பாலியல் வன்புணர்வு வழக்கில், தேரா சச்சா சவுதா ஆன்மீக அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங், இரண்டு பெண் பக்தர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
கடந்த 25ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. தண்டனை விவரங்கள் 28ம் தேதி (இன்று) கூறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் பலியாயினர். இதையடுத்து பஞ்சாப், ஹரியானாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து வழக்கின் தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குர்மீத் ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள பஞ்ச்குலா சிறைக்கே நேரில் சென்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, பாதுகாப்பு கருதி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, இன்று ஹெலிகாப்டர் மூலம் குர்மீத் ராம் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு சென்றார்.
தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன், சிபிஐ மற்றும் குர்மீத் ராம் தரப்பு வழக்கறிஞர்கள் இறுதி வாதத்தை முன் வைத்தனர். பத்து நிமிடங்கள் இந்த வாதம் நடந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குர்மீத் ராம், பாலியல் புகார் அளித்துள்ள பெண் சீடர்களை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வன்கொடுமை செய்துள்ளார் என்றும், அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினர்.
குர்மீத் ராம் தரப்பு வழக்கறிஞர்கள், அவர் சமூதாயத்திற்கு செய்துள்ள நன்மைகள், அவரின் நன்மதிப்பு, வயது, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்றனர்.
இதன்பிறகு, தண்டனை விவரங்களை நீதிபதி வாசித்தார். குர்மீத் ராம் ரஹீம்சிங்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். இது, அவருடைய ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு முன்னதாக, குர்மீத் ராம் ரஹீம், தன்னை மன்னிட்டு விடுமாறு நீதிபதியைப் பார்த்து கண்ணீர் மல்கக் கெஞ்சினார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.
துணை ராணுவப்படையினர் பாதுகாப்பையும் மீறி, பஞ்சாப், ஹரியானாவில் சில இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாகவும் சற்றுமுன் தகவல்கள் வெளியாகி உள்ளன.