Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஒரு பிரம்மாஸ்திரம்!; நாளை கிராம சபைக்கூட்டம்… மறந்துடாதீங்க!!

 

எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராடும் விவசாயிகள் நாளை, (ஆகஸ்ட் 15, 2018) நடைபெற உள்ள கிராம சபைக்கூட்டத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் திட்டத்தை முடக்கி வைக்க முடியும் என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்.

 

கிராம மக்களுக்கு இருக்கும் உச்சபட்ச அதிகாரத்தை நிருவுவதற்கான ஒரே இடம் கிராம சபைக்கூட்டம் எனலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, ஓராண்டில் ஜனவரி 26 (குடியரசு தினம்), மே 1 (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நான்கு நாள்களில் கண்டிப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இவை தவிர, தேவைக்கேற்ப சிறப்பு கிராம சபைக்கூட்டமும் நடத்திக்கொள்ள முடியும்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12618 கிராம ஊராட்சிகளிலும் நாளை (ஆகஸ்ட் 15) கிராம சபைக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் பல ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டங்கள் பெயரளவுக்கு நடத்திவிட்டு, மக்களிடம் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. அதுபோன்ற போலியான கூட்டங்கள் நடைபெறாமல் மக்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டிய தருணம் இது.

 

சரி… இக்கூட்டத்தில் எதைப்பற்றி எல்லாம் விவாதிக்கப்படும்? யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? என்பது பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

 

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஏதேனும் ஒரு பொது இடத்தில் கிராம சபைக்கூட்டம் நடத்தப்படும். கடைசியாக நடந்த கிராம சபைக்கூட்டத்திற்கும், இப்போது நடக்கும் கூட்டத்திற்கு முந்தைய நாள் வரையிலான அந்தந்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அதற்கான செலவினங்கள் குறித்த கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கப்படும். அடுத்து என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதும் விவாதிக்கப்படும்.

கிராம சபைக்கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர் அல்லது துணைத்தலைவர் தலைமை வகிப்பார். அவர்கள் இல்லாவிட்டால் வார்டு உறுப்பினர் தலைமை வகிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் இல்லாதபட்சத்தில் கூட்டம் நடைபெறும் நாளன்று மக்களே யாரேனும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடைய தலைமையில் கூட்டத்தை நடத்தலாம்.

 

வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லது கிராம உதவியாளர் ஆகியோரில் ஒருவர் பார்வையாளராக இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார். அவர் வெறும் பார்வையாளர் மட்டுமே. அவரால் எந்த முடிவையும் அறிவிக்கவோ, கருத்து சொல்லவோ உரிமை இல்லை. கடந்த 2016 அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அரசுத்தரப்பில் யாரேனும் ஒரு ஊழியர் முன்னிலையில் இந்தக் கூட்டம் நடத்தப்படும்.

 

கூட்டத்தில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர் என்பதும் இங்கே முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அதாவது, 500 பேர் வரை கொண்ட கிராம ஊராட்சியில் இருந்து குறைந்தபட்சம் 50 பேர் கலந்து கொள்ள வேண்டும். 501 முதல் 3000 வரை பேர் உள்ள ஊராட்சிகளில் 100 பேரும், 10000 பேர் வரை வசிக்கும் கிராமங்களில் இருந்து 200 பேரும், அதற்குமேல் மக்கள் தொகை உள்ள கிராமங்களில் இருந்து 300 பேரும் அதற்குமேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். கூட்டத்தில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.

 

மேலே சொல்லப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளாதபட்சத்தில் கிராம சபைக்கூட்டம் ரத்து செய்யப்படும். ஆனால், பிறிதொரு நாளில் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

 

ஏரிகள், குளங்கள், ஊரணிகள் தூர்வாறுதல் போன்ற நீர்நிலை பராமரிப்பு, 100 நாள் வேலைத்திட்டம், நூலகம் வேண்டியோ, டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தக் கோரியோ கிராம நலன் சார்ந்த எதைப்பற்றி வேண்டுமானாலும், எத்தனை தீர்மானங்கள் வேண்டுமானாலும் சபையில் நிறைவேற்றலாம். அவ்வளவு ஏன்…. எட்டு வழிச்சாலையால் இயற்கை வளம் அழிகிறது என்றால், அத்திட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் கொண்டு வர மக்களுக்கு அதிகாரம் இருக்கிறது. அதற்கான பிரம்மாஸ்திரமாகவும் கிராம சபைக்கூட்டத்தைக் கருதலாம்.

 

ஆனால், ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பக்கத்து ஊருக்கான தீர்மானங்களைக் கொண்டு வர இயலாது. அதேபோல் மாநில அளவிலான கொள்கைத் திட்டங்கள் சார்ந்த விவகாரங்களிலும் மூக்கை நுழைக்க முடியாது.

ஒரு கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் என்பது மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு நிகரானது. உச்சநீதிமன்றம்கூட கிராம சபைக்கூட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என்பதே இக்கூட்டத்தின் மற்றொரு சிறப்பு அம்சம்.

 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒருபோதும் காலாவதி ஆகாது. ஆனால், ஊர் நலன் கருதி மறு விவாதம் நடத்தி மறுதீர்மானம் நிறைவேற்றப்படும்போது முன்னர் கொண்டு வந்த தீர்மானம் நீர்த்துப் போக வாய்ப்பு இருக்கு. மற்றபடி, கிராம சபைக்கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு கலெக்டரே நினைத்தாலும் தடை விதிக்க முடியாது.

 

கிராம சபைக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை நிறைவேற்ற வேண்டும் என்பது சட்டம். ஆனால், நடைமுறையில் பல சட்டங்களும், விதிகளும் நீர்த்துப்போனதுபோல் கிராம சபைக்கூட்ட தீர்மானங்களும் கிடப்பில் போடப்படுகின்றன. அதனால், வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் கலெக்டர் வரை மீண்டும் மீண்டும் அவர்களுக்கு இத்தீர்மானங்கள் குறித்து நினைவூட்டல் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

 

மீண்டும் ஒருமுறை நினைவூட்டலுக்காக….
நாளை கிராம சபைக்கூட்டம்.

 

மேலும் விவரங்களுக்கு: 98409 61947.

 

– பேனாக்காரன்.