Sunday, May 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

கோகுல்ராஜ் ஆணவக்கொலை
வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த
அவருடைய தோழி சுவாதிக்கு
கைது ஆணை பிறப்பித்து
நாமக்கல் முதலாவது நீதித்துறை
நடுவர் மன்றம் இன்று
(பிப்ரவரி 20, 2019) அதிரடியாக
உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.

 

நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத சாதி ஆதிக்க கும்பல்தான், அவரை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தன.

 

ஆணவக்கொலை என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிய திருச்செங்கோடு காவல்துறையினர், இந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 30.8.2018ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 23.6.2015ம் தேதியன்று அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் கோகுல்ராஜும், சுவாதியும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் கும்பல், கோகுல்ராஜை மிரட்டி தனியாக அழைத்துச் சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகளை சிபிசிஐடி காவல்துறை முக்கிய சான்றாவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அதாவது சம்பவத்தன்று கோகுல்ராஜை கடைசியாக பார்த்ததோடு அல்லாமல், யுவராஜை நேரில் கண்டவர் என்ற அடிப்படையிலும் சுவாதியை இந்த வழக்கில் அதிமுக்கிய சாட்சியாக சிபிசிஐடி தரப்பு கருதியது.

 

இந்நிலையில் கடந்த 10.9.2018ம் தேதி
சுவாதி சாட்சியம் அளிக்க
அழைக்கப்பட்டார். அப்போது அவர்,
மேற்படி தேதியில் நான் எந்த
கோயிலுக்கும் செல்லவில்லை என்றும்,
கோகுல்ராஜை தன்னுடன் படித்த
மாணவர் என்ற ரீதியில் மட்டுமே
தெரியும் என்றும், காவல்துறையில்
திரையிட்ட வீடியோ காட்சியை
வைத்து தன்னால் யாரையும்
அடையாளம் காட்ட இயலாது
என்றும் நீதிமன்றத்தில்
பிறழ் சாட்சியம் அளித்தார்.

 

இதற்கிடையே, சுவாதிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், பிறழ் சாட்சியம் அளித்த சுவாதியை சிஆர்பிசி சட்டப்பிரிவு 311ன் படி, மறு விசாரணைக்கு அழைக்கக்கோரியும் அவர் மீது இதச பிரிவு 193ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 1.10.2018ம் தேதி, நாமக்கல் மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் (மனு எண்: 71/2018) செய்தனர்.

இந்த மனு கடந்த 11.2.2019ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் தரப்பு வழக்கறிஞரும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அந்த வழக்கு இன்று (புதன்கிழமை, பிப்ரவரி 20, 2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் சுவாதி ஆஜராகவில்லை. இதையடுத்து நீதித்துறை நடுவர் வடிவேல், சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். அவரை வரும் மார்ச் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சுவாதி தரப்பை கலக்கம் அடையச் செய்துள்ளது.

 

சாட்சிகள் விசாரணை ஒத்திவைப்பு:

 

இது ஒருபுறம் இருக்க,
கோகுல்ராஜ் வழக்கில்
அரசுத்தரப்பு சாட்சிகளிடம் இன்று
விசாரணை நடத்தப்படும் என்று
அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,
யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே.
என்கிற கோபாலகிருஷ்ணலட்சுமண ராஜூ
வராததால், சாட்சிகள் விசாரணையை
வரும் 27.2.2019ம் தேதிக்கு
ஒத்திவைத்து மாவட்ட முதன்மை
நீதிபதி இளவழகன்
உத்தரவிட்டுள்ளார்.

 

– பேனாக்காரன்