Sunday, November 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”மோடி பெயரை கேட்டதும் கை, கால்கள் நடுங்கின!”; கிருஷ்ணகிரி பெண்ணின் வெள்ளந்தி பேச்சு!!

பிரதம மந்திரி உஜ்ஜவாலா திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலருக்கும் இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஜம்மு – காஷ்மீர், ஒதிஷா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உஜ்ஜவாலா திட்டப் பயனாளிகள் சிலரிடம் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 28-5-2018ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாடினார்.

 

தமிழ்நாடு தரப்பில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை, போகிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ருத்ரம்மா, ஈஸ்வரி, சந்திரா ஆகியோரிடம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

சந்திரா

காலம் காலமாக விறகு அடுப்பில், புகை, கண் எரிச்சலுடன் சமைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது காஸ் அடுப்பில் சமைக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதன் அனுபவங்களைக் கேட்டறிந்தார்.

 

மேலும், தமிழ்நாட்டுக்கு வரும்போது கிருஷ்ணகிரி வந்தால் தனக்கு தமிழகத்தின் முக்கிய உணவுப் பண்டமான தோசை, இட்லி சுட்டு தருவீர்களா? என்றும் ஜாலியாக கேட்டார். அந்தக் கேள்வியால் மகிழ்ந்த அவர்கள் மூவரும், ‘கண்டிப்பாக நீங்கள் ஊருக்கு வர வேண்டும். இட்லி, தோசை சுட்டுத் தருகிறோம்,’ என்று பதில் அளித்துள்ளனர்.

 

பிரதமருடன் உரையாடிய அனுபவம் குறித்து போகிபுரத்தைச் சேர்ந்த சந்திராவிடம் பேசினோம்.

 

”காஸ் சிலிண்டர் கேட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தோம். நமக்கெல்லாம் இலவச காஸ் இணைப்பு எங்கே கிடைக்கப் போகிறது என்று நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தோம். கடந்த ஏப்ரல் கடைசியில்தான் காஸ் சிலிண்டர் இணைப்பு கிடைத்தது.

 

கலெக்டர் அலுவலகத்தில் காஸ் இணைப்பு புத்தகம் தருவதாக இரண்டு நாள்களுக்கு முன்பு சொன்னார்கள். கலெக்டர் ஆபீசில் இருந்தே உங்களை காரில் கூட்டிட்டுப் போக வருவாங்க என்று காஸ் ஏஜன்சிக்காரங்க சொன்னாங்க.

 

சொன்னபடியே வீட்டுக்கு கார் வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். அப்போது வரைக்கும் பிரதமர் என்னுடன் பேசப்போகிறார் என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை. பிறகு, ருத்ரம்மாவின் வீட்டுக்கு கார் சென்றது. அவருடைய கணவரோ, ‘வீட்டில் குழந்தைகள் இருக்கின்றன. குழ ந்தைகளை விட்டுவிட்டு கலெக்டர் ஆபீசுக்கு எல்லாம் மனைவியை அனுப்ப முடியாது. காஸ்  சிலிண்டர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை,’ என்று தகராறு செய்தார்.

ஈஸ்வரி

ருத்ரம்மாவின் தாயாரோ, காரில் குழந்தைகளைக் கடத்திச்செல்லும் கும்பல்தான் வந்திருக்கிறதோ என்று சந்தேகப்பட்டு அவரும் தகராறு செய்தார். உள்ளே இருந்த நான், அவர்களை சமாதானம் செய்தேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டு ருத்ரம்மாவும் கலெக்டர் ஆபீசுக்கு வந்தாங்க. ஈஸ்வரியும் வந்து சேர்ந்தார்.

 

காலை 7 மணிக்கெல்லாம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று விட்டோம். வீடியோ கான்ஃபரன்ஸ் நடந்த அறைக்குள் சென்றபோது அங்கே கலெக்டர் ஆபீசை சேர்ந்த 20 அதிகாரிகள் இருந்தனர். எனக்கு ஒரே படபடப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது.

 

திடீரென்று ஒருவர் அந்த அறைக்குள் வந்தார். உடனே அந்த அறையில் இருந்தவர்கள் எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர். அவர் யார்? எதற்காக எல்லோரும் எழுந்தார்கள்? என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு, அவர்தான் மாவட்ட கலெக்டர் என்று சொன்னார்கள்.

 

பின்னர் அவர், கொஞ்ச நேரத்தில் பிரதமர் மோடி உங்களுடன் பேசப்போகிறார். நீங்களும் அவரிடம் பேசலாம் என்றனர். எங்களுக்கு முன்பு பெரிய டிவி (வீடியோ கான்ஃபரன்ஸ் ஸ்கிரீனைத்தான் அப்படிச் சொன்னார்) இருந்தது. அதன் வழியாக பேசுவார் என்று சொன்னார்கள்.

