Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை அதே பணியிடத்திற்கு அமர்த்தி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சிஇஓ) பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் காக்கா கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.

 

குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் விரைந்து செயலாற்றவும் தவறியதில்லை. சேலம் மாவட்டத்தில் இதுவரை பணியாற்றி வந்த முதன்மைக் கல்வி அலுவலர்களில் கார்மேகம், சேதுராம வர்மா ஆகியோர் நேர்மையான நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்களாக இருந்தனர். அந்த வரிசையில் கணேஷ்மூர்த்திக்கும் இடமளித்து இருந்தனர் ஆசிரியர்கள்.

 

சொல்லப்போனால் அவர்களைக் காட்டிலும், கணேஷ்மூர்த்தி ரொம்பவே முரட்டுத்தனமான நேர்மையாளராக இருந்தார் என்கிறார்கள் ஆசிரியர்கள். ஆய்வுக்குச் செல்லும் பள்ளிகளில் மரியாதை நிமித்தமாகப் போர்த்தப்படும் சால்வைகள், எலுமிச்சம்பழம் உள்ளிட்ட இத்யாதிகளைக்கூட அவர் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. அவர் பொட்டலம் கட்டிக்கொண்டு கையோடு கொண்டு செல்லும் உணவைத்தான் சாப்பிடுவார் என்கிறார்கள்.

சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட கணேஷ்மூர்த்திக்கு ஆசிரியர்கள், வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான் சிஇஓ கணேஷ்மூர்த்தியை, கடந்த ஜூன் 7ம் தேதி மாலையில் திடீரென்று காத்திருப்போர் பட்டியலில் அனுப்பியது பள்ளிக்கல்வித்துறை. நிர்வாக காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மொன்னையாக ஒரு காரணத்தைச் சொல்லி இருந்தாலும், இதன் பின்னணியில் பல்வேறு யூகங்களும் கிளம்பாமல் இல்லை.

 

கணேஷ்மூர்த்தி, தூக்கியடிக்கப்பட்ட
சம்பவத்தின் முழு பின்னணி குறித்தும்,
அவரின் வெளிப்படையான செயல்பாடுகள்
குறித்தும் கடந்த ஜூன் 12, 2019ம் தேதியிட்ட
‘புதிய அகராதி’ இணைய இதழில் விரிவாக
எழுதியிருந்தோம். அப்போது அந்த செய்தி,
ஒரே நாளில் தமிழகம் முழுவதும்
ஆசிரியர்கள் மத்தியில் பெரும்
விவாதத்தை உருவாக்கியது.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு
நெருக்கமாக இருக்கும் ஜெயலலிதா
பேரவை மாநில செயலாளரான
பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்
அளித்த ஒரு கோப்பை,
கருணையேயின்றி கணேஷ்மூர்த்தி
திருப்பி விட்டதுதான்,
அவர் மீதான நடவடிக்கைக்குக் காரணம்
என்றும் கூறப்பட்டது. எதற்கெடுத்தாலும்
மொட்டை பெட்டிஷன்களை அள்ளித்தெளிக்கும்
‘டாடா பாய் பாய்’ சொல்லும் ஆசிரியர்
சங்க நிர்வாகிகள் கணேஷ்மூர்த்தி மீது
அடுத்தடுத்து அளித்த பொய் புகார்கள்,
வேலை செய்யாமல் ஊர் சுற்றும் தலைமை
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால்
அதை பிடிக்காத பலர் அவர் மீது
அளித்த புகார்கள் என பல
காரணங்கள் சொல்லப்பட்டன.

 

வழக்கமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்
காத்திருப்போர் பட்டியலில்
வைக்கப்படுவது உண்டு.
ஆனால் பள்ளிக்கல்வித்துறையில்

முதன்மைக் கல்வி அலுவலர்
ஒருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு
அனுப்பப்படுவது இப்போதுதான்
முதன்முறை. அதனாலும்
அவரைச் சுற்றிலும் பல யூகங்கள்
எழும்பின. இந்நிலையில்
கடந்த 28 நாள்களாக அவர்
வேறு எந்த பொறுப்பிலும் நியமிக்கப்படாத
நிலையில், அவரை மீண்டும்
சேலம் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலராக நியமித்து
ஜூலை 5ம் தேதி மாலையில்
(வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டிருக்கிறது
பள்ளிக்கல்வித்துறை.

 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக
இருந்த ராமேஸ்வரமுருகன் நேற்று
முன்தினம் திடீரென்று இடமாற்றம்
செய்யப்பட்டு, அந்த இடத்தில்
கண்ணப்பன் நியமிக்கப்பட்டார்.
அவரும் நேர்மையான அதிகாரி
என பெயர் பெற்றவர்.
அவர் இத்துறைக்கு பொறுப்பேற்றதும்கூட,
கணேஷ்மூர்த்தி மீண்டும் சேலம்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக
நியமிக்கப்பட முக்கிய காரணமாக
இருக்கலாம் என்றும்
சொல்லப்படுகிறது.

 

இந்த உத்தரவு கிடைத்த ஓரிரு மணி நேரத்தில் கணேஷ்மூர்த்தி, மீண்டும் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 

கணேஷ்மூர்த்தியின் வருகை, நேர்மையற்ற ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

– பேனாக்காரன்