Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆளுங்கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், மாங்கனி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல்களையும் பட்டவர்த்தனமாக அம்பலமாக்கியுள்ளது.

 

ஆர்ப்பாட்டம்

 

அதிமுக அரசில் குட்கா ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், மணல் கொள்ளை ஊழல், சத்துணவு முட்டையில் ஊழல் என எல்லா துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் செப். 18ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது.

 

சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, அதிமுக அரசை வெளுத்து வாங்கினார்.

 

மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் என்றால் அது, செப். 18ம் தேதியன்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்தான்.

துணை முதல்வராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பலமுறை சேலத்திற்கு முன்பு வந்திருந்தாலும், திமுகவின்  தலைவரான பிறகு அவர் முதல்முறையாக சேலத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டுதான் வருகை புரிந்தார்.

 

இதனால் சேலம் மாவட்ட திமுக தொண்டர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடியது என்னவோ உண்மைதான். ஆனால், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள் அதை முழுமையாக அறுவடை செய்ய தவறி விட்டதாகவே சொல்ல வேண்டும்.

 

எதற்காக சேலம்?

 

மு.க.ஸ்டாலின் எதற்காக சேலம் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான காரணத்தை அவரே மேடையில் குறிப்பிட்டார்.

 

”1949ல் சேலம் கோட்டையில்தான் தலைவர் கலைஞர் குடியிருந்தார். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் தயாரான  படங்களுக்கு கதை, வசனங்களை சேலத்தில் இருந்துதான் எழுதினார். அதனால்தான் சேலத்தை நானே தேர்வு செய்து வந்திருக்கிறேன்,” என்று சொன்னபோது, தொண்டர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

 

”கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘மந்திரிகுமாரி’ படத்தில், பார்த்திபன் என்ற ஒரு கேரக்டர் உண்டு. அந்த கேரக்டருக்கு கொள்ளையடிப்பதே தொழில்,” எனக்கூறிய மு.க.ஸ்டாலின், மேடையில் அருகில் நின்று கொண்டிருந்த தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை பார்த்து கைநீட்டி, ‘இந்த பார்த்திபன் அல்ல’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். ”எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறபோதெல்லாம் மந்திரிகுமாரியில் வரும் கொள்ளைக்கார பார்த்திபன் கேரக்டர்தான்  நினைவுக்கு வருகிறது,” என்றார்.

”ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்குள் போட்டியே நடக்கிறது. அப்படி ஒரு போட்டி வைத்தால் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் முதலிடம் பிடிப்பார்,” என்று டாப் கியரில் வேகமெடுத்தார்.

 

‘ரைமிங்’ பேச்சு

 

”ஊழலுக்குத் துணைபோகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலும் தயாரித்து விட்டோம். அவர்களையும் கண்காணித்து வருகிறோம். இப்போது கரன்சி எண்ணுபவர்கள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கம்பி எண்ணுவார்கள்,” என்று பேச்சில் கொஞ்சம் பொடி வைத்தும், ரைமிங் ஆகவும் மு.க.ஸ்டாலின் பேசியதை எல்லாம் தொண்டர்கள் கரவொலி எழுப்பியும், விசில் அடித்தும் வரவேற்றனர்.

 

மேடையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஒருவரைத் தவிர மற்ற பெண் நிர்வாகிகளுக்கு இடமில்லை.

 

ஸ்டாலினுக்கு வலதுபுறத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, டி.எம்.செல்வகணபதி, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஆகியோரும், இடது புறத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோரும் நின்றிருந்தனர்.

 

தனி விமானம்

 

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு மதிய உணவை முடித்துக்கொண்ட மு.க.ஸ்டாலின், சென்னைக்கு தனி விமானத்தில் கிளம்பிச்சென்றார். தனி விமானத்திற்கான ஏற்பாடுகளை ஜெகத்ரட்சகன் செய்ததாக சொல்லும் சிலர், சுரங்கத் தொழிலில் கொடி கட்டிப்பறக்கும் சேலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் தொழில் அதிபரின் உபயம் என்றும் சொல்கின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மைக் கழக கட்டடம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடம்  ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எதற்கு பகைத்துக் கொள்வானேன் என்று கருதியோ என்னவோ, அந்த 30 அடி அகல சாலையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுத்திருந்தது காவல்துறை.

