Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பராக் பராக்!

தமிழ் திரையுலகில் காமெடி கதாபாத்திரங்களில் முடிசூடா மன்னனாகத் திகழந்த வடிவேலுவுக்கு, கடந்த 2011ம் ஆண்டுக்குப் பிறகு சினிமா மார்க்கெட் இறங்குமுகம்தான். 2011ம் ஆண்டில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ததால் இந்த சரிவு ஏற்பட்டது.

சந்தானம், சூரி, சதீஸ், ரோபோ சங்கர் போன்றோர்கள் வடிவேலுவின் வெற்றிடத்தை நிரப்ப முயற்சித்தாலும், மக்களிடம் அவர்களின் காமெடி எடுபடவில்லை.

கடந்த ஓராண்டாக வடிவேலு மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டாலும், கடைசியாக அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன், எலி படங்கள் சரியாக போகவில்லை. விஷாலுடன் இணைந்து நடித்த காமெடி கதாபாத்திரமும் எடுபடவில்லை.

இந்நிலையில் வடிவேலுக்கு சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம், சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

இதையடுத்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சன் அரசன் 24-ம் புலிகேசி’ தயாராகிறது. அதன் முதல்நாள் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (23/8/17) தொடங்கி, நடந்து வருகிறது.

23ம் புலிகேசியை இயக்கிய சிம்புதேவனே இந்தப் படத்தையும் இயக்குகிறார். பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் ‘எஸ் பிகசர்ஸ்’ நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இசை, ஜிப்ரான். ஒளிப்பதிவு, ஆர்.சரவணன். கலை இயக்கத்தை டி.முத்துராஜ் கவனிக்கிறார்.

சிம்புதேவனின் வழக்கமான அரசியல் நையாண்டிகளுக்கு இந்த படத்திலும் பஞ்சமிருக்காது. இப்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் மீண்டும் பெரிய அளவிலான ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் வைகைப்புயல் வடிவேலு.