Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்

பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,’ போலருக்கு.

காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், ‘பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ’ என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு.

ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, இவ்விஷயத்தில் பாண்டிய மன்னனுக்கு எழுந்ததைவிட பெரும் சந்தேகமே இருந்தது எனலாம்.

மனம் கவர்ந்த பெண்ணை நோக்கி அருகில் சென்றால் குளிர்கின்றதாம். அவளை நீங்கினாலோ தேகமெங்கும் சுடுகின்றதாம் வள்ளுவனுக்கு. இப்படிப்பட்ட வித்தியாசமான நெருப்பை இவள் எங்கிருந்து, எப்படி பெற்றிருப்பாள் என்றும் தீவிரமாக யோசிக்கிறார்; யோசிக்கவும் வைக்கிறார், வள்ளுவர்.

தன் சந்தேகத்தை அவர், ‘புணர்ச்சி மகிழ்தல்’ அதிகாரத்தில்,

”நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்”   (111:1104)

என்கிறார்.

தலைவியைப் பிரிந்து இருப்பதால் ஏற்படும் துன்பத்தை சுடும் தன்மையுடனும், அவளுடன் புணர்ந்த பின் உண்டாகும் மகிழ்ச்சியை குளிர்ச்சியோடு ஒப்பிடுவதாகவும் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், மேலதிக விளக்கமாக இப்படி குறிப்பிடுகிறார்.

பெண்ணிடம் இப்படி ஒரு வித்தியாசமான தீ இருப்பதாகச் சொன்னாலும் வள்ளுவர், உண்மையில் காமம் அல்லது காதலையே அவர் தீ எனச்சொல்கிறார் என்பதை, அவரே இன்னொரு பாடலில் பதிவு செய்கிறார்.

‘பிரிவாற்றாமை’ அதிகாரத்தில்,

”தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ”    (116:1159)

என்கிறார். அதாவது, தன்னைத் தொட்டால் மட்டுமே சுடக்கூடிய தன்மை உடையது நெருப்பு; ஆனால், இந்தக் காமநோய் அப்படி அல்ல. தலைவன் தலைவியை விட்டோ அல்லது தலைவி, தலைவனை விட்டோ நீங்கினாலோ உடனே சுட்டுவிடுமாம். ஒருவேளை, இதனால்தான் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறார்களோ என்னவோ!. அநேகமாக, இந்தப்பாடல்தான் இந்தக்கட்டுரைக்கு மிகச்சரியான உதாரணமாகவும் இருக்க முடியும் எனக் கருதுகிறேன்.

பெண்களைப் பார்த்துப் வியந்து போன வள்ளுவன், அவர்களின் விழிப்பார்வையிலேயே குழம்பி விடுகிறான். அதனால்தான் அவன் ‘தகையணங்குறுத்தல்’ அதிகாரத்தில்,

”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து”    (109:1085)

என்கிறார். இந்தப்பாடலில் அவர், எமனோ? கண்ணோ? அல்லது பெண்மானோ? இந்த இளம்பெண்ணின் பார்வை, இந்த மூன்றின் தன்மையும் உடையதாக இருக்கிறதே என சற்றே குழம்புகிறார்.

வள்ளுவரின் சிந்தனைகளை ஒட்டி, திரை இசையில் பல பாடல்கள் வந்துள்ளன. அதைத்தான் நாம் தொடராகப் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ‘தாயில்லாப் பிள்ளை’ படத்தில் ‘திரைக்கவித்திலகம்’ அ.மருதகாசி எழுதிய, ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா’ பாடலும் பொருந்திப் போவதைக் காணலாம்.

அந்தப் பாடலைப் பற்றி பேசுவதற்குமுன், படத்தைப் பற்றிப் பேசுவோம். 1961ம் ஆண்டில், ஜெமினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது ‘தாயில்லாப்பிள்ளை‘. இயக்கம், எல்.வி.பிரசாத். கல்யாண்குமார், டி.எஸ்.பாலையா, ஜி.முத்துக்கிருஷ்ணன், எம்.வி.ராஜம்மா, எல்.விஜயலட்சுமி, மாதுரி ராய் உள்ளிட்டோரின் இயல்பான நடிப்பால் இந்தப்படம் அப்போது வெற்றிப்படமாக அமைந்தது.

