Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

ரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக், கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் செலுத்தியதன் மூலம் இன்று உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். ரிபாத் ஷாரூக் மற்றும் அவருடைய குழுவினரின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறது. வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரிபாத்.

கையடக்க செயற்கைக்கோளுடன் ரிபாத் ஷாரூக்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’ (NASA), புதிய கண்டுபிடிப்புகளுக்கான ‘கப்ஸ் இன் ஸ்பேஸ்'(Cubs in Space) என்ற போட்டி ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மாணவர்கள், தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், படைப்புகளை இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கலாம்.

இந்த போட்டியை, ஸ்ரீமதி கேசன் என்பவர் செயல் அதிகாரியாக இருக்கும் ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ என்ற அமைப்புதான் இந்தியாவில் வழிநடத்துகிறது. இதில் பங்கேற்ற ரிபாத் ஷாரூக் குழுவினர், தங்களின் கையடக்க செயற்கைக்கோளை போட்டிக்கு அனுப்பி வைத்தனர்.
உலகம் முழுவதும் 55 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட குழுவினர் கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்திருந்த நிலையில், அவற்றில் சிறந்த படைப்பாக ரிபாத் குழுவினரின் கையடக்க செயற்கைக்கோள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சொல்லப்போனால் இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒரே இந்தியர், ரிபாத் ஷாரூக்தான்.

ஸ்ரீமதி கேசன் உடன்

இந்த கையடக்க செயற்கைக்கோளுக்கு ரிபாத் குழுவினர் வைத்த பெயர் என்ன தெரியுமா?. அது, ‘கலாம் சாட்’ (KALAM SAT). ஆமாம். மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அந்த விண் நாயகனின் பெயரையே தங்களது செயற்கைக்கோளுக்கும் சூட்டி விட்டனர். உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளும் இதுதான்.

கலாம்சாட்டின் எடை எவ்வளவு என்றால் இன்னும் ஆச்சர்யம் கொள்வீர்கள். வெறும் 64 கிராம்தான் அதன் எடை. 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்துடன் கூடியது. எட்டு சென்சார்கள், ஆன்போர்டு கணினி உபகரணங்கள் கொண்டது. இந்த செயற்கைக்கோள், விண்வெளியில் 240 நிமிடங்கள் மட்டுமே செயல்படக்கூடியது.

விண்வெளியில் நிலவும் தட்பவெப்பம், அங்கு விவசாயம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இந்த கலாம்சாட் அனுப்பப்பட்டு உள்ளதாகச் சொல்கிறார் ரிபாத் ஷாரூக். கார்பன் ஃபைபர் பாலிமரால் இந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.
பரிசுகள், பாராட்டு மழையில் நனைந்தாலும் மாணவர் ரிபாத் ஷாரூக், இந்த வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் இல்லை என்கிறார். அவரிடம் பேசும்போது, எல்லாவற்றுக்கும் குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடுதான் காரணம் என்றும் அடிக்கடி சொன்னார். பலரிடம் இல்லாத குணம் இது. இன்னும் அவர் பல உயரங்களைத் தொட இந்த சுபாவமே பெரிய பலமாக அமையக்கூடும்.

நாசாவில் இருந்து கலாம்சாட் ஏவப்பட்டபோது ஏற்பட்ட உணர்வுகள் குறித்து ரிபாத் ஷாரூக்கிடம் கேட்டோம்.

“நாசா மையத்தில் இருந்து கடந்த (ஜூன்) 22ம் தேதி, இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ‘கலாம் சாட்’ விண்ணில் ஏவப்பட் டது. அப்போது எனக்கும், என் குழுவினருக் கும் ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லேனுதான் சொல்லணும். கலாம்சாட் தயாரிப்பை மூன்று மாதத்தில் முடித்து விட்டோம். திட்டமிடல், டிஸைன் காலத்தையும் சேர்த்தால் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் வரை இந்த புராஜக் டுக்காக செலவிட்டிருப்போம்.

