Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

”பொறுத்தது போதும்…புறப்படு தமிழா…’

மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா.

அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான்.

”அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? ‘விமான ஓட்டி’ கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,” என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய பரிதவிப்பு அது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதும் கூட. காரணம், நம் பக்கத்து வீடுகளிலும்கூட அனிதாக்களும் அஜ்மல்கான்களும் இருக்கலாம். ஆனால், நிராயுதபாணியாக இருக்கும் ஒரு சாமானியன் எவ்வளவு காலம்தான் எதிர்வினையாற்றிக் கொண்டே இருக்க முடியும்?.

நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி சிதம்பரம் போன்றோருக்கு எதிராக 17 வயதே ஆன ஒரு மாணவி, தன்னையும் ஓர் எதிர்மனுதாரராக ஆக்கிக் கொண்டிருக்கிறாளே. அது ஒன்று போதுமே அனிதாவின் துணிச்சலுக்கான சான்று. ஆயினும் தொடர் விரக்தி, சாய்ந்து கொள்ள தோள்கள் இல்லாத சூழலில், குக்கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் என்ன முடிவெடுப்பாளோ அதைத்தான் அவளும் தீர்மானித்திருக்கிறாள்.

இறந்தவள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலித் அரசியலாக்க முயற்சிக்காமல் நம்மிடம் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் தருணம் இது என்பதை தமிழர்கள் சிந்திக்க மறந்துவிடலாகாது.

அது, ஆகஸ்ட் 28, 2011. காஞ்சிபுரத்தில் தோழர் செங்கொடி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு உயிர் தற்கொடையாக்கினார். அப்போது அவளுக்கு 21 வயது. வாழ்வின் அடுத்த நிலைக்கு நகர வேண்டிய காலக்கட்டம். செங்கொடி, எதற்காக தன்னுயிர் ஈந்தார் என்பதையே தமிழர்களில் பாதிப்பேர் மறந்தே போயிருக்கக்கூடும். அத்தகையவர்களுக்காகச் சொல்கிறேன்…

ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டாள், செங்கொடி. இந்த மூவருக்கும் செங்கொடிக்கும் யாதொரு ஒட்டும் இல்லை; உறவுமில்லை. அவர்களை ஒரே புள்ளியில் இணைத்தது, தமிழ் உணர்வு ஒன்று மட்டும்தான்.

செங்கொடி இந்த மண்ணை விட்டு மறையும்முன் எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்பில் இப்படிச் சொல்லியிருந்தார்: ”தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன். இப்படிக்கு தோழர் செங்கொடி,” என்று எழுதியிருந்தாள். அவருக்கு முன்பு, 2009ம் ஆண்டு, ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து உயிர் துறந்தான் முத்துக்குமார் எனும் மறத்தமிழன். அவனின் நீட்சி செங்கொடி.

செங்கொடிகளுக்கும், அனிதாக்களின் தற்கொலைக்கும் வேறு வேறு காரணம் இருக்கலாம். ஆனால், இருவரும் அரசின் அலட்சியத்தால் துவண்டு போய், விரக்தியின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார்கள் என்பதை யாரேனும் மறக்க முடியுமா?.

டில்லியிலும், நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளையும், மக்களையும் சந்திக்க நேரம் ஒதுக்க இயலாத அதிகார வர்க்கம் பிரியங்கா சோப்ராக்களுக்கும் கவுதமிகளுக்கும், காவடி தூக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் கதவுகளை திறந்தே வைத்திருக்கிறதே. இதைக்கண்டு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தமிழர்களின் கைகள் வெண்சாமரம் மட்டுமே வீசும் என்று எதிர்பார்க்கின்றன இந்த அரசுகள்?

தலித் மாணவியின் தற்கொலையில் உண்மை காரணம் தெரியும் முன்பே அவளது மரணத்தை திசை திருப்புகிறார்கள் என்கிறார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி. நம்ம ஊரில் வறட்சி, கடன் தொல்லையால் விவசாயிகள் கொத்துக் கொத்தாக மடிந்தபோதுகூட, குடும்பத் தகராறு, தவறான காதல் தொடர்புகளால்தான் தற்கொலை செய்து கொண்டதாக தமிழக அமைச்சர்களே சொல்லும்போது, கிருஷ்ணசாமிகளை நாம் புறம் தள்¢ளிவிடுவோம். அவர் ஓர் ஊதுகுழல். அவ்வளவே.

தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 17000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக கூறுகிறது ஓர் ஆய்வு. ஆனால், அனிதாவின் தற்கொலை மட்டும் ஏன் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது? மனிதத்துடன் சிந்திப்பவர்கள் அனிதாக்களின் மரணங்களை அலட்சியப்படுத்தி விட முடியாது.

செங்கொடி மூட்டிய தீ சற்று ஓய்ந்திருந்தது. அந்த தணல் சாம்பலாகும் தருவாயில் ஜல்லிக்கட்டு வடிவத்தில் மெரீனா புரட்சி வெடித்தது. அதுவரை எவ்வளவு அடித்தாலும் தமிழர்கள் தாங்கிக்கொள்வார்கள் என்ற எதேச்சாதிகாரப் போக்கில் இருந்த அதிகார வர்க்கம் அன்று ஆடிப்போனது. பின்லேடன் பெயரில், போராளிகளை அடித்து விரட்டினர்.

இரவில் ஒளிரும் மெரீனா புரட்சி

இப்போது அனிதா தீ மூட்டியிருக்கிறாள். இந்த தீயின் வெப்பம் துளியும் தணிந்து விடக்கூடாது. நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான மிகச்சரியான தருணம் இது. காவிரி நீரில் இருந்து நீட் தேர்வு வரை அனைத்து உரிமைகளையும் மீட்க வேண்டும்.

வாக்களித்து விட்டோம் என்பதற்காக ஐந்து ஆண்டுகள் வரை பொறுத்தே ஆக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை. அரசியல் வணிகர்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் காலம் வந்துவிட்டது. இதற்காக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் சட்டமெல்லாம் கொண்டு வரத்தேவையில்லை. தமிழர்களின் கிளர்ச்சியே அவர்களை ஓட வைத்துவிடும்.

தமிழர்கள் மீண்டும் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த ஆயத்தமாக வேண்டும். மாணவர்கள் பள்ளி, கல்லூரி வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும்; நடுவண், மாநில அரசு ஊழியர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டும்; நீதிமன்றங்கள் திறந்திருக்கும்; வழக்கறிஞர்கள் செல்லக்கூடாது; திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நடுவண் அரசு வழங்கிய பட்டங்கள், விருதுகளை துறக்க வேண்டும்; நல்லாசிரியர் விருது உள்பட. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் முதல் அனைத்துத் தேர்தல்களையும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.

இத்தகைய போராட்டம் நமக்கு புதிதல்ல. சுதந்திர போராட்டக் காலத்தில் காலனிய பிரிட்டிஷ் அரசை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட யுக்திதான் இது. அப்போதும் இளைஞர்களாலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற்றது. இப்போது அதற்கான தேவையும், சூழலும் ஏற்பட்டுள்ளதை தமிழர்கள் உணர வேண்டும்.

துயில் களை…சினம் கொள்...

பொறுத்தது போதும்… புறப்படு தமிழா…

– புதிய அகராதி.
தொடர்புக்கு: selaya80@gmail.com