அதற்கு இன்னொரு முக்கிய காரணம், கலைஞர் கருணாநிதி. அவர்தான் இந்தப்படத்துக்கு கதை, வசனம். சாதி வர்க்க பாகுபாட்டை சாடிய படம். வழக்கம்போல் கருணாநிதியின் கூர்மையான வசனம், படத்துக்கு பெரும் பலம் சேர்த்து இருந்தது.

இந்தப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, ‘படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா’ என்ற பாடல், ரசிகர்களை முணுமுணுக்க வைத்த பாடல்களுள் ஒன்றாக அமைந்தது. ‘திரை இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன் இசையில், பி.பி.ஸ்ரீனிவாஸ்-ஜமுனாராணி குரல்களில் வெளியான இந்தப்பாடல், இன்றளவும் ‘ஒன்ஸ்மோர்’ ரகம்.

ஜி.முத்துக்கிருஷ்ணன்-மாதுரி ராய் ஆகியோரின் அலட்டல் இல்லாத நடன அசைவுகளுடன் இந்தப்பாடல் படமாக்கப்பட்டு இருக்கும். படத்தின் இரண்டாவது கதாநாயகனான ஜி.முத்துக்கிருஷ்ணன், இந்தப்பாடலில் நம்ம பாக்யராஜ் அளவுக்குக்கூட நடனம் ஆடியிருக்க மாட்டார் என்றால் பாருங்களேன்.

இந்தப் பாடலை புனைந்த கவிஞர் அ.மருதகாசிக்கு, வரும் பிப். 13ம் தேதி 97வது பிறந்த நாள். இளங்கம்பன் கண்ணதாசனுக்கு முன்பே, கிட்டத்தட்ட 4000 திரைப்பாடல்களை எழுதிய சாதனையாளர்தான், மருதகாசி.

கவிஞர் அ.மருதகாசி

கவிஞரின் பாடல்களில் ஆங்காங்கே திருக்குறளின் தாக்கமும் தெறிக்கும். அதனால்தானோ என்னவோ, ‘அறிவாளி’ என்ற படத்தில் (1963), ‘அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே…’ என்ற பாடலையும் புனைந்துள்ளார். ‘தாயில்லாப் பிள்ளை‘ படத்தில் அவர் இயற்றிய பாடலில், ”கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு…நாம் எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு?” என்றும் கேட்கிறார். வள்ளுவன், ஆணின் பார்வையில் பேசினால், இந்தப்பாடலில் கதாநாயகி அத்தகைய கேள்வியை தொடுக்கிறாள். அதற்கு, நாயகன் பதில் சொல்லும் விதமாக வரிகளை புனைந்திருப்பார் அ.மருதகாசி.

அந்தப்பாடலின் முழு வடிவம் உங்களுக்காக…

பெண்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா
பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா

ஆண்: பார்வை சொல்லும் பாடம் கண்டு விழிக்கிறேனம்மா-நான்
படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா?

(படிக்க வேண்டும்)

பெண்: கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு&நாம்
எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு?

ஆண்: ஒட்டும் இரு உள்ளந்தன்னில் பற்றிக்கொண்டது-அந்த
புத்தம்புது நெருப்பைத்தானே காதலென்பது! கவிஞர் சொன்னது

(படிக்க வேண்டும்)

பெண்: தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இந்த உலகமே
செங்கதிரோனை சுற்றும் சேதி பழைய பாடமே

ஆண்: என்னை மட்டும் சுற்றிக்கொண்டு இருந்த உலகமே-இன்று
உன்னைச்சுற்றிக் கேட்கும் பாடம் புதிய பாடமே-புதிய பாடமே

(படிக்க வேண்டும்)

பெண்: பழைய பாடம் தேவையில்லை வாத்தியாரய்யா
இருவரும்: ஹா…………ஹா………ஹா….

 

– இளையராஜா சுப்ரமணியம்
தொடர்புக்கு: selaya80@gmail.com

Mobile: + 91 9840961947