என்னோட அப்பா, முகமது ஃபாரூக். அவரும் சயின்டிஸ்ட் தான்.எனக்கு ஒன்பது வயது இருக்கும்போதே, அவர் மாரடைப் பில் இறந்து விட்டார். என்னோட அம்மா, ஷகிலா பானு. என்னை வளர்த்து ஆளாக்கினது எல்லாமே அம்மாதான். கலாம்சாட் புராஜக்ட் குழுவில் நான் உள்பட மொத்தம் ஏழு பேர். நான் இக்குழுவின் தலைமை விஞ்ஞானி. இந்த புராஜக்டின் இயக்குநராக இருந்தவர் ஸ்ரீமதிகேசன். என்னை அவர், என் அம்மாவைப் போல் பார்த்துக்கொண்டார். அப்பாவுக்கு அப்புறம் அவர்தான் என்னை வழிநடத்தினார். சுட்டி விகடனில் மாணவ பத்திரிகையாளராக இருந்தபோதே அவரை நான் பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் வழிகாட்டுதலுடன் இன்றைக்கு நாங்கள் கலாம்சாட் தயாரித்திருப்பதில் பெருமைதான்,” என்றார்.

“நீங்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெற்றதாக செய்திகள் வந்ததே?” என்று கேட்டோம்.

“ஆமாம். 750 மதிப் பெண்கள்தான் பெற்றேன். நடுவில் எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அதை எப்படி சொல்வது….ம்…அது ஒருவிதமான ஆங்ஸியாட்டினு (Anxiety) சொல்லலாம். என்ன பிரச்னை என்று சொல்ல விரும்பவில்லை. அதனால் ஓராண்டாக நான் பள்ளிக்குச் செல்லவில்லை. பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தேன். இந்த வகையில் பள்ளியின் முதல்வர் முதல் ஆசிரியர்கள் வரை எல்லோருமே என் படிப்புக்கு துணையாக இருந்தனர்.
பள்ளிக்குச் செல்லாத அந்த ஒரு வருட காலம்தான் என்னை அடியோடு புரட்டிப்போட்டது எனலாம். மனதளவில் ஒருவித பக்குவநிலை ஏற்பட்டது. நிறைய புதுப்புது விஷயங்களை தெரிந்து கொண்டேன். இன்றைக்கு நான் இப்படி இருக்க, எனக்கு அந்தக்காலக்கட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்தான் காரணம்,” எனக்கூறும் ரிபாத் ஷாரூக், தற்போது பி.எஸ்சி., இயற்பியல் படித்து வருகிறார்.

இந்த வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டோம்.

“எனக்கு சின்ன வயசிலேருந்து சயின்ஸ் மேல ஆர்வம் அதிகம். ‘இளம் விஞ்ஞானி’ (Young Scientist) போட்டி முதன்முறையாக நடந்தபோது, அதில் நான் முதல் ஆளாக கலந்து கொண்டேன். அந்த போட்டியில் என்னுடைய படைப்பு தேர்வு பெறவில்லை. ஆனாலும் ஸ்ரீமதி கேசன் மேடத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தேன்.

இன்றைக்கு ‘யங் சயின்டிஸ்ட்’ ஆர்கனைசிங் கமிட்டியிலும், ஜூரி குழுவிலும் இருக்கிறேன். அதனால் படிப்பு என்று இல்லை…எது பிடித்திருக்கிறதோ அதை நோக்கி, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்,” எனக்கூறும் ரிபாத், “எங்கள் ஆராய்ச்சியையும் திறமையையும் இந்தியாவுக்கு பயன்படும் படி தொடர்ந்து செயல்படுவோம். இப்படி சொல்வது கொஞ்சம் ‘கிளீஷே'(Cliche)வாக இருக்கும். ஆனால் நாங்கள் இந்தியாவுக்காக உழைப் போம்,” என்றார்.

உலகம் முழுவதும் இருந்து வெறும் பத்து நாடு களே பங்கேற்கும் கிரிக்கெட்டிற்கு ஊக்கமளிக் கும் இந்திய அரசு, ரிபாத் ஷாரூக் போன்ற இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவை முன்னிலை பெறச்செய்ய முடியும்.

உரையாடல்: எஸ்.இளையராஜா.

Contact: selaya80@gmail.com