 

நாட்டாண்மைக் கழக சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் வரை, அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலை, பெரியார் மேம்பாலத்தின் ஒரு பகுதி சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்றதை போலீசாரும் எதிர்பார்க்கவில்லை.

 

ஆர்ப்பாட்டத்தில் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்திருக்கிறது. இந்த விவரத்தை முன்கூட்டியே போனில் கேட்டறிந்த ஆளுங்கட்சியின் மேலிடம் ரொம்பவே அப்செட் ஆனதாகவும் சொல்கின்றனர்.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவருடைய சொந்த மண்ணிலேயே சாட்டையை சுழற்றியிருக்கிறார் என கழக கண்மணிகள் புளகாங்கிதம் அடைந்திருக்கும் அதேநேரம், ஆர்ப்பாட்டத்தை மையப்படுத்தி உடன்பிறப்புகளிடையே பெரும் சலசலப்புகளும் எழுந்துள்ளன.

 

கட்சி விதிகளை மீறிய வீரபாண்டி ராஜா:

 

பெயர் விவரங்களை வெளியிடக்கூடாது என்ற அன்பான நிபந்தனையோடு திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசினர்.

”சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்காக தளபதி ஸ்டாலின் செப். 17ம் தேதி இரவே கார் மூலம் சேலம் வந்துவிட்டார். தலைவாசலில் அவருக்கு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவின் கட்டுப்பாட்டில் தலைவாசல் பகுதி வருகிறது.

 

தளபதியாரை வரவேற்று, அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து தலைவாசல் வரை திமுக கொடி கட்டியிருந்தார். வட்ட வடிவ பேனர் வைத்திருந்தார். தளபதி ஸ்டாலின், கட்சி நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தை தவிர்க்கும்படியும், சால்வை அணிவித்தலை தவிர்த்துவிட்டு புத்தகங்களும், கட்சிக்கு நன்கொடை வழங்கும்படியும் கூறியுள்ளார்.

 

இந்த ஒழுங்கு விதிகள் எதையுமே வீரபாண்டி ராஜா கண்டுகொள்ளவில்லை. பேனர்களில் தன் படத்துடன், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் படமும் போட்டுக்கொண்டார்.

 

பாரப்பட்டி சுரேஷ்குமார்:

 

முன்னாள் ஊராட்சிக்குழுத் துணைத்தலைவராக இருந்த பாரப்பட்டி சுரேஷ்குமார், முந்தைய திமுக ஆட்சியின்போது சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றார்.

இதனால் பாரப்பட்டி சுரேஷ்குமாரை அப்போது திமுக தலைவர் கலைஞரே கட்சியில் இருந்து நீக்கினார். பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றாலும், கட்சியினர் மத்தியில் பாரப்பட்டி சுரேஷ்குமார் மீது அவ்வளவாக அபிப்பிராயம் இல்லை.

 

இந்த நிலையில், தளபதியை வரவேற்கும் மேடையில் பாரப்பட்டி சுரேஷ்குமாரை ஏற்றி அழகு பார்த்திருக்கிறார் வீரபாண்டி ராஜா. இதை கிழக்கு மாவட்ட திமுக தொண்டர்களே ரசிக்கவில்லை. மறுநாள் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதும் பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு மேடையில் இடம் தரப்பட்டிருந்ததன் ரகசியம் புரியவில்லை,” என்றார் அந்த மூத்த நிர்வாகி.

 

”தலைவாசலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அழைத்துச்சென்று கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தோம். மறுநாள் அவர்களை பல கிலோமீட்டர் தூரம் சேலத்திற்கு அழைத்துக் கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது.

 

வர விருப்பமானவர்களை வரச்சொல்லி விட்டோம். அதனால்தான் ஆர்ப்பாட்டத்தின்போது கிழக்கு மாவட்ட திமுக  தொண்டர்களின் கூட்டம் குறைவாக இருந்தது,” என்கிறார் மற்றொரு திமுக புள்ளி.

