Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்

ஆண்களோ, பெண்களோ
தங்கள் முகத்தை அழகு
படுத்திக்கொள்ள விரும்பாதவர்கள்
யாருமே இல்லை. இந்த
உளவியலைப் புரிந்து
கொண்டதால்தான் பல
நுகர்பொருள் நிறுவனங்கள்,
அழகு சாதன பொருட்களை
சந்தையில் அள்ளிக்
கொட்டி வருகின்றன.

இந்தியாவில் மட்டும்
அழகு சாதனப் பொருட்களின்
சந்தை மதிப்பு ரூ.2 லட்சம்
கோடியாக உள்ளது. ஆண்டுதோறும்
20 விழுக்காடு விற்பனை
கூடியும் வருகிறது. ஆனால்
சந்தையில் விற்கப்படும்
சோப் முதல் முகத்திற்குப்
போடும் கிரீம் வரை எதுவும்
நம் முகத்திற்கு நிரந்தர
அழகை தராது; மாறாக வேறு
சில பக்க விளைவுகளை
மட்டுமே உண்டாக்கும்
என எச்சரிக்கிறார், சேலம்
இரண்டாம் அக்ரஹாரத்தில்
உள்ள டாக்டர் ராமு லைப் கேர்
மருத்துவமனை தோல் நோய்
மருத்துவர் மேஜர்.கனகராஜ்.

“அந்தப் பெண்ணிற்கு
சுமார் 22 வயது இருக்கும்.
விடிந்தால் திருமண நிச்சயதார்த்தம்.
அந்த நிலையில் அந்தப்பெண்,
ஏதோ ஒரு அழகு
நிலையத்திற்குச் சென்று,
கைகளில் ஹென்னா எனப்படும்
செயற்கை மருதாணி வைத்துக்
கொண்டுள்ளார். அந்த மருதாணி
அவளுக்கு ஒத்துக்கொள்ளததால்
சிறிது நேரத்தில் ஒவ்வாமை
ஏற்பட்டு கைகள் ரொம்பவே
வீங்கிவிட்டன. எரிச்சலும்
ஏற்பட்டுள்ளது.

என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்.
உரிய சிகிச்சை மூலம் அடுத்த
இரண்டு மூன்று நாள்களில்
கைகள் பழைய நிலைக்கு
வந்துவிட்டன. ஆனாலும் அந்தப்
பெண்ணுக்கு ஏற்பட்ட மன
உளைச்சலுக்கு நம்மிடம்
தீர்வு இல்லை.

செயற்கை மருதாணியில்
பயன்படுத்தப்படும்
பாரா ஃபெனிலீன்டையமின்
(para phenylenediamine)
என்ற வேதிப்பொருள்தான்,
அந்தப் பெண்ணின் கைகளில்
ஏற்பட்ட ஒவ்வாமைக்குக் காரணம்.
இந்த வேதிப்பொருள் வழக்கமாக
‘ஹேர் டை’களிலும்
பயன்படுத்தப்படுகிறது. இந்த
வேதிப்பொருள் நம் உடலில்
அதிகரிக்கும்போது சிறுநீரகம்,
கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.
சுவாசப் பிரச்னைகளும்
உண்டாகலாம்.

நம் உணவுப்பழக்கம் முதல்
வாழ்வியல் முறை வரை
எல்லாமே மாறி விட்டது.
சொல்லப்போனால்
கெமிக்கல்களுடன்தான்
வாழ்கிறோம். ஆனால் எந்த
வேதிப்பொருள் எந்த அளவுக்கு
இருக்க வேண்டும் என்ற
அளவு நமக்குத் தெரிவதில்லை.
கெமிக்கல் அதிகமாகும்போது
உடலுக்குத் தீங்கு ஏற்படுகிறது.

வழக்கமாக மசாஜ் சென்டர்கள்,
அழகு நிலையங்களில் தொழில்முறை
வல்லுநர்கள் இருப்பதில்லை.
அதனால்தான் அங்கு பயன்படுத்தப்படும்
அழகுசாதனப் பொருட்களால்
ஒவ்வாமை போன்ற பிரச்னைகள்
ஏற்படுகின்றன,” என்கிறார்
மருத்துவர் கனகராஜ்.

”சில கிரீம்களை
பயன்படுத்தினால் ஏழு நாட்களில்
முகம் அழகாகிவிடும் என
விளம்பரம் செய்கிறார்களே?”
என்று கேட்டோம்.

“எந்த அழகு கிரீம்களைப்
பயன்படுத்தினாலும் நம்
முகத்திற்கு நிரந்தர அழகு
கிடைத்து விடாது. ஆனால்,
முக அழகு கிரீம்களை
பயன்படுத்தும்போது சில மணி
நேரத்திற்கு நம் முகம்
சற்று ‘பளிச்’ என (Glow) இருக்கும்.
அதைத்தான் அழகு என
நம்பிக்கொண்டு இருக்கிறோம்.
அதற்குக் காரணம்,
அழகு சாதன கிரீம்களில்
ஒளிந்திருக்கும்
நியாசின்அமைடு
(niacinamide)
மற்றும் ஸ்டீராய்டு
(steroid) கெமிக்கல்களே.

இயற்கையிலேயே
நம் உடலில் ஸ்டீராய்டு
சுரப்பி உள்ளது. அதுதான்
அதிகப்படியான சக்தியைக்
கொடுக்கிறது. இளமையாகக்
காட்டுகிறது. ஆனால் தொடர்ந்து
முக அழகு கிரீம்களை
பயன்படுத்துவதால் அதில் உள்ள
ஸ்டீராய்டு, நியாசின் அமைடு
கெமிக்கல்களால் நம் முகத்தில்
உள்ள தோல் மெலிதாகி விடும்.
முகப்பருக்கள் வரும்.
அதனால் தேவையற்ற பதற்றம்
ஏற்படும் என்பதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் முன்பே சொன்னதுபோல்
எந்த ஒரு கெமிக்கலும்
அளவுடன் இருக்கும் வரை
எந்தப் பிரச்னையும்
ஏற்படுவதில்லை.

இந்த நேரத்தில்
இன்னொன்றையும்
முக்கியமாகச் சொல்ல வேண்டும்.
பெரும்பாலானவர்களுக்கு
முகத்தில் கரும்புள்ளி,
பருக்கள் தொந்தரவு உள்ளது.
உணவுப்பழக்கம் மாற்றம்,
புகைப்பிடித்தல், தூக்கமின்மை,
மன அழுத்தம், மரபியல் குறைபாடு
ஆகிய காரணங்களால் கரும்புள்ளிகள்
தோன்றுகின்றன. அழகு சாதன
கிரீம்களை பூசினால் இதற்கு
தீர்வு கிடைக்காது.

நார்ச்சத்து நிறைந்த
பச்சை காய்கறிகள், ஆரஞ்சு,
ஆப்பிள் போன்ற நல்ல
நிறமுள்ள பழங்களை
எடுத்துக்கொள்வதன் மூலம்
முகப்பரு, கரும்புள்ளிகள்
வராமல் தவிர்க்கலாம்,”
என்றார் மருத்துவர்
மேஜர். ஆர்.கனகராஜ்.

மருத்துவரை தொடர்பு கொள்ள:
97504 51176.

(புதிய அகராதி-2017 இதழில் இருந்து)

சந்திப்பு: செங்கழுநீர்