 

மோடி பேசுவாரா? என்ற ஆச்சரியம் இருந்தாலும், அவர் பெயரைக் கேட்டதும் எனக்கெல்லாம் பயத்தில் கை, கால்கள் உதறத் தொடங்கிவிட்டது. ருத்ரம்மாவும் பயந்து விட்டார். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள்தான் பேசினார். அவர் இந்தியில் பேசினார். அருகில் அருந்த அதிகாரிகள் தமிழில் மொழியாக்கம் செய்தனர். காஸ் அடுப்பில் சமைக்கும் அனுபவங்களைச் சொன்னோம்.

வீட்டில் டிபன் செய்வீர்களா? என்று பிரதமர் மோடி கேட்டார். ‘விறகு அடுப்பில் டிபன் சமைக்கறது கஷ்டம். சாப்பாடு செய்துடுவோம்,’னு சொன்னோம். காஸ் அடுப்பில் சமைப்பது எப்படி இருக்கிறது என்று கேட்டார்.

 

அதற்கு, ‘முன்னாடி எல்லாம் விறகு அடுப்பில் புகை, இருமலுடன் சமைச்சிட்டு இருந்தோம். இப்போது காஸ் அடுப்பு வந்ததால் புகை இல்லாமல் சமைக்கிறோம். வேலையும் எளிதாக முடிந்து விடுவதால், குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிடுகிறோம். அவர்களையும் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்புகிறோம்,’ என்று சொன்னோம்.

 

அதன்பிறகுதான், கிருஷ்ணகிரிக்கு வந்தால் இட்லி, தோசை சுட்டு தருவீர்களா எனக் கேட்டார். கண்டிப்பாக செய்து தருகிறோம். வீட்டுக்கு வாருங்கள் என்று பதில் சொன்னோம்,” என்றார் சந்திரா.

 

இவருடைய கணவர் புங்கப்பன். விவசாயி. இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் செவிலியராக பணியாற்றுகிறார்.

 

பிரதமருடன் பேசிய விவரம் பத்திரிகை, டிவிக்களில் வெளியானதை அறிந்த சந்திராவின் உறவினர்கள் பலரும் அவருக்கு ஃபோனில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்களாம்.

 

”என்னம்மா, ஒரு ஃபோட்டோவுக்குக்கூட போஸ் கொடுக்க மாட்ட. இப்போது என்னடான உன் போட்டோ எல்லா பத்திரிகையிலும் போட்டு இருக்காங்க,” என்று மகள்கள் இருவரும் கேலி செய்வதாகவும் கூறினார் சந்திரா.

 

பிரதமருடனான வீடியோ கான்ஃபரன்சிங் உரையாடலின்போது சூளகிரியைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரும் உடன் இருந்தார். அவருடைய சார்பில் கணவர் ராமமூர்த்தி நம்மிடம் பேசினார்.

 

”நான் உள்பட என் உடன்பிறந்தவர்கள் 6 பேர். இதுவரை எல்லோரும் கூட்டுக்குடும்பமாகத்தான் வாழ்கிறோம். சமீபத்தில்தான் கடைசி தம்பிக்கு திருமணம் செய்தோம். கூட்டுக்குடும்பம் என்பதால் காஸ் அடுப்பில் சமைத்தால் கட்டுப்படியாகாது என்பதால் இதுவரை விறகு அடுப்பில்தான் சமைத்து வந்தோம்.

 

இனிமேல் தனித்தனியாக வசிக்கலாம் என முடிவு செய்தபிறகு, இலவச காஸ் இணைப்புக்கு விண்ணப்பித்தோம். போன வாரம்தான் எங்களுக்கு காஸ் இணைப்பு கிடைச்சது. காஸ் இணைப்பு ‘புக்’ தருவாங்கனு சொல்லித்தான் என் மனைவியை கலெக்டர் அலுவலகத்துக்கு கூட்டிட்டு போனாங்க.

 

அங்கே போன பிறகுதான் மோடி பேசுகிறார் என்பதே தெரிய வந்தது. என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மோடி பேசுகிறார் என்ற தகவலால் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த பதற்றமும் இல்லை. ஆனாலும், அவர் பேசியது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இருந்தாலும், நாங்கள் இன்னும் அந்த புதிய காஸ் அடுப்பை பயன்படுத்தவே இல்லை. அதனால் காஸ் அடுப்பு சமையல் பற்றிய அனுபவம் எங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை,” என்றார்.

 

– நாடோடி.