Saturday, March 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பட்ஜெட் எதிரொலி: ரத்தக்களறியான இந்திய பங்குச்சந்தை

பியூச்சர் மற்றும் ஆப்ஷன் டிரேடிங் மீதான எஸ்டிடி வரி உயர்வு காரணமாக, பட்ஜெட் நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.

இந்திய அரசின் 2026 – 2027ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் தரும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் உரையில் அதற்கான அறிகுறிகள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

பியூச்சர் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தின் மீது எஸ்டிடி வரி உயர்வு, திரும்பப் பெறுதல்களுக்கான வரி விதிப்பு, லாப முன்பதிவு, உலோகப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் ரத்தக் களறியானது.

பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, சென்செக்ஸ் மற்றும் நிப்டி 0.5 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால், பட்ஜெட் தாக்கலான பிறகு சந்தையின் போக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. வர்த்தகத்திற்கு இடையே சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிந்தது. நிப்டி குறியீட்டு எண் 24800 புள்ளிகளுக்குக் கீழே சென்றது. இந்தளவு சந்தையில் வீழ்ச்சி ஏற்படும் என்று முதலீட்டாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

வர்த்தக முடிவில் நிப்டி 50 குறியீட்டு எண் 495 புள்ளிகள் சரிந்து (1.96 சதவீதம்) 24825 புள்ளிகளில் நிறைவு பெற்றது. சென்செக்ஸ் 1546 புள்ளிகள் குறைந்து (1.88 சதவீதம்) 80722 புள்ளிகளுடன் முடிவடைந்தது. நிப்டி வங்கி பங்குகள், நிப்டி ஐ.டி., நிறுவனப் பங்குகள், பிஎஸ்இ ஸ்மால்கேப் பங்குகளும் கடும் வீழ்ச்சி அடைந்தன.

பங்குச்சந்தை ஆய்வாளர்களிடம் கேட்டபோது, சந்தை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களைப் பட்டியலிட்டனர். அவர்களிடம் பேசியதில் இருந்து…

”எதிர்கால ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பங்கள் (பியூச்சர் அன்டு ஆப்ஷன்ஸ்) சார்ந்த வர்த்தகத்திற்கான பத்திரப் பரிவர்த்தனை வரியை (எஸ்டிடி) அதிகப்படுத்துவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அப்போதே சந்தைகள் கடுமையாக சரியத் தொடங்கின.

எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரியை ஏற்கனவே அமலில் உள்ள 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாகவும், விருப்பங்களின் மீதான பத்திரப் பரிவர்த்தனை வரி 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். எஸ்டிடி வரி குறைக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இந்த வரி உயர்வு சந்தையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து பங்குதாரர்களுக்கும் மூலதன ஆதாயங்களாக பங்குகளை திரும்பப் பெறுவதற்கு வரி விதிக்க முன்மொழிந்தார். எனினும், விளம்பரதாரர்கள் கூடுதல் திரும்பப் பெறுதல் வரியைச் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எஸ்டிடி வரி உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் திடீரென்று அதிகளவில் லாபத்தை முன்பதிவு செய்யத் தொடங்கியதும் சந்தை வீழ்ச்சிக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பட்ஜெட் தாக்கல் நாளன்று இந்திய பங்குச் சந்தைகள் எப்போதும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. கடந்த காலங்களிலும் இதேபோல் நிகழ்ந்துள்ளன.

நிதிக்கொள்கை, மூலதன உந்துதல், துறை சார்ந்த ஊக்கத் தொகைகள், நிதி பற்றாக்குறை இலக்குகள் தொடர்பான அறிவிப்புகளைப் பொறுத்து, சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

மேலும், பிப்.1ம் தேதி வரை தொடர்ந்து மூன்று அமர்வுகளாக சந்தையில் உலோகப் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இதன் தாக்கமும் சந்தையில் எதிரொலித்தது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, நிப்டி மெட்டல் குறீயிட்டெண் 5 சதவீதம் வரை சரிந்து, 11218 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வர்த்தக முடிவில் ஹிந்துஸ்தான் காப்பர் பங்குகள் 19 சதவீதம், நால்கோ பங்குகள் 14.5 சதவீதம், இந்துஸ்தான் ஸிங்க் 13.5 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், வேதாந்தா, ஹிண்டால்கோ பங்குகளும் 10 சதவீதம் வரை சரிவடைந்தன,” என்கிறார்கள் பங்குச்சந்தை ஆய்வாளர்கள்.

  • ஷேர்கிங்

Leave a Reply