 

இன்னொன்றையும் அந்த பிரமுகர் சொன்னார்.

 

”சார்… நாங்களும் எவ்வளவுதான் செலவு பண்ண முடியும்? வீரபாண்டி ராஜா, நகர, பேரூர், கிளை நிர்வாகிகளுக்கு செலவுக்கு கொடுத்தால்தான் மக்களை திரட்டிக் கொண்டு வர முடியும். வெறும்  கையில் முழம் போட முடியுமா?. அவரே பெரிதாக அலட்டிக்கல. எப்படி கூட்டம் சேர்த்தாலும் இதெல்லாமே மத்திய மாவட்ட  திமுகவுக்குதான் பேரு கிடைக்கும்னுகூட அவரு நினைச்சிருக்கலாம்,” என்றார் போகிற போக்கில்.

 

வீரபாண்டி ராஜாவின் நிலை இப்படி என்றால், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தரப்பில் இருந்து ஐந்நூத்தி சொச்சம்பேர் கூட ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துவரப்படவில்லை என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

தேர்தல் பணிக்குழு செயலாளரான எஸ்.ஆர்.பார்த்திபன் மட்டும் ஆர்ப்பாட்டத்திற்கு சில நாள்கள் முன்பு மேட்டூர், மேச்சேரி, சாத்தப்பாடி ஆகிய ஊர்களில் மக்களை திரட்டி திண்ணைக் கூட்டம் போட்டு, ஆர்ப்பாட்டத்திற்கு ஆள்களை திரட்டிக் கொண்டு வந்தார்.

 

ஒதுங்கிய சிவலிங்கம்:

 

”மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய எல்லையில் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகள் வருகின்றன. இந்த மூன்று தொகுதிகளிலும் வன்னியர், வெள்ளாள கவுண்டர், பட்டியலினத்தவர் ஆகிய சமூகத்தினர்தான் அதிகம்.

 

அதனால் ஆரம்பத்தில் இருந்தே சிவலிங்கத்திற்கு இந்த தொகுதிகளில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. அடுத்து, அவர் வீரபாண்டி ராஜாவுடன் காட்டும் நெருக்கத்தை மத்திய மாவட்ட திமுக செயலாளருடன் காட்டுவதில்லை.

 

வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், ஆர்ப்பாட்டத்திற்கு ஆள்களை திரட்டுவதில் சிவலிங்கம் கொஞ்சம்கூட ஆர்வம் காட்டவில்லை,” என்றார் எடப்பாடியைச் சேர்ந்த முன்னாள் கிளை செயலாளர் ஒருவர்.

 

மத்திய மாவட்டம்:

 

சேலம் மத்திய மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

 

”திமுகவில் உள்ள 18 அணி நிர்வாகிகளையும் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் ராஜேந்திரன், நேரில் அழைத்துப் பேசினார். செல்போனிலும் அடிக்கடி எங்களுடன் தொடர்பில் இருந்தார். ஒவ்வொரு முறையும், ‘தளபதி கட்சித் தலைவரான பிறகு முதல்முறையாக சேலம் வருகிறார். அதனால் ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். நாமதான் இதை எடுத்துப் பண்ண வேண்டும்,’ என்று சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

 

ஓர் அணியில் அமைப்பாளர், துணை அமைப்பாளர்னு பதினைந்து பேர் இருக்கிறார்கள் என்றால், ஒவ்வொருவரும் தலா 30 பேரை அழைத்து வர வேண்டும்.

வெறுமனே நம்பரைச் சொல்லி ஏமாற்றி விட முடியாது. அதனால் அழைத்து வரப்படும் நபர்களின் பெயர், செல்போன் நம்பர் முதல்கொண்டு வாங்கிக் கொண்டார். அணிக்கு 450 பேர் என்றால் 18 அணிகளுக்கும் சேர்த்து எத்தனை பேர் என்று நீங்களே கணக்குப் போட்டுக்குங்க,” என்று நமக்கு வேலை கொடுத்தனர்.

 

”ஆர்ப்பாட்டத்திற்கு சில நாள்கள் முன்பு, மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவை நேரில் சென்று சந்தித்தார். அப்போது, சேலம் வரும் தளபதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், சேர்ந்து செயல்படுவோம் என்றும் சொல்லிவிட்டு வந்தார்.

