண்மையான வேலைவாய்ப்பு என்பது உறுதியானது; நிரந்தரமானது; முக்கியமாகப் பாதுகாப்பானது! அப்படி எத்தனை வேலைவாய்ப்புகளை இந்த அரசு உருவாக்கியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பாஜக தரப்பில், ”சுயதொழில்முனைவோரையும், ஏழைகளையும் ப.சிதம்பரம் அவமானப்படுத்திவிட்டார்,” என்று ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது.
இரு தரப்பினரும் தொடர்ந்து ட்விட்டரில் வார்த்தைப்போரில் ஈடுபட்டு வருகின்றனர்.