 

2016 சட்டப்பேரவை தேர்தலின்போது ராஜேந்திரன் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று வீரபாண்டி ராஜா தரப்பு வேலை செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அவற்றையும் மறந்து, அவரே நேரில் சென்று பேசினார். ஆனால், கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்ட பணிகளில் இணக்கமாக  செயல்படவில்லை,” என்றும் சொன்னார்கள்.

 

மு.க.ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர்களில்கூட தன் படம் வராமல் கவனமாக இருந்துள்ளார் ராஜேந்திரன். எதிர்பார்த்தைவிட ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக ராஜேந்திரனை தனியாக அழைத்து மு.க.ஸ்டாலின் நேரடியாகவே பாராட்டி விட்டுப் போனாராம்.

 

”போலீசார் ரிப்போர்ட்டை விடுங்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 24 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என்பதுதான் எங்களது கணிப்பு,” என்ற காத்திரமான முடிவுடன் நம்மிடம் பேசினார் முன்னாள் திமுக எம்எல்ஏ ஒருவர்.

 

சீனியாரிட்டி…சின்சியாரிட்டி…:

 

”சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக கட்டுப்பாட்டில் 7 தொகுதிகள் வருகின்றன. மத்திய மாவட்ட செயலாளர்போல கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்களும் களப்பணி செய்திருந்தால் இந்த ஆர்ப்பாட்டம், மாநாடாக மாறியிருக்கும். அவர்கள் இருவரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

 

சேலம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலுக்குள் திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை தளபதியார் சரிசெய்யாவிட்டால் கட்சி காணாமல் போய்விடும். சீனியாரிட்டி பார்த்து பொறுப்பு கொடுப்பதை விட சின்சியாரிட்டி பார்த்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய காலக்கட்டத்தில் திமுக இருக்கிறது. அதற்கேற்ப கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும்,” என்றார்.

 

ஊழலுக்கு எதிராக களமாடும் முன் காத்திரமான செயல்வீரர்களை தளகர்த்தர்களாக நியமிப்பதே திமுகவுக்கு இப்போதைய முதல் கடமை.

 

வறுவல் ஆன டி.எம்.எஸ்.!

அதிமுக ஆட்சியின்போது (1991-1996) டி.எம்.செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது சுடுகாட்டுக்கூரை அமைத்ததில் ஊழல் நடந்ததாக திமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இப்போது அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் இருக்கிறது. இதற்கிடையே, கடந்த திமுக ஆட்சியின்போது அதிமுக கூடாரத்தில் இருந்து டி.எம்.செல்வகணபதி திமுகவுக்கு தாவினார்.

 

செப். 18 ஆர்ப்பாட்டத்தின்போது, மேடையில் மு.க.ஸ்டாலின் அருகில் டி.எம்.செல்வகணபதி நின்று கொண்டிருந்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை அருகில் வைத்துக்கொண்டு அதிமுக அரசின் ஊழல் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதா? என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிஸன்கள் பொளந்து கட்டினர்.

 

தொண்டர்கள் கப்சிப்; மேலிடம் நிம்மதி!

 

சென்னையில் பிரியாணி கடையில் தகராறு, பிறகு பஜ்ஜி கடைக்காரருடன் மோதல் என்று திமுக தொண்டர்கள், சில நிர்வாகிகள் கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் செயல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக கண்டிப்பதோடு, அவர்களை உடனடியாக கட்சியில் இருந்தும் கட்டம் கட்டி விடுகிறார்.

 

சேலத்தில், செப். 18 ஆர்ப்பாட்டம் கிட்டத்தட்ட குட்டி மாநாடு போல நடந்தது. ஆர்ப்பாட்டம் முடிந்து, தொண்டர்கள் கலைந்து செல்லும்போது எந்தவித கரைச்சலிலும் ஈடுபடாமல் இருந்தது திமுக மேலிடமும் நிம்மதி பெருமூச்சு விட்டது.

 

 

– பேனாக்காரன்.

Leave a Reply